/தினம் தினம்/இது உங்கள் இடம்/ முதலைக்கண்ணீர் வடிக்கும் பிரியங்கா! முதலைக்கண்ணீர் வடிக்கும் பிரியங்கா!
முதலைக்கண்ணீர் வடிக்கும் பிரியங்கா!
முதலைக்கண்ணீர் வடிக்கும் பிரியங்கா!
முதலைக்கண்ணீர் வடிக்கும் பிரியங்கா!
PUBLISHED ON : மார் 23, 2025 12:00 AM

ஆர்.வேங்கடவன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இஸ்ரேலிய அரசு காசாவில், 130 குழந்தைகள் உட்பட, 400க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொடூரமாக கொலை செய்திருப்பது, அவர்களுக்கு மனிதநேயம் இல்லை என்பதையே காட்டுகிறது. இஸ்ரேலிய அரசு எவ்வளவு குற்றச்செயல்களில் ஈடுபடுகிறதோ, அந்த அளவுக்கு தாங்கள் கோழைகள் என்பதை வெளிப்படுத்துகிறது' என, இஸ்ரேலிய அரசை கண்டித்து, முதலைக் கண்ணீர் வடித்துள்ளார், காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா.
சரி... இஸ்ரேலியர்களுக்கு மனிதநேயம்கிடையாது; அவர்கள் கோழைகள். மனிதநேயம் மிக்க காங்கிரசாரின் வரலாற்றை திரும்பிப் பார்ப்போமா...
கடந்த 1984 அக்., 31ல் பிரதமர் இந்திரா,அவரது சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக அஹிம்சையிலும், சாத்வீகத்திலும் ஊறிய காங்கிரசார், டில்லி, பஞ்சாப், உ.பி., ஹரியானா, மத்திய பிரதேசம்மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்களில் வசித்து வந்த சீக்கியர்களை பார்த்த மாத்திரத்திலேயே கொன்று குவித்து, ஆனந்த தாண்டவம் ஆடினர்.
இந்திய அரசின் புள்ளி விபரப்படி கொலையானவர்களின் எண்ணிக்கை, 3,350; பிற மதிப்பீடுகளின் படி அந்த எண்ணிக்கை, 8,000 -லிருந்து, 17,000!
டில்லி காவல்துறை மற்றும் சில மத்திய அரசு அதிகாரிகள் ஆதரவுடன், வன்முறை ஏற்பாடு செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வு பிரிவு நம்புகிறது.
இந்த வன்முறையின் போது, டில்லியில் உள்ள புல் பங்காஷ் குருத்வாராவில், மூன்று சீக்கியர்கள் எரித்துக் கொல்லப்பட்டதற்கு, 40 ஆண்டுகளுக்குப் பின், காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பின், அந்த வழக்கு என்ன ஆனது, ஜெகதீஷ் டைட்லர் தண்டனை பெற்றாரா அல்லது விடுதலை செய்யப்பட்டாரா என்பது குறித்து எந்த விபரங்களும் இல்லை!
காசாவில், இஸ்ரேலிய அரசு நடத்தியது கொடூர கொலைகள் என்றால், பிரியங்காவின் பாட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு, ஜெகதீஷ் டைட்லர் கண்ணசைவில்நடந்த வன்முறை சம்பவங்களும், படுகொலைகளும் சாத்வீக கொலைகளா?
பிரியங்காவின் கண்ணீருக்கு முன், முதலைகள் கூட தலைகுனிந்து தோற்று ஓடும் போலுள்ளதே!
தோல்விக்கு வழி வகுக்கும்
அ.சேகர்,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய அரசியல்
வரலாற்றில், மத்திய - மாநிலங்களின் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக
அமைந்தவை, அந்த ஆட்சிகளில் நடந்த ஊழல்களே!
ராஜிவ் பிரதமராக
இருந்தபோது நடந்த போபர்ஸ் ஊழல் காங்., கட்சி தோல்வி அடைய காரணமாக இருந்தது.
அதேபோன்று, தமிழகத்தில் கருணாநிதியின் ஊழல்கள், அ.தி.மு.க., எனும் கட்சி
உருவாகவும், அதன்வாயிலாக, தி.மு.க., தோல்வியுறவும் காரணமாக அமைந்தன.
எம்.ஜி.ஆர்.,
மறைவுக்குப் பின், 1991- - 96 வரை ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, சொத்து
குவிப்பு உட்பட பல ஊழல் குற்றச்சாட்டுகளால், 1996 சட்டசபை தேர்தலில் படு
தோல்வி அடைந்தார்.
மத்தியில், கடந்த 2004- - 14 வரை மன்மோகன்சிங்
தலைமையில் நடந்த கூட்டணி ஆட்சியில் நடந்த மெகா ஊழல்களே காங்கிரஸ் படுதோல்வி
அடையவும், இன்றுவரை வீழ்ச்சியை சந்திக்கவும் காரணம்!
ஜெயலலிதா
மறைவிற்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் நடந்த
அ.தி.மு.க., ஆட்சியில், பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்
அணிவகுத்தன.
அதுவே, 2021 தேர்தலில் அக்கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
அவ்வகையில், தற்போது ஆளும் தி.மு.க.,வுக்கு டாஸ்மாக் ஊழல் மிகப்பெரிய தலைவலியாக உள்ளது.
எந்த
செந்தில் பாலாஜியை, தான் ஆட்சிக்கு வந்ததும், முதல் நபராக ஊழல் வழக்கில்
கைதுசெய்து சிறைக்கு அனுப்பி வைப்பதாக ஸ்டாலின் கூறினாரோ, அந்த செந்தில்
பாலாஜி வாயிலாகவே, இப்போது, கழுத்திற்கு மேல் தொங்கும் கத்தியாக,
தி.மு.க.,வை மிரட்டிக் கொண்டிருக்கிறது, டாஸ்மாக் ஊழல்!
இதுகுறித்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் பெரிதாக செய்தி
வெளியிடாவிட்டாலும், நவீன ஊடகமான சமூக வலைதளங்கள் வாயிலாக, இந்த மெகா ஊழல்
மக்களைச் சென்றடைவதை, ஆளும் அரசால் தடுக்க முடியவில்லை.
வரும் நாட்களில் டாஸ்மாக் ஊழல் விவகாரம் பூதாகரமாக வெடித்து, அதுவே, தி.மு.க.,வின் தோல்விக்கு வழி வகுக்கலாம்!
அறிவை வளர்க்க தடை போடலாமா?
ச.பாலுச்சாமி,
தமிழாசிரியர் (பணி ஓய்வு), கம்பத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: இன்று மும்மொழிக் கல்வியை எதிர்ப்பதைப் போல், நான் பள்ளி இறுதி
படிக்கும் காலத்தில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி, தமிழக
இளைஞர்களின் வாழ்வை, முன்னேற்றத்தை முடக்கியது,தி.மு.க.,
தற்போதும், அரசியலுக்காக, இளம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வோடு விளையாடுகிறது.
கேரளா,
கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஹிந்தியை தடுக்கவில்லை; அம்மாநில
மக்கள், நுாதனக் கல்வியிலும், உழைப்பிலும் முன்னேறி உலகமெங்கும் உள்ளனர்.
'தனித்தமிழ்
இயக்கம்' கண்ட மறைமலை அடிகள், சமஸ்கிருதம் அறிந்ததால், காளிதாசரின்,
'சாகுந்தலம்' என்ற காவியத்தை தமிழுக்கு தந்தார். தமிழறிஞர் பரிதிமாற்
கலைஞர், பன்மொழி வித்தகர்; தமிழ் செம்மொழி என்று முதன் முதலில் ஆய்வு
செய்து கூறியவர்; தமிழில் நாடகவியல், புதினங்களை படைத்து தமிழ் உலகிற்கு
சமர்ப்பித்தவர் இவரே.
மகாகவி பாரதியாரும் பல மொழிகள் அறிந்தவர்;
தமிழில் அதுவரை இருந்த இலக்கண நடை கவிதைகளில் இருந்து மாறுபட்டு புதிய
கவிதை நடையையும், உரை நடையையும் தமிழுக்கு வழங்கியவர்.
கம்பனின்,
ராமாயணம்கிடைத்தது எப்படி? வடமொழி அறிந்ததால் வால்மீகி ராமாயணத்தை படித்து,
தமிழின் மரபுக்கு ஏற்ப, காலத்தாலும் அழியாப்புகழ் கொண்ட ராம காதையை
படைத்தார்; அவரும் காலம் கடந்து வாழ்கிறார்.
சிலப்பதிகாரத்தில்,
கோவலன் வடமொழியில் எழுதிய ஓலையை படித்து, வடதிசையில் இருந்து வந்த
மறையோனுக்கு உதவிகள் புரிந்தான் என்று கூறியுள்ளார், இளங்கோவடிகள்.
உழைப்பை மூலதனமாகக் கொண்ட தமிழ் சமூகம், பிறமொழிகளையும் அறிந்திருந்ததால் தான், கடல் கடந்த வாணிபத்தில் தலை சிறந்து விளங்கினர்.
ஆனால்
இன்றோ, எல்லாம் இலவசம் என்ற நிலையில், வயிறு நிறைந்தால் போதும் என்று
வாழ்கின்றனர். அவர்களை இலவசத்திற்காக கையேந்த வைத்து, அதை சாதனை என்று
கொண்டாடும் திராவிட மாடல் அரசு, அறிவை வளர்க்க மட்டும் தடை போடுகிறது.
முட்டாளாக, குடிகாரர்களாக இருந்தால், பொய்யை விதைத்து எளிதாக ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என்று நினைத்து விட்டனர் போலும்!