Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/கட்டுக்கதைக்கும் அளவு இல்லையா?

கட்டுக்கதைக்கும் அளவு இல்லையா?

கட்டுக்கதைக்கும் அளவு இல்லையா?

கட்டுக்கதைக்கும் அளவு இல்லையா?

PUBLISHED ON : மார் 24, 2025 12:00 AM


Google News
Latest Tamil News

கட்டுக்கதைக்கும் அளவு இல்லையா?




டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சமீபத்தில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்ட மேடைகளில், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயை கடுமையாக விமர்சனம் செய்தார்.

கருணாநிதி முதல்வர் ஆன புதிதில், டில்லி சென்றாராம்; போக்குவரத்து காரணமாக, 10 நிமிடம் தாமதமாக சென்று, துணை பிரதமர் மொரார்ஜியை சந்தித்தாராம்.

அவர், 'நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா, காத்துக் கொண்டு இருப்பதற்கு' என்று திட்டினாராம். பின், 'எங்கு வந்தாய்' என்று கேட்டாராம். அதற்கு கருணாநிதி, 'நிதி கேட்க வந்தேன்' என்றாராம். 'நிதி என்ன... என் வீட்டு தோட்டத்திலா காய்க்கிறது, அறுத்து- கொடுப்பதற்கு?' என்று கோபத்துடன் கேட்டாராம்...

அதற்கு கருணாநிதி, 'உலகத்தில் யார் வீட்டு தோட்டத்திலும் பணம் காய்க்கும் மரம் இல்லை; உங்கள் வீட்டு தோட்டத்தில் மட்டும் எப்படி இருக்கும்?' என்று மொரார்ஜியை மடக்கினாராம். அப்போதுதான், இனி கருணாநிதியிடம் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்று நினைத்தாராம் தேசாய்.

இப்படி தன் கற்பனை கதையைஅவிழ்த்து விட்டுள்ளார், துரைமுருகன்.

கடந்த 1975, ஜூன் 26ல் எமர்ஜென்சியை கொண்டு வந்தார், இந்திரா. அன்று நள்ளிரவு மொரார்ஜியை கைது செய்ய உத்தரவு வருகிறது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மொரார்ஜியை எழுப்பி, 'உங்களை கைது செய்கிறோம்' என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

சிறிதும் தயங்காமல், 'அரை மணி நேரம் அவகாசம் கொடுங்கள்; அதிகாலை ஆகிவிட்டதால், குளித்து, பூஜை செய்துவிட்டு வந்து விடுகிறேன்' என்று கூறியவர், சிறிது நேரத்தில், சிறைக்கு செல்ல தயார் என்று வந்தார்.

செய்தியறிந்து அங்கு வந்த நிருபர்கள், எமர்ஜென்சியை பற்றி அவரிடம் கேட்டபோது, கொஞ்சமும் தயக்கமின்றி, 'விநாச காலே, விபரீத புத்தி' என்று இரண்டே வார்த்தையில், பிரதமர் இந்திரா குறித்து சொல்லி விட்டு, போலீஸ் வேனில் ஏறிச் சென்று விட்டார்.

இந்திராவையே தைரியமாக எதிர்த்த அவரை, கருணாநிதி மடக்கினார் என்று துரைமுருகன் சொல்வது, நம்பும்படியாகவா உள்ளது?

கடந்த 1977, ஜனவரியில் பிரதமர் ஆனார், மொரார்ஜி. அவருக்கு, அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

பதிலுக்கு, தன் கைப்பட நன்றிக் கடிதம் எழுதி எம்.ஜி.ஆருக்கு அனுப்பினார் மொரார்ஜி. இப்படி ஒரு கட்சித் தலைவ-ருக்கே மரியாதை செலுத்தியவர், ஒரு மாநிலத்தின் முதல்வர், 10 நிமிடம் தாமதமாக வந்ததற்காக, ஏக வசனத்தில் பேச முடியுமா?

முன்னாள் பிரதமர்கள் மொரார்ஜிக்கும், சரண் சிங்குக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. இதுகுறித்து, 'துக்ளக்' ஆசிரியர் சோவிடம், 'மொரார்ஜி பிராமணர் என்பதால் தான், அவர் எனக்கு மரியாதை தரவில்லை' என்று கூறியிருக்கிறார், சரண் சிங்.

அதற்கு சோ, 'அவர் பிராமணராக இருந்தாலும் புணுால் போடுவதில்லை; சடங்கு, சம்பிரதாயங்களிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை. சுதந்திரத்திற்கு முன் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொரார்ஜி போட்டியிட்ட போது, அவர் புணுால் அணியாததை குறிப்பிட்டு, எதிர்க்கட்சி வேட்பாளர் பிரசாரம் செய்தார்.

அதற்கு, மொரார்ஜி, 'நான் புணுால் போடுவதில்லை; அது மட்டுமல்ல, மற்ற ஜாதியினரை விட பிராமணன் உயர்ந்தவன் என்று நம்பவில்லை. புணுாலுக்குத்தான் ஓட்டு என்றால், என்னை எதிர்த்து நிற்பவருக்கு ஓட்டு போடுங்கள். நேர்மைக்கு ஓட்டு என்றால் எனக்கு போடுங்கள்' என்றார். இதுதான் அவர் குணம்' என்றாராம் சோ.

மற்றவர்கள் பார்வையில் தான் மொரார்ஜி பிராமணராக தெரிந்தாரே தவிர, அவர் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு, எளிமையாக வாழ்ந்த நேர்மையாளர். அவர் க-ருணாநிதிக்கு மரியாதை தரவில்லை; கருணாநிதி, மொரார்ஜியை பேச்சில் மடக்கினார் என்று கூறுவது எல்லாம், தமிழகத்தில் ஈ.வெ.ரா.,தான் அனைவரையும் படிக்க வைத்தார் என்று சொல்லும் கட்டுக்கதையை போல் உள்ளது!

ஜனநாயக உரிமை மறுக்கப்படலாம்!


எஸ்.மதுசூதனன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எமர்ஜென்சி காலத்தில், அரசுக்கு எதிராக கருத்து சொல்வோர், பொதுக்கூட்டங்களில் விமர்சிப்போர், ஊர்வலம் நடத்துவோர் மற்றும் போஸ்டர் ஒட்டுவோரைக் கூட காங்கிரஸ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

அந்த ஆற்றாமையில், 'ம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனவாசம்' என்று எதுகை, மோனை நயத்துடன் காங்., ஆட்சியை விமர்சித்தார், கருணாநிதி.

கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி கூறிய இந்த வசனம், இன்று தி.மு.க., ஆட்சியில் நிகழ்ந்து வருகிறது.

அரசை விமர்சித்து எவராவது சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவு செய்தால் கைது செய்வது, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தவோ, ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்தவோ அனுமதி மறுப்பது, மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்து, ஆட்டுக் கொட்டகையிலும், கழிப்பறை இல்லாத மண்டபங்களிலும் அடைத்து, தன் அதிகாரத்தைக் காட்டுவது என, தி.மு.க., அரசு, அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன், மதுபான கொள்முதலில், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதை கண்டித்து, சென்னை, 'டாஸ்மாக்' அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டத்தை முறியடிக்க போலீசார் மேற்கொண்ட கெடுபிடி நடவடிக்கைகளால், மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர் அலைக்கழிக்கப்பட்டனர்.

இது குறித்து சட்ட அமைச்சர் ரகுபதியோ, 'ஊழலே நடைபெறவில்லை; இதில், முதல்வரை சிக்க வைக்க முடியாது. மடியில் கனமில்லை; அதனால் வழியில் பயமில்லை' என்று உறுதியாக கூறியுள்ளார்.

கூடவே, அமைச்சர் செந்தில் பாலாஜி, '1,000 கோடி ரூபாய் டாஸ்மாக் தொடர்பான முறைகேடுக்கு ஆதாரம் உள்ளதா? எதையும் சந்திக்க தயார்' என்று சவால் விட்டுள்ளார்.

மதுபான கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை; மடியில் கனமில்லை என்றால், தமிழக பா.ஜ.,வினரின் ஆர்ப்பாட்டத்தை அடக்க வேண்டிய தேவை என்ன?

போராட்டம் நடத்த புறப்படுவதற்கு முன்பே கைது செய்வதன் வாயிலாக, 'எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல், ஊழல் நடந்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அல்லவா கொடுக்கிறது, தி.மு.க., அரசு!

இன்றைய ஆளும் அரசு, அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியாக மாறலாம்; இன்று எதிர்க்கட்சிகளுக்கு மறுக்கப்படும் ஜனநாயக உரிமை, நாளை தி.மு.க.,வினருக்கும் மறுக்கப்படலாம் என்பதை மறந்து விட வேண்டாம்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us