PUBLISHED ON : ஆக 02, 2024 12:00 AM

ஆகஸ்ட் 2, 1859
தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை என்ற ஊரில், முத்துசாமி பண்டிதர் - அன்னம்மை தம்பதியின் மகனாக, 1859ல் இதே நாளில் பிறந்தவர் ஆபிரகாம் பண்டிதர். திருமலாபுரம், திண்டுக்கல் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றினார்.
இவரது மனைவி தஞ்சாவூரில் ஆசிரியையாக இருந்ததால், இவரும் அங்கு சென்று தமிழாசிரியரானார். சித்த மருத்துவம் கற்று சஞ்சீவி மருந்துகளை தயாரித்து விற்றார். புகைப்பட கலையை கற்றதுடன், 'நெகட்டிவ்' களை கழுவ புதிய முறைகளை கண்டறிந்தார். லண்டன் கலைக்கழக உறுப்பினரானார்.
தஞ்சையில் லாலி அச்சகத்தை துவக்கி, நுால்களை அச்சிட்டார். ஜோதிடம் கற்று, ஜோதிட விமர்சினி சபாவை நிறுவினார். இசையும் கற்ற இவர், தமிழ் இசையில் இருந்து கர்நாடக இசை உருவானதை நிரூபித்தார். அகில இந்திய இசை மாநாட்டை, தஞ்சையில் நடத்தினார். தன் 60வது வயதில், 1919ல் ஆகஸ்ட் 31ல் மறைந்தார்.
'கர்ணாம்ருத சாகரம்' எழுதி, பழந்தமிழர்களின் இசையறிவை உலகறிய செய்த ஆய்வாளர் பிறந்த தினம் இன்று!