PUBLISHED ON : ஜூன் 16, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: தி.மு.க., -
காங்., கூட்டணி இதுவரை தேர்தல்கூட்டணியாக தான் பார்க்கப்பட்டது. தற்போது
செல்வப்பெருந்தகை, இது கொள்கை கூட்டணி என்கிறார். மொழி, கல்வி, நிதி
பகிர்வு, மாநிலங்களுக்கான அதிகார பகிர்வு, நதி நீர் பகிர்வு, நதி நீர்
இணைப்பு, பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவு, ஜி.எஸ்டி.,
நீட் போன்றவற்றில் இரு கட்சிகளும் ஒத்து போகிறதா என்பதை இரண்டு கட்சி
தலைவர்களும் விளக்க வேண்டும்.
அடடா, இவர் தப்பா புரிஞ்சிக்கிட்டாரே... அவர் சொன்ன கொள்கை என்பது, பா.ஜ.,வை எதிர்ப்பது மட்டும் தான்!
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், பஸ்களை இயக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அரசு பஸ்களில் குறைகள் சரிசெய்யப்படாததால் தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது. பஸ்களில் உள்ள குறைகளை நீக்க வேண்டும். பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்களை இயக்க வேண்டும்.
'சாகச பயணம்' தான் போகணும் என்ற கட்டாயம் வரும் போது, மகளிர் இலவச பயணத்தை தவிர்த்திடுவாங்கன்னு அரசு நினைக்குதோ என்னமோ?
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச்செயலர் சவுந்தர்ராஜன் அறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களையும், தேர்தல் அதிகாரிகள் கட்டாய சோதனைக்கு உட்படுத்துவது நியாயமற்றது. மாநில தேர்தல் ஆணையர் சோதனை நடவடிக்கைகளை கைவிட உத்தரவிட வேண்டும்.
இடைத்தேர்தல் என்பதால் கண்டுக்காம விடலாம்... ஆனா, கணக்கு காட்டணுமேன்னு வியாபாரிகள் பணத்தை தான் பிடுங்குவாங்க!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'ஜி.எஸ்.டி., வந்தது முதல் நிதி பங்கீடு செய்வதில் மத்திய அரசு தொடர்ந்து ஓரவஞ்சனையாக செயல்படுகிறது' என, அமைச்சர் வேலு கூறியுள்ளார். தமிழகத்தை விட குஜராத் மாநிலம், கடந்த மாதம் அதிக ஜி.எஸ்.டி., வசூல் செய்த போதிலும், குஜராத்தை விட தமிழகத்திற்கு அதிக நிதி பங்கீட்டை மத்திய அரசு அளித்துள்ளது. பா.ஜ., ஆளும் குஜராத்திற்கு மத்திய அரசு ஓர வஞ்சனை செய்கிறது என சொல்வாரா?
எது, எப்படியோ... தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்தால், தாமரையை இங்கு மலர வைக்க இன்னும் வெகுகாலம் பிடிக்கும்!