Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ கனவுகள் ஓய்வதில்லை!

கனவுகள் ஓய்வதில்லை!

கனவுகள் ஓய்வதில்லை!

கனவுகள் ஓய்வதில்லை!

PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., விடம் வி.சி., சிக்கி தவிக்கிறது என சொல்கின்றனர். தமிழக அரசியலின் பாதையை தீர்மானிப்பதும், இந்திய அரசியலை கூர்மைப்படுத்துவதே வி.சி., கட்சி தான். நாங்கள் முதல்வர் பதவிக்கே ஆசைப்படவில்லை. 'பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள்' என்று தான் அம்பேத்கர் வழிகாட்டி உள்ளார். அதுதான் அதிகாரமுள்ள பதவி. எங்களை நோக்கி அதிகாரம் வரும்...' என்று கூறியுள்ளார், திருமாவளவன்.

'உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போகப் போறேன்' என்று சொன்னானாம்!

கட்சி ஆரம்பித்து, 50 ஆண்டுகள் ஆகி விட்டன. தனித்து நின்று இதுவரை ஒரு தேர்தலை சந்தித்ததில்லை. ஆனால், தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தி நிறைந்தவர் இவராம்!

இந்திய அரசியலையே கூர்மைப்படுத்தும் திறன்படைத்த இவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போல், தனித்து நின்று தன் பலத்தை காட்ட வேண்டியது தானே?

அ.தி.மு.க., - தி.மு.க., என மாறி மாறி கூட்டணி வைத்ததால் தான், வி.சி., கட்சி யினரால் தேர்தலில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ., - எம்.பி., பதவிகளை பெற முடிகிறது!

இந்த லட்சணத்தில், இவரது கைகளுக்கு அதிகாரம் வருமாம்... எப்படி?

அதிகாரம் வரும் அளவுக்கு இவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்ன!

இதில், முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லையாம்... பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள் என்று அம்பேத்கர் வழிகாட்டியுள்ளதால், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்துள்ளாராம்.

முதலில் திராவிட கட்சிகளின் தயவு இல்லாமல், தனித்து நின்று கவுன்சிலர் தேர்தலில் வி.சி., வெற்றி பெற்று காட்டட்டும்; அப்புறம், நாற்காலி கனவுகள் காணலாம்!



யாருக்கு சொந்தம்?


டி.ஈஸ்வரன், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1985ல் திருச்சி உறையூர் திருத்தாந்தோனி சாலையில், 80,000 சதுர அடியில் வீட்டுடன் கூடிய ஓர் இடத்தை, 4 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினார், அப்போதை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.,

தற்போது, இந்த இடத்தை அவரது அண்ணன் சக்கரபாணியின் வாரிசுகளுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என, ஓய்வு பெற்ற சர்வேயர் சார்லஸ் என்பவர், திருச்சி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

இந்நிலம், அ.தி.மு.க., பொதுச்செயலர் என்ற பெயரிலும், பின், கோவிந்தசாமி என்பவர் பெயரிலும் மாற்றப்பட்டு, மீண்டும் பொதுச்செயலர் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

'எம்.ஜி.ஆர்., உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், அச்சொத்தை கட்சிக்கோ, தனி நபருக்கோ எப்படி பட்டா போட்டு கொடுத்தனர்?' என்று அந்த மனுவில் கேட்டுள்ளார், சார்லஸ்.

எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி என, மூன்று தலைமைகள் ஆட்சி செலுத்தியும், எம்.ஜி.ஆரின் திருச்சி வீடு, 38 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில்தான் உள்ளது.

கோவை கட்சி அலுவலகமான, 'இதய தெய்வம் மாளிகை' எப்படியோ, அதைபோன்று தான், கட்சி அலுவலகத்திற்காக, அப்போதைய வணிக வரித்துறை அமைச்சர் திருச்சி நல்லுசாமி வாயிலாக, அந்த இடத்தை எம்.ஜி.ஆர்., வாங்கினார்.

திருச்சி வந்தால் தங்குவதற்காக இந்த இடம் வாங்க நினைத்திருந்தால், தன் சொந்த பணத்தில், தன் வீட்டு முகவரியில் பத்திரப்பதிவு செய்திருப்பார், எம்.ஜி.ஆர்., ஆனால், திருச்சியில் கட்சி அலுவலகம் வேண்டும் என்பதற்காகத் தான் கட்சிப் பணத்தில், சென்னை அ.தி.மு.க., அலுவலக முகவரில் பத்திரப் பதிவு செய்தார்.

எம்.ஜி.ஆர்., தன் உயிலில், 'என்னுடைய ஒரே வாரிசு என் மனைவி ஜானகி மட்டும்தான். அவருக்கென்று அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இது முழுக்க முழுக்க கட்சி நிலமே தவிர, இதற்காக தனிநபர் உரிமை கோர முடியாது.

கடந்த 38 ஆண்டுகளாக, மூன்று மாதத்துக்கு ஒருமுறை எம்.ஜி.ஆரின் திருச்சி வீடு பரபரப்பு செய்தியாகி வருகிறது.

ஆனால், 'தலைமை இடத்தை பிடிக்க வேண்டும். இரட்டை இலையும், கொடியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இதன் வாயிலாக தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடித்து, முதலவராக வேண்டும்' என்பது தான் தலைமைக்கு வருவோரின் குறிக்கோளாக இருக்கிறதே தவிர, இந்த இடம் குறித்து பெரிதாக எவரும் அலட்டிக்கொள்வதில்லை.

எனவே, இவ்வீடு நிலத்துக்கு வரி கட்டிய சந்திரனுக்கு சொந்தமா, பட்டா வாங்கிய கோவிந்தசாமிக்கு சொந்தமா அல்லது 2021ல் மீண்டும் பட்டா பெற்ற அ.தி.மு.க.,பொதுச் செயலருக்கு சொந்தமா? எவருக்குத் தான் சொந்தம் என்பதை பழனிசாமி விளக்கவேண்டும் இனியும், மவுனம் சாதிக்கக் கூடாது!



துாண்டில் வீசும் தி.மு.க.,


எஸ்.ஆர்.ரத்தினம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் நடந்தது. இதில், வழக்கம்போல், உருக்கம், நகைச்சுவை, சவால்கள் என்று நவரசங்கள் அடங்கிய ஓர் உரையை வாசித்து முடித்தார், முதல்வர் ஸ்டாலின்.

பின், 'ஒரே குடையில் ஒன்றிணைவோம்' என்ற பெயரில் கட்சி உறுப்பினர் சேர்க்கையை அறிவித்தவர், உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க, பண வலையை மக்களை நோக்கி வீசியுள்ளார்.

தி.மு.க., உறுப்பினர் விபத்தில் மரணம் அடைந்தால், அவர்கள் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்பதுதான் ஆசையை துாண்டும் அந்த வலை!

வேட்டைக்காரர்கள் விலங்குகளை பிடிக்க கடைப்பிடிக்கும் யுக்தியை, 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் கட்சி, உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க கடைப்பிடிக்கிறது என்றால், அக்கட்சி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று தேவை?

ஆறு முறை ஆட்சியில்இருந்தும், 'தமிழகத்தின் பெரிய கட்சி' என்று மார்தட்டும் கட்சி, உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க எவ்வளவு கொடூரமாக சிந்திக்கிறது!

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளையும், தமிழகத்திற்கு செய்த சாதனைகள், எதிர்கால திட்டங்களை சொல்லி உறுப்பினர்களை சேர்த்தால், அது ஆரோக்கியமான அரசியல் கட்சி எனலாம். ஆனால், 'என் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தால், நீ இறந்த பின், உன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் தருவேன்' என்பது எத்தனை மனித தன்மையற்ற அரசியல்!

பணத்தைக் காட்டி ஆசையை துாண்டித்தான் உறுப்பினர்களை சேர்க்க முடியும் என்றால், அதற்கு பெயர் அரசியல் கட்சி அல்ல; வணிக நிறுவனம் என்பதை முதல்வர் உணர்ந்து கொள்ள வேண்டும்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us