PUBLISHED ON : ஜூன் 06, 2024 12:00 AM

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, டாக்டர்கள், செவிலியர்களிடம், 'நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தார்.
துறை இயக்குனர் வருகையால், டாக்டர்கள், செவிலியர்கள் பலரும் நோயாளிகளிடம் அன்பாக நடந்து கொண்ட விதத்தை பார்த்து நோயாளிகள் பலரும் ஆச்சரியப்பட்டனர். அப்போது நோயாளி ஒருவர், 'இது கனவா, நனவா... அரசு மருத்துவமனையில் இவ்வளவு அன்பாக பேசுகின்றனரே...' என, அருகில் இருந்த நோயாளிடம் கேட்டார்.
அதற்கு அவரோ, 'அட நீங்க வேற... முதல்வர், பிரதமர் ஏதாவது ஒரு ஊருக்கு வந்தால் புதுசா ரோடு போடுவாங்களே... அந்த மாதிரி தான் இதுவும்... ஒருநாள் கூத்து தான்...' என, உண்மையை போட்டு உடைக்க, மற்ற நோயாளிகள், 'உச்' கொட்டியவாறு அமைதியாகினர்.