மூத்த குடிமக்களின் குரல் கேட்குமா?
மூத்த குடிமக்களின் குரல் கேட்குமா?
மூத்த குடிமக்களின் குரல் கேட்குமா?
PUBLISHED ON : செப் 12, 2025 12:00 AM

பா.பாலசுப்ரமணியன், புதுச்சேரியில் இருந்து எழுதுகிறார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள, 50 சதவீத இறக்குமதி வரிக்கு அஞ்சாமல், நம் சொந்த காலிலேயே நிற்க வேண்டும் எனும் கோட்பாட்டின் அடிப்படையில், 'இந்தியர்கள் அனைவரும் உள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களையே வாங்க வேண்டும்' என்று கூறியுள்ளார், பிரதமர் மோடி.
இதற்கு வசதியாக, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, ஜி.எஸ்.டி., வரி அடுக்கை நான்கிலிருந்து இரண்டாக குறைத்து, பொருட்களின் விலைகள் குறைய வழி ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து முறையான சட்டம் விரைவில் வரும் என்றும், அது, தீபாவளிக்கு மக்களுக்கு இரண்டாவது போனஸ் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி சலுகை தான், அவர் குறிப்பிட்டுள்ள முதல் போனஸ்!
ஆக, இந்த இரண்டுமே மக்களுக்கு இன்ப அதிர்ச்சி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அதேசமயம், தனியார் துறையில் முதுகெலும்பு உடைய உழைத்து ஓய்வுபெற்றுள்ள கோடிக்கணக்கான மூத்த குடிமக்களுக்கு, நியாயமான பென்ஷனை, இ.பி.எப்., எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் வாயிலாக வழங்க பிரதமர் நடவடிக்கை எடுத்தால், அது மூன்றாவது போனசாக அமையுமே!
இதன் வாயிலாக அவர் பெயரும், புகழும் தொழிற்சங்க வரலாற்றில் வைரமாக ஜொலிக்குமே!
பிரதமர் காதுக்கு செல்லுமா... மூத்த குடிமக்களின் குரல்!
ஆசிரியர்கள் தேர்வுக்கு அஞ்சலாமா? பொன்.தாமோ, சென்னையில் இருந்து
அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'ஆசிரியர் பணியில் சேர விரும்புவோரும், பதவி
உயர்வை விரும்பும் ஆசிரியர்களும் கட்டாயம், 'டெட்' தேர்வில் தேர்ச்சி
பெற்று, முழு தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் தொடர முடியாது'
என்று உத்தரவு பிறப்பித்துள்ளது, உச்ச நீதிமன்றம்.
இதையடுத்து, ஆசிரியர்களிடையே பதற்றம், பயம் தொற்றிக் கொண்டு விட்டது!
தேர்வு என்றவுடன் எதற்கு இவ்வளவு பதற்றம்?
தாங்கள் கற்பிக்கும் பாடத்தில் இருந்து தானே தேர்வெழுத போகின்றனர்? அப்படி இருக்கும்போது, எதற்கு அச்சப்பட வேண்டும்?
ஆசிரியர்களே தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டால், மாணவர்களை எப்படி வழிநடத்த முடியும்?
'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்கிறது நாலடியார். அதனால், படிப்பதற்கும், தேர்வு எழுதுவதற்கும் வயதை ஒரு காரணமாக கூற முடியாது.
ஆசிரியர்களை பொறுத்தவரை, கற்றல் என்பது வாழ்வின் தினசரி கடமைகளில் ஒன்றாக
இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், அந்த ஆசிரியரால் அறிவில் சிறந்த
மாணவனை உருவாக்க முடியும்.
ஆனால், இன்று ஆசிரியர் பணியில்
சேர்வதற்காக மட்டுமே போட்டி போட்டுப் படிக்கின்றனரே தவிர, பணியில் சேர்ந்த
பின், படிக்கும் பழக்கம் இருப்பதில்லை. ஏன்... செய்தித்தாள் வாசிக்கும்
பழக்கம் கூட பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இல்லை.
பாடப்
புத்தகங்களில் அச்சிடப்பட்ட தகவல்களை வாசித்து, விளக்கி, அதில் தேர்வு
வைப்பது மட்டும் ஆசிரியர் பணி அல்ல; மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு அவர்கள்
தகுதியானவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில்,
ஆசிரியர்களிடம் தேர்வு குறித்த அச்சம் எழ வாய்ப்பில்லை.
எனவே, ஆசிரியர்கள் தகுதித் தேர்வை, தங்கள் அறிவுத் திறன் மேம் பாட்டுக்கான ஒரு களமாக நினைத்து, அதை எதிர்கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால், ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க அரசு முன்வர வேண்டும்.
ஆசிரியர்கள், தங்கள் துறை சார்ந்த அறிவை மேம்படுத்திக் கொள்ளவும்,
தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளவும், ஆண்டுக்கு ஒருமுறை
திறனறித் தேர்வை அரசு நடத்த வேண்டும்.
கற்பித்தலுக்கு தேவை யான அடிப்படை மதிப்பெண் எடுக்க இயலாத ஆசிரியர்களை, வேறு துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
அப்போதுதான் கற்பித்தலில் தனியார் பள்ளியை மிஞ்சக்கூடிய வகையில் அரசு பள்ளிகள் செயல்பட முடியும்!
தற்சார்பு பொருளாதாரமே சிறந்தது! த.யாபேத்தாசன், பேய்க்குளம்,
துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: இந்தியாவில் இருந்து
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா, 50 சதவீதம் வரி
விதித்துள்ளது. இரு நாடுகளின் வர்த்தக உறவில் அமெரிக்காவுக்கு பற்றாக்குறை
உள்ளது. அதை சரி செய்ய துடிக்கிறார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.
அதாவது, அமெரிக்காவுக்கு நம் நாடு அதிகமாக ஏற்றுமதி செய்கிறது; ஆனால்,
அமெரிக்காவிடமிருந்து குறைவாக இறக்குமதி செய்கிறது. அதனால், அமெரிக்க
பொருளாதாரத்தை சரிசெய்ய, பால் பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட தானியங்களுக்கு
இறக்குமதி செய்ய அந்நாடு துடிக்கிறது.
இந்த வர்த்தகத்திற்கு உடன்படாததால், இந்தியா மீது அமெரிக்கா கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.
மொத்தத்தில் அமெரிக்க பொருளாதாரம் தடுமாறுகிறது என்பதும், தம் நாட்டு
மக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற டிரம்பின்
சிந்தனையும் புலப்படுகிறது.
இந்தியா மிகவும் சகிப்புத்தன்மை
நிறைந்த நாடு. அதனால் தான் டிரம்ப் கடுமையாக நடந்து கொள்வதுடன், மொட்டை
தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல், ரஷ்யாவிடமிருந்து
இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் தான், ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்கிறது
என்று கூறுகிறார்.
இதற்கு நம் வெளியுறவு துறை அமைச்சர்
ஜெய்சங்கர், 'ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்குவதை காட்டிலும் அமெரிக்கா
அதிகமாக வாங்குகிறது' என்று பதிலடி கொடுத்து உள்ளார்.
நம் நாடு
இதை பாடமாக எடுத்துக் கொண்டால் நல்லது. ஏனெனில், 35 ஆண்டுகளாக உலக மயம்,
சுதந்திர வாணிபம் என்ற போர்வையில் உலக நாடுகள் இணைக்கப்பட்டிருந்தாலும்,
ஒவ்வொரு நாடும், தன் நலன் மீது தான் அதிக கவனம் செலுத்தும்.
அதாவது ஏற்றுமதி, இறக்குமதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காமல், தற்சார்பு வாயிலாக தன்னிறைவு எட்ட முயல வேண்டும்.
ஏனெனில், இந்தியா மிகப்பெரிய சந்தையாகும். இச்சந்தையை கைப்பற்ற தான்
பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா போன்ற நாடுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன.
நம் நாட்டின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் நம் கைகளில் தான் உள்ளது.
மாநிலங்களுக்கு இடையில் காணப்படும் தடைகள், மனமாச்சரியங்களை மறந்து,
'அனைவரும் இந்தியர்' என்ற உணர்வுடன் எழுந்து நின்றால், அனைத்தும்
சாத்தியமே!