Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ சிந்தியுங்கள் மக்களே!

சிந்தியுங்கள் மக்களே!

சிந்தியுங்கள் மக்களே!

சிந்தியுங்கள் மக்களே!

PUBLISHED ON : ஜூன் 18, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
ஆர்.கந்தவேல், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட்' தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தான் தெரியும்; ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து கோப்பில் தான்...' என்று ஜம்பம் அடித்து, ஆட்சிக்கு வந்த கட்சி தி.மு.க.,

இந்நிலையில், இந்த ஆண்டு நாடு முழுதும், 9 லட்சத்து, 37,411 ஆண்களும், 12 லட்சத்து, 71,896 பெண்களும் நீட் தேர்வெழுதினர்.

தமிழகத்தில், ஒரு லட்சத்து, 35,715 பேர் தேர்வு எழுதியதில், 76,181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது, 'நீட் தேர்வை ரத்து செய்வோம்' என்று உருட்டிக் கொண்டிருந்த தி.மு.க.,வுக்கு கிடைத்த மிகப் பெரிய நெத்தியடி!

இதில், திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவன் அவனிஷ் பிரபாகர், நீட் தேர்வில், 608 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில், 922 வது இடத்தை பிடித்துள்ளார்.

இவர், முன்னாள் சபாநாயகரும், தற்போதைய திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலருமான ஆவுடையப்பனின் பேரன்; தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரனின் மகன்!

தி.மு.க.,வின் உருட்டுகளையும், பொய் வாக்குறுதிகளையும் நம்பி தமிழக மக்கள் தான் ஓட்டுப் போட்டு ஏமாந்து நிற்கின்றனரே தவிர, கழகத்தினர் நம்புவதில்லை.

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேரனும் கூட நீட் தேர்வை எழுதியுள்ளார். அவர் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது.

இப்படி தி.மு.க., தலைமை கூறும் வாக்குறுதிகளை கழக முன்னோடிகளும், கட்சி பிரமுகர்களும் கூட நம்பாத நிலையில், ஓட்டளிக்கும் மக்கள் நம்பி ஏமாந்து போகலாமா?

வரும் 2026 சட்டசபை தேர்தலில், உங்கள் சொந்த புத்தியை உபயோகித்து, உங்களுக்கும், உங்கள் வாரிசுகளுக்கும் எது நன்மையை தரும் என்று சீர்துாக்கிப் பார்த்து ஓட்டளியுங்கள்!



பக்கவாத்தியம் இசைக்கும் திருமாவளவன்!


பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆட்சி, அதிகாரம் இருக்கும் இடத்தில் நிச்சயம் ஊழலும் இருக்கும். எனவே, ஊழலை ஒரு காரணமாக கூறி, ஒரு ஆட்சியையோ, கட்சியையோ வீழ்த்த முடியாது...' என்று கூறியுள்ளார், வி.சி., தலைவர் திருமாவளவன்.

திராவிட மாடல் ஆட்சியை மனதில் வைத்து, இக்கருத்தை கூறியுள்ளார் என்பது புரிகிறது.

ஆனால், தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகள் காமராஜரின் ஆட்சி நடந்தது. அக்காலகட்டத்தில் இந்தியாவின் நிதி நிலைமை படுமோசமாக இருந்த போதிலும், கிடைத்த குறைந்த வருமானத்திலும் நேர்மையான, எளிமையான, தொலைநோக்கு சிந்தனையுடன் பொற்கால ஆட்சி நடத்தினார், காமராஜர்.

ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள், ஒன்பது முக்கிய அணைக்கட்டுகள், ஏகப்பட்ட தொழிற்சாலைகள், மின் நிலையங்கள் போன்றவை எல்லாம் அவருடைய ஆட்சி காலத்தில் தான் அமைக்கப்பட்டன.

இன்று தி.மு.க.,வினர் வாங்குவது போல், அன்று, ஒவ்வொரு திட்டத்திற்கும் கமிஷன் வாங்கியிருந்தால், காமராஜர் பெரிய கோடீஸ்வரராக இருந்திருப்பார்.

உதாரணமாக, தமிழகத்தில் 10 சர்க்கரை ஆலைகள் அமைப்பதற்காக இயந்திரங்கள் வாங்கியபோது, 10 சதவீதம் கமிஷன் கொடுப்பதாக கூறினர். அந்த கமிஷனை காமராஜர் வாங்கினார்; ஆனால், அப்பணத்தில் மேலும் ஒரு சர்க்கரை ஆலையை நிறுவினாரே தவிர, தனக்காக வைத்துக்கொள்ளவில்லை.

முதல்வர், எம்.பி., அகில இந்திய காங்கிரஸ்தலைவர் போன்ற பதவிகளை வகித்தும், இரண்டு பிரதமர்களையே தேர்ந்தெடுத்த அதிகாரம் பலம் மிக்க தலைவராக இருந்தார். அவர் நினைத்திருந்தால், பதவியை பயன்படுத்தி, விருதுநகர் மாவட்டத்தையே வளைத்து போட்டிருக்கலாம்.

ஆனால், அவர் இறக்கும் போது அவரிடம் இருந்தது வெறும், 200 ரூபாய் மட்டுமே!

'ஆண்டியின் கையில் திருவோடாவது இருக்கும்; உனக்கு அது கூட இல்லையே' என்று அவர் இறப்பின் போது, அவரது நேர்மையான வாழ்வை புகழ்ந்திருப்பார், கண்ணதாசன்.

நேர்மையாளர்கள் கையில் அரசு இருந்தால், ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதற்கு உதாரண புருஷராக வாழ்ந்து காட்டியவர் காமராஜர். அது தெரிந்திருந்தும், திருமாவளவன் ஊழலுக்கு பக்கவாத்தியம் இசைக்கிறார் என்றால், சகவாச தோஷமின்றி வேறு என்ன?



எதிர்காலத்திற்கு நல்லது அல்ல!


எஸ்.ராதிகா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே நடக்கும் தந்தை - மகன் யுத்தம் பா.ம.க.,விற்கு முடிவுரை எழுதாமல் நிற்காது போலிருக்கிறது!

அன்புமணிக்கு தலைமை பதவி கொடுத்த ராமதாஸ், ஏன் மீண்டும் தானே தலைவராக நினைக்கிறார்?

'மாப்பிள்ளை அவர் தான்; ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' என்ற திரைப்பட நகைச்சுவை வசனம் போல், 'தலைவர் அவர் தான்; ஆனால், நான் சொல்வது போல் தான் எல்லாம் நடக்க வேண்டும்' என்ற மனப்பான்மையின் வெளிப்பாடே ராமதாஸின் மோதலுக்கு காரணம்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தான். ஆனால், சோனியாவும், ராகுலும் சொல்லாமல் அங்கு ஒன்றும் நடக்காது. அதே போன்ற தலைமையை எதிர்பார்த்த ராமதாசுக்கு அன்புமணியின் செயல்பாடுகள் ஏமாற்றத்தை தந்துள்ளன.

பேரப்பிள்ளைகளுடன் வீட்டில் விளையாடி கொண்டு நேரத்தை போக்க சொன்ன அன்புமணி, அவருக்கு எதிரியாக தெரிகிறார்.

பெரியவர்கள், பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைத்த பின், அவர்கள் கேட்காமல் எந்தவித ஆலோசனையும் சொல்லக்கூடாது.

பா.ம.க.,வை பொறுத்தவரை கட்சி தொண்டர்களும், இளைஞர்களும் அன்புமணியை தலைவராக ஏற்று, அவர் வழி நடக்கத் துவங்கி விட்டனர்.

தொண்டர்களை பொறுத்தவரை என்றும் குலசாமி ராமதாஸ் தான் என்றாலும், உற்சவமூர்த்தியாக அன்புமணியை காண துவங்கி விட்டனர்.

ராமதாஸ் அழைத்த மாவட்ட செயலர் கூட்டத்திற்கு, 90 சதவீதம் பேர் கலந்து கொள்ளவில்லை என்பதிலிருந்து இதை அவர் உணர்ந்து கொண்டிருக்க வேணடும்.

எனவே, அன்புமணிக்கு வழிவிட்டு, கட்சியின் முன்னேற்றத்திற்கு ராமதாஸ் பக்கபலமாக இருக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் தேவையற்றதை பேசி அவருக்கும், கட்சியின் எதிர்காலத்திற்கும் ஊறு விளைவித்து விடக் கூடாது!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us