PUBLISHED ON : ஜூன் 05, 2024 12:00 AM

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி, மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள டவரில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு என்ற பெயரில், இப்படி விபரீத போராட்டங்களில் ஈடுபடுவது எப்போதும் வாடிக்கை.
உச்ச நீதிமன்றம் கூட, 'விளம்பரத்துக்காக இப்படி செய்யாதீர்கள்' என்று இந்த சங்கத்தை கண்டித்துள்ளது. இருந்தும் தொடர்ந்து விபரீத போராட்டங்களை இச்சங்கம் முன்னெடுத்து வருகிறது.
கோவில் அருகே நடந்த போராட்டத்தை பார்த்த பக்தர் ஒருவர், 'பொழுதுக்கும் போராடிட்டே இருக்கும் இவர்கள், விவசாய பணிகளை எப்போது தான் செய்வர்... உண்மையில் இவர்களுக்கு நிலம் இருக்கிறதா, விவசாயிகள் தானா என்று பார்க்கணும்...' என, உடன் வந்தவருடன் முணுமுணுத்தவாறு நடந்தார்.