Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ கேலி கூத்து!

கேலி கூத்து!

கேலி கூத்து!

கேலி கூத்து!

PUBLISHED ON : செப் 13, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஐந்து ஆண்டுக்கு மேல் சிறை தண்டனைக்குரிய குற்றங்களுக்காக, 30 நாட்கள் விசாரணை கைதியாக இருந்தாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் தங்கள் பதவியை இழப்பர் என்ற மசோதாவை மத்திய அரசு ஆக., 20ல் தாக்கல் செய்தது. இதை எதிர்த்து, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மசோதா நகலை கிழித்து எறிந்தனர். தீவிர குற்றங்களுக்காக விசாரணை கைதியாக உள்ளவர், சிறையில் இருந்தே அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது என்பதே இந்த மசோதாவின் உள்நோக்கம்.

தண்டனை கைதிகள் என்பதை, குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் என்று மாற்றுவது அரசியல் சாசன நோக்கத்துக்கு எதிரானது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பதவி விலகுவது தான் நியாயம்.

அதேநேரம், தாமதமான விசாரணை முடிவுகள், தீர்ப்புகள் நேர்மையான விசாரணை அதிகாரிகளுக்கு சோர்வூட்டு கிறது என்பதை மறுக்க முடியாது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால், வாக்காளர்களே அவர்களை நிராகரிப்பர் என்றாலும், கிரிமினல் வேலைகளும், அரசியலும் பின்னி பிணைந்துள்ளது என்பது தான் உண்மை.

எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது 5,000 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அரசியல் கட்சிகள் நேர்மை, துணிவுடன் செயல்பட்டால் தான், இந்த நிலை மாறும். நீதிமன்றங்களும், சட்டங்களின் நோக்கத்தை மனதில் வைத்து, தீர்ப்புகளை விரைவு படுத்த வேண்டும்.

அதேநேரம், ஆட்சியாளர்களில் கிரிமினல்கள் அதிகரிக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் காரணம், வாக்காளர்கள் தான்.

இலவசத்திற்கு மயங்கி, நோட்டுக்காக ஓட்டுக்களை விற்பனை செய்யும் இவர்களால் தான், இன்று ஜனநாயகம் கேலிக் கூத்தாக மாறியுள்ளது!



கேரவன் அரசியல் செல்லுபடியாகுமா? எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரை யில் நடந்த த.வெ.க., மாநாட்டில் நடிகர் விஜய், தமிழக முதல்வரை, 'அங்கிள்' என்று அழைத்ததுடன், 'பா.ஜ.,வோடு கூட்டணி வைக்க நாங்கள் என்ன ஊழல்வாதிகளா?' என, அ.தி.மு.க.,வையும் சீண்டியதால், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரின் கடுமையான விமர்ச னத்தை, விஜய் சந்தித்து வருகிறார்.

பிரபல சினிமா நட்சத்திர மாக, அனைவருக்கும் தெரிந்த முகமாக இருப்பது விஜயின் பலம் என்றால், ஓர் அரசியல் மேடையை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியாமல் இருப்பது, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி, தமிழகத்தில் நடிகர் விஜயகாந்த் போன்றோர் கட்சி ஆரம்பித்த சமயத்தில், அவர்களது மாநாட்டிற்கு இதை விட அதிக கூட்டம் வந்தது. ஆனாலும், சிரஞ்சீவி கட்சி நடத்த முடியாமல், தன் கட்சியை காங்கிரசில் இணைத்துவிட்டு, தற்போது இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்.

நடிகர் விஜயகாந்த் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து, கட்சியை வளர்த்தார். ஆனாலும் அவர் மறைவிற்கு பின், கட்சியில் பெரிதாக எழுச்சி இல்லை.

அதேநேரம், விஜயகாந்த் அரசியலில் வளர்ந்து வந்த போது, அவருக்கு எதிராக என்னென்ன யுக்திகளை திராவிட கட்சியினர் கையாண்டனரோ, அதே யுக்தியை விஜய்க்கும் செய்வர்.

இதுபோன்ற சூழலில், 2026 சட்டசபை தேர்தலில் விஜய் கணிசமான ஓட்டுகளை பெற வேண்டும் என்றால், களத்தில் இறங்கி கடுமையாக வேலை செய்ய வேண்டும்.

அதை விடுத்து கேரவனுக்குள் உட்கார்ந்து அரசியல் செய்தால், தமிழக அரசியலில் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது.

மாநாட்டிற்கு வந்த கூட்டம் ஓட்டுகளாக மாறும் என்று உறுதியாக சொல்ல இயலாது. அதேநேரம், ஆளுங்கட்சியின் மீது அதிருப்தி இருப்பதால், அந்த ஓட்டுகள் விஜய்க்கும், சீமானுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மொத்தத்தில் விஜய் குறைந்த பட்சம், 10 சதவீத ஓட்டுகள் வாங்கினால் தான், அவருக்கு அரசியல் எதிர்காலம் உண்டு. சொற்ப சதவீத ஓட்டு வாங்கினால் அவர், தன் த.வெ.க., கடையை இழுத்து மூட வேண்டியது தான்!

எனவே, விஜய் கேரவன் அரசியலை கைவிட்டு, மக்கள் அரசியல் செய்ய முன்வர வேண்டும்!



புகழ் போதை! பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., - ம.தி.மு.க., - த.வெ.க., போன்ற பல கட்சிகள் ஈ.வெ.ரா.,வை போற்றுகின்றன. 'இது பெரியார் மண், பெரியாரை போற்றாமல் தமிழகத்தில் எவரும் அரசியல் செய்ய முடியாது' என்றெல்லாம் முழங்குகின்றனர்.

அதேநேரம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈ.வெ.ரா.,வை கடுமையாக விமர்சித்ததுடன், 'இது பெரியார் மண் அல்ல, பெரியாரே எங்களுக்கு மண்தான்' என்றார்.

மேற்குறிப்பிட்ட கட்சிகள் சீமானுக்கு எதிராக பெரிதாக கிளர்ந்து எழவில்லை. கடமைக்கு சில கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள், நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வது என்று தங்களின் செயல்பாட்டை முடித்துக் கொண்டன.

அவர்களின் எதிர்ப்பை கண்டு அஞ்சாமல், ஈ.வெ.ரா., குறித்து, 'பொது விவாதத்திற்கு தயார்' என்று அறிவித்தார், சீமான்.

பொது விவாதம் நடத்தினால் எல்லா உண்மைகளும் வெளிவரும். அதன்பின், ஈ..வெ.ரா., பெயரை சொல்லி தம்மால் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, மற்ற கட்சியினர், அதை கண்டுகொள்ளவில்லை.

அவ்வளவு ஏன், முதல்வர் ஸ்டாலின் கூட ஈ.வெ.ரா.,வுக்கு ஆதரவாக சீமானை கண்டிக்கவும் இல்லை; பொது விவாதம் நடத்த முன்வரவும் இல்லை.

இப்படி சொந்த மண்ணில் ஈ.வெ.ரா.,வுக்காக குரல் கொடுக்காத முதல்வர், ஈ.வெ.ரா., யார் என்பதே தெரியாத அன்னிய மண் ணில், உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ரா., வின் படத்தை திறந்து வைத்துள்ளார்.

ஆனால், இந்த படத்திறப்பு நிகழ்ச்சிக்கும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பல்கலையில் உள்ள அரங்கத்தை வாடகைக்கு எடுத்துள்ள அயலக தி.மு.க.,வினர் நடத்தும் சாதாரண நிகழ்ச்சி என்ற உண்மையை மறைத்து, ஏதோ ஆக்ஸ்போர்டு பல்கலையே ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளை சிலாகித்து, படத்திறப்பு விழா நடத்துவது போல், 'பிலிம்' காட்டியுள்ளார், முதல்வர்.

இப்படித்தான், 2013-ல், கருணாநிதியின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணியை பாராட்டி ஆஸ்திரிய நாடு, 'கலைஞர் 90' என்ற பெயரில் அஞ்சல் தலை வெளியிட்டதாக தி.மு.க.,வினர் கூறி வந்தனர்.

அதன்பின் தான் தெரிந்தது, ஆஸ்திரியாவில், 3,000 ரூபாய் செலுத்தினால் எவருடைய அஞ்சல் தலையையும் வெளியிடலாம் என்ற விஷயம்!

கருணாநிதியின் அஞ்சல் தலையை பணம் செலுத்தி இவர்களே வெளியிட, அதை, நோபல் பரிசை பார்ப்பது போல் பார்த்து ரசித்தவர் தான் கருணாநிதி.

இப்படி, புகழ் எனும் போதைக்காக பொய்யைக் கூட உண்மையைப் போல் ஆராதிப்பவர் கருணாநிதி. அவ்வகையில், தானும் தந்தையின் அடித்தொட்டு நடப்பவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார் முதல்வர்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us