PUBLISHED ON : ஜூலை 28, 2024 12:00 AM

கைதிகள் போதை வஸ்துகள் பயன்படுத்துவதாக வந்த புகாரை தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் போலீசாரும், சிறை காவலர்களும் இணைந்து இரண்டு மணி நேரம் சல்லடை போட்டு தேடினர்.
அப்போது, பவுடராக இருந்த பாக்கெட் ஒன்றை கண்டெடுத்தனர். 'கஞ்சாவாக இருக்குமோ' என நுகர்ந்தும், நாக்கில் வைத்தும் சுவைத்து பார்த்தவர்கள், கசப்பாக இருந்ததாக தெரிவித்தனர். அப்போது, 'இது நெருஞ்சி குடிநீர். சில கைதிகள் சிறுநீர் பிரச்னைக்காக பயன்படுத்துகின்றனர்' என, சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில நிமிடங்களில் வெள்ளை நிற பவுடரை கண்டெடுத்தனர். 'போதை பவுடர் மாதிரி தெரியுது' என போலீசாரின் கண்கள் விரிய, நாக்கில் தொட்டு சுவைத்தனர். எந்த சுவையும் இல்லாத நிலையில், 'சார்... இது சாக்பீஸ் துாள். சில கைதிகள் சுண்ணாம்புக்கு பதில் இதை தங்கள் உடல் பிரச்னைக்கு பயன்படுத்துவர்' என, சிறை அதிகாரிகள் கூற, 'நம்ம ராஜதந்திரங்கள் எல்லாம் வீணாக போய்விட்டதே' என, போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.