PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM

சென்னை மாநகராட்சியின், திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும், ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், வெளியே வந்து, நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது கூறுகையில், 'தி.மு.க., பெண் கவுன்சிலர்களை பேச விடாமல், அவரது உறவினர்கள் தான் குறுக்கிட்டு பேசுகின்றனர். மன்றத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானே பேச வேண்டும்; இது தவறான நடைமுறை' என, குற்றம்சாட்டினார்.
அதற்கு, நிருபர் ஒருவர், 'பல வார்டுகளில் பெண் கவுன்சிலர்களின் அலுவலக சீட்டில், அவர்களது கணவர்கள் தான் உட்கார்ந்து, அதிகாரிகளை விரட்டி வேலை வாங்குகின்றனர். இவரு என்னடான்னா, கூட்டத்தில் பேசியதற்கு போய் இப்படி கோபப்படுறாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.