PUBLISHED ON : ஆக 03, 2024 12:00 AM

ஆகஸ்ட் 3, 1984
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில், கே.பி.சேத்ரி -- சுசிலா தம்பதியின் மகனாக, 1984ல் இதே நாளில் பிறந்தவர் சுனில் சேத்ரி. இவரது தந்தை, இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியதால், இந்திய அணியிலும், இவரின் தாய் நேபாள அணியிலும் கால்பந்து விளையாடினர்.
இதனால், இவரும் கால்பந்து விளையாட்டில் ஆர்வமாகி, 'டில்லி சிட்டி கிளப்'பில் சேர்ந்தார். 2002ல், மோகன்பாகனில் நடந்த போட்டியில், 48 ஆட்டங்களில், 21 கோல்களை அடித்து புகழ் பெற்றார். டில்லியில் நடந்த சந்தோஷ் டிராபி போட்டியில், குஜராத்துக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்ததுடன், அந்த ஆட்டத்தில் ஆறு கோல்களை அடித்தார். பல்வேறு போட்டிகளில் கோல் மழை பொழிந்த இவர், 2007, 2009, 2012ல் நேரு கோப்பை, 2011, 2015, 2021, 2023ல் தெற்காசிய சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வெல்ல காரணமாக இருந்தார்.
சர்வதேச போட்டிகளில், கோல் மழை பொழிந்து, ரொனால்டோ, மெஸ்சிக்கு அடுத்த இடத்தில் உள்ள இவர், பல்வேறு நாடுகளுக்காகவும் விளையாடி வெற்றியை பரிசளித்துள்ளார். இவரது 40வது பிறந்த தினம் இன்று!