PUBLISHED ON : ஜூலை 24, 2024 12:00 AM

மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் அருகே தனிச்சியத்தில் அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்டத்தை, தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். அப்போது அமைச்சருடன், மதுரை கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து சர்க்கரை பொங்கல், கிச்சடி, சாம்பாரை ருசித்தனர்.
ஆசிரியர்களிடம், 'உணவு நன்றாக உள்ளது. நாங்கள் வருகிறோம் என்பதால் இப்படி தயார் செய்யப்பட்டுள்ளதா. இந்த சுவை தொடருமா?' என, அமைச்சர் கேட்டார். அதற்கு ஆசிரியர்கள், 'எப்போதும் இதேபோல் தான் இருக்கும். மதிய உணவும் சுவையாக இருக்கும். மாணவர்கள் விரும்பி சாப்பிடுவர்' என்றனர்.
மூத்த நிருபர் ஒருவர், 'இதெல்லாம் இன்று ஒருநாள் கூத்து... அமைச்சரும், கலெக்டரும் சில வாரங்கள் கழித்து சொல்லாமல், கொள்ளாமல் திடீர் விசிட் அடித்து, உணவை சாப்பிட்டு பார்த்தால் உண்மை தெரியும்...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.