PUBLISHED ON : ஜூலை 25, 2024 12:00 AM

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்டில், 21 புதிய பஸ்கள் இயக்கத்தை, தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சி காலை, 10:00 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அமைச்சர், 15 நிமிடங்களுக்கு முன் அங்கு வந்தார். தொழிற்சங்க பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே விழா நடக்கும் இடத்திற்கு வந்தனர்.
ஆனால், கோவை கலெக்டர் கிராந்திகுமார் தாமதமாக வந்தார். அவர் வரும் வரை, பஸ் ஸ்டாண்டில் உள்ள கண்ணாடி அறையில் அமைச்சர் காத்திருந்தார். கலெக்டர் வந்ததும், நிகழ்ச்சி துவங்கியது.
இதை பார்த்த பொதுஜனத்தில் ஒருவர், 'வழக்கமா அமைச்சர்களுக்காக நம்மள மாதிரி அப்பாவி மக்கள் மணிக்கணக்கா காத்திருப்போம்... இங்க கலெக்டருக்காக, அமைச்சர் காத்திருப்பது புதுசா இருக்கே...' என, முணுமுணுக்க, மற்றொருவர், 'இதுக்காகவே, இவரை மாற்றாம இருந்தா சரி தான்' என்றபடியே, நடந்தார்.