PUBLISHED ON : ஜூன் 17, 2024 12:00 AM

தமிழக காங்., சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார் பேட்டி:
பெண்களுக்கு
தனி மதிப்பு வழங்கும் கட்சி, காங்கிரஸ். ஆனால், சந்திரபாபு நாயுடு
பதவியேற்பு விழா மேடையில், முன்னாள் கவர்னர் தமிழிசையை, பா.ஜ.,வின், மத்திய
உள்துறை அமைச்சர் அமித் ஷா, விரலை நீட்டி பேசி, தமிழ் பெண்ணை அவமதித்தது
கண்டிக்கத்தக்கது. 'பெண்களை பாதுகாக்கும் கட்சி' என்று தங்களை கூறிக்
கொள்ளும், பா.ஜ., இப்படி செய்வது நியாயமா?
அது, அவங்க உட்கட்சி விவகாரம்... இவர் ஏன் மூக்கை நுழைக்கிறார்... தமிழிசை, காங்., மூத்த தலைவர் குமரி அனந்தன் மகள் என்பதாலா?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
ரேஷன் கடைகளில், கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும், பாமாயில், 25 ரூபாய்க்கும் வழங்கப்பட்டது. வெளியில் துவரம் பருப்பு, 180 ரூபாய்க்கும், பாமாயில், 125 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், ரேஷனில் மலிவு விலையில் கிடைத்தது, ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால், மூன்றாவது மாதமாக, ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை. தமிழக அரசு காட்டும் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
'பருப்பு, பாமாயில் வழங்காமலேயே தேர்தலில், 40க்கு40 ஜெயிச்சிட்டோமே'ன்னு நினைச்சு, ஆளுங்கட்சி வேற என்னென்ன பொருட்களை நிறுத்துமோ?
ம.தி.மு.க., துணை பொதுச் செயலர் மல்லை சத்யா அறிக்கை:
லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சியினர் யாருக்கும் எங்கள் ஓட்டு இல்லை என, 'நோட்டா'வை தேர்வு செய்து, ஓட்டு போட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில், 4.67 லட்சம். தேசிய அளவில், 63.47 லட்சம். இது, ஜனநாயகத்தின் மீதான எச்சரிக்கை மணி.
உண்மை தான்... பச்சோந்தி மாதிரி சூழலுக்கு ஏற்ப மாறும் அரசியல்வாதிகள் அதிகரித்தால், நோட்டாவுக்கு ஓட்டும் அதிகரிக்க தான் செய்யும்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலா அறிக்கை:
கேரளா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும். தி.மு.க.,வினர் மக்களை பற்றி சிந்திக்காமல், தங்கள் கட்சியை வளர்ப்பது, அடுத்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என, வெறும் அரசியல் செய்வதை விட்டு, பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
அதே மாதிரி, ஜெயலலிதா இருந்த வரை கம்பீரமாக இருந்த, அ.தி.மு.க.,வை அழியாமல் காக்கும் பொறுப்பு இவருக்கும் இருக்கே!