Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ ஓட்டு போடும் முன் யோசியுங்கள்!

ஓட்டு போடும் முன் யோசியுங்கள்!

ஓட்டு போடும் முன் யோசியுங்கள்!

ஓட்டு போடும் முன் யோசியுங்கள்!

PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: -திருவள்ளூர் மாவட்டத்தில், சிறுவன் கடத்தல் விவகாரத்தில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தி வழக்கில், 'கட்டப்பஞ்சாயத்து செய்யவும், ஆள் கடத்தல் வேலை செய்வதற்குமா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தனர்?' என்று காட்டமாகக் கேட்டுள்ளார், உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன்.

இவர் மட்டுமல்ல... பல மக்கள் பிரதிநிதிகளும் தொகுதி பிரச்னையை கவனிக்காமல், பேட்டை ரவுடிகள் போல், கட்டப்பஞ்சாயத்து, கடத்தல் வேலை செய்வது, அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு மிரட்டல் விடுவது போன்ற குற்றச்செயல்களை செய்து வருகின்றனர்.

மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறை அதிகாரியோ, சிறுவனை கடத்த தன் போலீஸ் வாகனத்தையே கொடுத்து உதவியுள்ளார். இவரை பணியிடை நீக்கம் செய்ததற்கு பதில், பணி நீக்கமே செய்திருக்க வேண்டும்.

பணத்திற்காக குற்றத்திற்கு துணைபோகும் இவரைப் போன்ற அதிகாரிகளை பணியில் நீடிக்கச் செய்வதன் வாயிலாக, மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைத்து விடப் போகிறது?

அத்துடன், மக்களும் யோசிக்க வேண்டும்... ஜெகன்மூர்த்தி போன்று சுயலாபத்திற்காக கட்சி ஆரம்பித்து, கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கும் நபர்களுக்கு ஓட்டு போட்டு, சொந்தக்காசில் ஏன் சூனியம் வைத்துக் கொள்கிறீர்கள்?

இதுபோன்ற நபர்களுக்கு, 500 -- 1,000 ரூபாய்க்கு ஓட்டை விற்றுவிட்டு, இவர்களிடம் என்ன நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

இனியாவது ஓட்டு போடும் முன் சிந்தியுங்கள்!



உரிமைகளை இழக்க நேரிடும்!


வெ.சீனிவாசன், திருச்சியிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'ஆன்லைன்' வாயிலாக பெறப்படும் ஜாதி சான்றிதழ்களில், மதம் குறிப்பிடாமல், ஜாதி மட்டுமே குறிப்பிடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஒருவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவராக இருந்தால், அவரின் ஜாதி மற்றும் மதம் இரண்டுமே சான்றிதழ்களில் இடம் பெற வேண்டும் என்பது அரசு விதிமுறைகளில் ஒன்று.

பட்டியலின மக்கள் மதம் மாறினால் இடஒதுக்கீடு சலுகைகள் கிடையாது என்று நீதிமன்றங்கள் பலமுறை கூறிவிட்டன. இந்நிலையில், ஜாதி சான்றிதழ்களில் மதம் குறிப்பிடாமல், ஜாதி பெயரை மட்டும் குறிப்பிடுவது, ஹிந்து மதத்திலிருந்து பிற மதத்திற்கு மாறியவர்கள் இடஒதுக்கீடு பலனை அனுபவிக்க துணை போவதாகவும், மதமாற்றத்தை ஊக்குவிக்கும் செயலாகவே உள்ளது.

இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது; இடஒதுக்கீடு சலுகைகளை பெறுவோருக்கு இழைக்கப்படும் அநீதி!

தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள், மதம் மாறியவர்களுக்கு அவர்கள் முன்பு அனுபவித்து வந்த இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெற்றுத் தருவதாக கூறி வருகின்றனர்.

அதை, இப்படி குறுக்கு வழியில் பெற்றுததர முயல்கின்றனர் போலும்!

சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருந்து வருகிறோம் என்று அவர்கள் கூறுவதன் உள் அர்த்தம் இதுதானோ!

ஹிந்துக்கள் விழிப்படையாவிட்டால், அனைத்து உரிமைகளையும் இழக்க நேரிடும்!



எது நாகரிகம்?


எஸ்.ஸ்ரீதேவி, பாம்பனார், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடக மாநிலம், பெங்களூரில் கிரிக்கெட் வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ஏற்பட்ட நெரிசலால் பலர் உயிரிழந்தது அனைவரும் அறிந்த விஷயம். அது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, 'கோவில் திருவிழாக்கள் மற்றும் விளையாட்டை பார்க்க அதிக கூட்டம் செல்வது நாகரிகமான சமூகத்திற்கான அடையாளமாக என்னால் பார்க்க முடியவில்லை' என்று கூறி, ஹிந்துக்களை வம்புக்கு இழுத்துள்ளார், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.

கோவில்களில் கூட்டம் கூடுவதை அநாகரிகம் என்று கூறும் அமைச்சருக்கு, சர்ச் மற்றும் மசூதிகளில் கூட்டம் கூடுவதை அவ்வாறு கூற துணிவில்லாமல் போனது ஏனோ?

ஓட்டுகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சமா அல்லது அமைச்சர் பதவி பறிபோய்விடும் என்ற பகுத்தறிவா?

தி.மு.க., பொதுக்கூட்டங்களுக்கு குவாட்டர், கோழி பிரியாணி, பணம் கொடுத்து கூட்டம் கூட்டுவது நாகரிகம்; நம் பாரம்பரியத்தின் வெளிப்பாடான திருவிழாக்களுக்கு செல்வது அநாகரிகமா?

தமிழகத்தில் அண்ணாதுரை ஆட்சிக்காலம் வரை நடைமுறையில் இருந்த பூரண மதுவிலக்கை ரத்து செய்து, மதுக்கடைகளை திறந்து தமிழனை குடிக்க வைத்த கருணாநிதியின் செயல்தான், இவர்களது அகராதியில் நாகரிகமோ!

வீட்டில் நான்கு சுவர்களுக்குள் கடவுளை விழுந்து விழுந்து கும்பிடுவதும், வெளியே வந்து, பகுத்தறிவு வேடமிடுவதும் தானே தி.மு.க.,வினரின் நாகரிகம்!

அமைச்சரின் இத்தகைய பேச்சை முதல்வர் கண்டிக்கவும் இல்லை; கண்டுகொள்ளவும் இல்லை.

அதனால், 'அநாகரிக கூட்டம்' என்று மனோ தங்கராஜால் முத்திரை குத்தப்பட்டுள்ள ஹிந்துக்களின் ஓட்டு, தி.மு.க.,விற்கு இனி தேவை இல்லை என்று கூற, ஸ்டாலின் துணிவாரா?



ஊழல் பிரசாரத்திற்கு தயார்!


எஸ்.சிவ ஆனந்தன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்த உலகத்தில் ஊழலற்ற ஆட்சி என்று எங்குமே கிடையாது. ஆட்சி, அதிகாரம் இருக்கும் இடத்தில் நிச்சயம் ஊழலும் இருக்கும். எனவே, ஊழலை காரணமாகக் கூறி ஒரு ஆட்சியையோ, கட்சியையோ வீழ்த்த முடியாது. அது மிகவும் கடினம்... என்று கூறியுள்ளார், வி.சி., தலைவர் திருமாவளவன்.

கடந்த 1984, அக்., 31ல், தன் பாதுகாவலர்களா லேயே சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா, 45 ஆண்டுகளுக்கு முன்பே, 'ஊழல் உலகளாவியது' என்று பகிரங்கமாக அறிவித்து இருந்தார்.

அதைத்தான், திருமாவளவன் ஒருசில வார்த்தைகளை முன்னும் பின்னுமாக போட்டு, திராவிட மாடல் அரசை கிள்ளி விட்டுள்ளதோடு, 2026 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க.,வின் ஊழலை பட்டியலிட்டு, பைல் - 1, 2, 3 என்று பா.ஜ., வெளியிட்டாலும், ஊழல் விவகாரங்கள் பிசுபிசுத்துப் போகும் என்பதை சிதறு தேங்காய் உடைப்பது போல, அடித்து சொல்லியுள்ளார்.

பொதுவாக, தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளர்கள், 'உங்களுக்கு பணிபுரிய எங்களுக்கு ஓர் வாய்ப்பளியுங்கள்' என்று தான் பிரசாரம் செய்வர்.

எப்படியும் திருமாவளவன் தனித்து நின்று தேர்தலை சந்திக்கப் போவதில்லை. அதனால், வரும் சட்டசபை தேர்தலில், 'எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், அவர்களுடன் இணைந்து நாங்களும் ஊழல் செய்வோம், மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்போம்...' என்று உண்மையைச் சொல்லி, பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பாரோ?







      Our Apps Available On




      Dinamalar

      Follow us