PUBLISHED ON : ஜூலை 26, 2024 12:00 AM

சென்னையில், அவ்வப்போது பெய்த மழை காரணமாக, நகரில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இது குறித்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிடம், 'கொசு தொல்லை அதிகரித்துள்ளது; முறையாக பணியாளர்கள் கொசு மருந்து அடிப்பதில்லை' என, நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிரியா, 'அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. என் வீட்டில் இன்று காலை கூட கொசு மருந்து அடிக்கப்பட்டது' என்றார். உடனே, 'உங்களை போல் வி.ஐ.பி., வீட்டில் கொசு மருந்து அடிக்கின்றனர்; மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் அடிப்பதில்லை' என, நிருபர்கள் கூறியதும், சுதாரித்த மேயர், 'எந்த பகுதியில் மருந்து அடிக்கவில்லை என, புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறி நகர்ந்தார்.
மூத்த நிருபர் ஒருவர், 'அது சரி... தன் வீட்டு சுகாதாரம் தான் சென்னையின் சுகாதாரம்னு இவங்க நினைக்கிறாங்க போல... எல்லா பகுதிக்கும் ஆய்வுக்கு போனா தானே நகரின் நிலை தெரியும்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.