PUBLISHED ON : ஜூலை 27, 2024 12:00 AM

காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த தமிழ்நாடு நாள் விழாவில், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்றார். அவர் பேசுகையில், 'மொழி வாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பின், சென்னை மாகாணம் என்ற பெயரை, தமிழ்நாடு என மாற்றி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்த நாள் ஜூலை 18. இந்த நாள் வெளியில் தெரியாமல் இருப்பதை அறிந்த முதல்வர் உத்தரவிட்டதால், தமிழ் வளர்ச்சித் துறையும், செய்தி துறையும் இணைந்து மூன்றாவது ஆண்டாக விழா கொண்டாடி வருகிறோம்' என்றார்.
இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், '1956 நவ., 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த நாள் தான் மாநிலம் பிறந்த நாள். அன்றைக்கு தி.மு.க., ஆட்சியில் இல்லாததால், மாநிலத்திற்கு பெயர் சூட்ட தீர்மானம் போட்ட நாளை விழாவா கொண்டாடுறாங்க... எல்லாம் அவங்க வசதி தான்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.