Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

PUBLISHED ON : செப் 11, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
வேடிக்கை!

பன்முகன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், கர்நாடக சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், 'நமஸ்தே ஸதா வத்சலே மாத்ருபூமி' என்ற வணக்கப் பாடலை பாடினார், அம்மாநில துணை முதல்வர் சிவகுமார்.

இதற்கு, ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் மேலிடம் கொடுத்த அழுத்தத்தால், சட்டசபையில் இப்பாடலை பாடியத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார், சிவகுமார்.

'நமஸ்தே ஸதா வத்சலே மாத்ருபூமி' என்றால், 'என்றென்றும் நேசிக்கும் தாய்நாடே உனக்கு வணக்கம்' என்று பொருள்!

ஒரு நாட்டின் குடிமகன், தன் தாய்நாட்டை நேசிப்பதற்கும், வணக்கம் செலுத்துவதற்கும் மன்னிப்பு கேட்கும் அவலம், உலகில் எந்த நாட்டிலும் நடக்காது; இங்கு தான் நடக்கும்!

அதிலும், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி என்று சொல்லிக் கொள்ளும் காங்., அந்தக் காரியத்தை செய்துள்ளது, வெட்கக்கேடு!

சுதந்திர போராட்டத்தின் போதும், அதற்கு பின் ஏற்பட்ட கலவரங்களை சமாளிப்பதிலும் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு குறித்து, மறைந்த முன்னாள் பிரதமர் நேரு பாராட்டியதை இன்று சவுகரியமாக மறந்து விட்டனர் காங்கிரசார்!

ஆர்.எஸ்.எஸ்.,சின் உயிர்நாடி தேசபக்தி மட்டும்தான்; அவர்கள் எந்த இடத்திலும் மற்ற மதங்கள் வேண்டாம் என்றோ அல்லது அவர்கள் வழிபாட்டு முறைகளை குறைசொல்லியோ பேசியதில்லை.

இந்தியாவில் இருக்கும் அனைத்து மதத்தினரும், 'தாய்நாடு' என்ற ஒரே மதத்தை பின்பற்ற வேண்டும். மாற்று மதத்தினருக்கும் தங்கள் விசுவாசம் தாய்நாட்டின் மீது இருக்க வேண்டுமே தவிர, எங்கேயோ இருக்கும் எதிரி நாட்டின் மீது இருக்கக் கூடாது என்பதுதான், அவர்களது ஒரே கொள்கை!

கிட்டத்தட்ட, 60 லட்சம் உறுப்பினர்களை கொண்ட இந்த இயக்கத்தில், பேரிடர் கால பயிற்சி பெற்ற, 10 லட்சம் பேர் கொண்ட ஓர் இளைஞர் படை, தேசத்திற்காகவும், பேரிடர் காலங்களிலும் பணிபுரிய எப்போதும் தயார் நிலையில் உள்ளது; 1 லட்சம் பேர் திருமணம் செய்யாமல், நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர்.

சுதந்திர போராட்டத்தின் போதும், 1962 சீனா போர் மற்றும் 1971 பாகிஸ்தான் போரின் போதும், ஆர்.எஸ்.எஸ்.,சின் பங்களிப்பு குறித்து சரித்திரத்தை கொஞ்சம் புரட்டினாலே அறிந்து கொள்ளலாம்!

மாநாடு, கூட்டங்கள் என்ற பெயரில் திராவிட இயக்கங்கள், 200 ரூபாயும், பிரியாணியும் கொடுத்து கூட்டம் சேர்த்து, கொள்கையே இல்லாமல் கூத்து நடத்தும் போது, ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படாமல் தேசபக்தி மற்றும் ராணுவ ஒழுக்கத்துடன் நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ்.,சை, 'பிளவுவாத சக்தி' என்று, பிரிவினைவாத அரசியல்வாதிகள் பேசுவது வேடிக்கை!



தமிழனின் முத்திரை தொடரட்டும்! அ.குணசேகரன், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில் மிகப்பெரிய பதவிகளில் முதன்மையானது, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகள்.

பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான் இப்பதவியில் இருந்துள்ளனர். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

அதேநேரம், ஜனாதிபதி பதவியில் அமர்ந்தோரில், அப்துல் கலாம் போன்று மக்கள் அன்பைப் பெற்றவர்கள் எவரும் இல்லை.

வேறு எந்தவொரு ஜனாதிபதியும் செய்யாத சாதனையாக, அவரது பதவி காலத்தில் பல லட்சம் மாணவர்களை சந்தித்து, தேசபற்றையும், ஒழுக்கத்துடன் கூடிய கல்வியின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேகாலயாவில் ஒரு கல்லுாரி நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருக்கையில் மேடையிலேயே மயங்கி விழுந்து, இறைவனடி சேர்ந்த போது, ஒட்டுமொத்த தேசமும் அவருக்காக கண்ணீரில் நனைந்தது.

பதவிக்காலம் முடிந்து, ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறும் போது, தன் உடைகள் சிலவற்றையும், சில நுால் களை மட்டுமே எடுத்துக் கொண்டு வெளி யேறிய அந்த நேர்மையாளர், ஒரு தமிழனாக, தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்தவர்.

தற்போது, தமிழகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அப்துல் கலாம் எப்படி நாடு முழுதும் சென்று பள்ளி - கல்லுாரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மாணவர்களுக்கு நல்லொழுக்கம் மற்றும் தேசப்பற்றை விதைத்தாரோ, அப்படி ராதாகிருஷ்ணனும் நாட்டு மக்களுக்கு சேவை செய்து, தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்!

இந்திய அரசியலில் தமிழனின் முத்திரை தொடரட்டும்!



நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ளுமா? பூ.பாலசங்கர், திருநெல்வேலியில் இருந்து அனுப்பிய இ - மெயில் கடிதம்: கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், அம்மாநில உயர் நீதிமன்றத்தில், ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'கோழிக்கோட்டில் உள்ள தாலி கோவில், அட்டிங்காலில் உள்ள ஸ்ரீ இந்திலயப்பன் கோவில் மற்றும் கொல்லம் கடக்கால் தேவி கோவில் என இம்மூன்று கோவில்களும் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இது, கோவில்களுக்கு வரும் பக்தர்களையும், அவர்களது மத உணர்வுகளையும் புண்படுத்துகிறது' என குறிப்பிட்டிருந்தார்.

'மத நிறுவனங்கள் துஷ்பிரயோக தடுப்புச் சட்டம் - 1988ன்படி, கோவில்களை தவறாக பயன்படுத்துவது குற்றம் என்பதை, கோவில் நிர்வாகங்கள் நன்கு அறியும். எனவே, இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு, அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை' என, தேவசம் போர்டு சார்பில் வாதிடப்பட்டது.

ஆக, மத நிறுவனங்கள் துஷ்பிரயோக தடுப்புச் சட்டப்படி, கோவில் வளாகத்தை அரசியல் பரப்புரை இடமாக பயன்படுத்த அனுமதி இல்லை என்பதையும், கோவில் சொத்துகளை, வருமானத்தை அரசியல் கட்சியின் ஆதாயத்திற்கு பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றம் என்பதும் தெரியவருகிறது.

அதேநேரம், இந்த சட்டங்கள் ஹிந்து கோவில்களுக்கு மட்டும் தான் உள்ளதா, பிற மத வழிபாட்டு தலங்களுக்கு இல்லையா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

காரணம், சில மசூதி, சர்ச்சுகளிலும், வீடுகளில் நடக்கும் ஜெபக் கூட்டங்களிலும், ஆன்மிக சொற்பொழிவை விட, அரசியல் விமர்சனமும், மத வெறுப்பு பிரசாரங்களும் நடக்கின்றன. மத நிறுவன துஷ்பிரயோக தடுப்புச் சட்டம் இவர்களுக்கு பொருந்தாதா அல்லது இதிலும், சிறுபான்மையினருக்கு என்று, சட்டம் தனிக் கருணை காட்டுகிறதா?

எந்த மதமாக இருந்தாலும், வழிபாட்டு தலங்களில் கடவுள் வழிபாடு தான் இருக்க வேண்டுமே தவிர, அங்கே, அரசியலும், மத வெறுப்பு பிரசாரங்களும் தடுக்கப்பட்டு ஒழிக்கப்பட வேண்டும். மத்திய - மாநில அரசுகளும், நீதிமன்றங்களும் இதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us