PUBLISHED ON : ஜூலை 01, 2024 12:00 AM

என். வைகை வளவன், மதுரையில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டி,
கேரளா கடலில் மீன் பிடிக்க சென்றபோது தவறி கடலில் விழுந்து இறந்து போனார்.
இவரது மனைவி எத்தனை தடவை அரசிடம் முறையீடு செய்தும் இவருக்கு நிதி உதவி
செய்ய மறுக்கிறது.
இதற்கு அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன
தெரியுமோ? 'கேரளாவில் உள்ள கடலில் ராமேஸ்வரம் மீனவர் இறந்து போனதால்
அவருக்கு நஷ்ட ஈடு தர சட்டத்தில் இடமில்லை' என்பது தான்.
காஷ்மீர்
போன்ற வட மாநிலங்களில் நடக்கும் போரின் போது இறக்கும் தமிழகத்தைச் சேர்ந்த
ராணுவ வீரருக்கு, லட்சக்கணக்கில் பணத்தை வாரி கொடுப்பவர்கள், அப்பாவியான
ஏழை மீனவப் பெண்ணுக்கு நிதி உதவி செய்ய சட்டத்தில் இடமில்லை என்று சொல்வது
எந்த ஊர் நியாயமோ?
எல்லை மீறுவதால், தமிழக மீனவர்கள் இலங்கை
கடற்படையால் கைது செய்யப் பட்டு, இலங்கையிலுள்ள சிறைகளில் அடைப்பதைக்
கண்டித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதங்கள் எழுதும்
முதல்வர், இறந்து போன ராமேஸ்வரம் ஏழை மீனவரின் மனைவியையும், அவரது நான்கு
குழந்தைகளையும் காப்பாற்ற, எந்த நிதி உதவியும் செய்யாமல் இருப்பது என்ன
சமூக நீதியோ?
அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்கும் கள்ளச்சாராய
சாவுகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை, உழைத்து வாழும் மீனவ மக்களின்
வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க எந்த நிதி உதவியும் செய்யாமல் தட்டிக் கழிப்பது
வேதனை தருகிறது.
ஓட்டை சட்டங்களை ஒழிக்கணும்!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரோடுகளில் திரியும் மாடுகள், பல இடங்களில் மக்களை முட்டித் தள்ளி காயப்படுத்துகின்றன; போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும், விபத்துகளுக்கு காரணமாகவும் உள்ளன.
பால் நின்று விட்ட மாடுகளை, அடுத்த கன்று ஈனும் வரை, பராமரிக்க விருப்பமில்லாதவர்கள் அவற்றை, தெருவில் விட்டு விடுகின்றனர்.
குப்பை, பிளாஸ்டிக் பொருட்களை தின்பதால் மாடுகளுக்கு நோய் நொடிகளும், அதன் பாலைக் குடிப்பவர்களுக்கு சுகாதாரக் கேடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பல இடங்களில் அப்படித் திரியும் மாடுகள் களவாடப்பட்டு, கசாப்புக் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
சமீபத்தில் பல இடங்களில் மாடுகள் முட்டி மக்கள் இறந்துபோன, காயமடைந்த சம்பவங்களால், பல மாநகராட்சிகள், ரோடுகளில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதமும், மூன்று முறை பிடிபட்டு விட்டால், மாடு ஏலம் விடப்படும் என்றும் அறிவித்துள்ளன.
இது போன்ற சட்டங்கள் ஏற்கனவே இருந்தபோதிலும், அவை பாரபட்சமின்றி, உறுதியுடன் நிறைவேற்றப்படாததே, பிரச்னை இப்பொழுது விஸ்வரூபம் எடுக்க முக்கிய காரணம்.
உதாரணத்திற்கு, எங்கள் ஏரியாவில் பன்றிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. நகராட்சிக்கு புகார் அளித்து அவர்கள் பிடிக்க வருவதற்குள், பன்றிகளின் உரிமையாளர்களுக்கு, செய்தி கசிய விடப்படுகிறது. அவர்கள் உடனே, தங்கள் பன்றிகளை வேறு இடத்திற்கு ஓட்டிச் சென்று விடுகின்றனர்.
நகராட்சி ரெக்கார்டுகளில், 'இன்று பன்றிகள் பிடிக்கப் போனோம். ஒன்றிரண்டைத் தவிர, வேறு கிட்டவில்லை' என்று எழுதப்பட்டு விடுவது வழக்கமாகி விட்டது.
மாடுகள், பன்றிகள், ஆடுகளை தெருக்களில் திரிய விடுபவர்களில் பலருக்கு, ஆளும் கட்சியினருடன் தொடர்பு இருக்கும். பிடிபட்ட உடனேயே விடுவிக்கச் சொல்லி நகராட்சி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். பல இடங்களில் பிடிபட்ட விலங்குகளை வண்டிக்குள் ஏற்ற விடாமல் சிலர், நகராட்சி அலுவலர்களை தடுத்து நிறுத்துகின்றனர்.
இது போன்ற அனைத்து ஓட்டைகளையும், தப்பக் கூடிய வழிகளையும் அடைத்தால்தான், இயற்றிய சட்டங்கள் உரிய பலன்களை அளிக்கும். வெறும் சட்டத்தை மட்டும் போட்டு, 'நாங்கள் நடவடிக்கை எடுத்து விட்டோம்' என்று கூறிக் கொள்வதில், எவ்வித பலனும் இல்லை.
ஜனநாயகமும் மறதியும்!
ஜி.சூரிய நாராயணன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் முதல் பல விஷயங்களை நாம், சுதந்திரம் பெற்ற பின் சட்டமாக்கினோம்.
சட்டமானாலும் சரி, பணமானாலும் சரி, ஒரு நாட்டில் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னார், சட்டத்தை இயற்றிய அம்பேத்கர்.
பணம் ஒரு குறிப்பிட்ட வடிவில் மக்களிடையே ஊறிய பின், அதுவே ஜனநாயகத்தின் எதிரியாக மாறும். அதன் வடிவு, புதுப்பிக்கப்பட வேண்டும். அதை தான் பிரதமர் மோடி தன், முதல் அதிரடி ஆட்சியில் செய்தார்.
நேரடியாக கள்ள நோட்டு குறையும், கருப்பு பணம் குறையும் என்பதை காட்டிலும், மறைமுக பலன் பலதும் அதனால் உண்டு; அதை நாம் கண்கூடாக பார்த்து விட்டோம்.
தேர்தல் சட்டங்களும் அது போலவே, புதுப்பிக்கப்பட வேண்டும். அதையும் ஒரு புண்ணியவான் செய்தார்; அவர் தான் டி.என்.சேஷன். அதன் பலனையும் நாம் இன்று வரை அனுபவித்து வருகிறோம்.
ஆனாலும் இன்னும் சில முறைகேடுகள் இருக்கின்றன. எவ்வளவு களவாணிகள், எவ்வளவு கொலைகாரர்கள், எவ்வளவு லஞ்ச லாவண்ய முதலைகள், தேர்தலில் சர்வ சாதாரணமாக தேர்வு செய்யப்படுகின்றனர்!
ஜாதி கட்சித் தலைவர்கள், குண்டுவெடிப்பு வழக்கில் ஜாமினில் வெளியே இருப்பவர் என, சட்டம் இயற்றும் மாமன்றத்தில், பயிரை மேய்பவர்களே வேலியாய் இருப்பதைப் பார்க்கிறோம்.
இது தொடர்ந்தால், 2026 தாண்டி 2031ல், கள்ளக்குறிச்சி தொகுதியில் இன்று கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவரே, வலிமையான கட்சியின் வேட்பாளராய் நின்று, எதிரில் போட்டியிடுபவர், ஓட்டுக்கு 500 கொடுத்தால், இவர் 1,000 கொடுத்து, ஓட்டின் மதிப்பு தெரியாத மக்கள், இவரையே சட்டசபைக்கு அனுப்புவர்.
யார் கண்டது... அவர், மதுவிலக்கு சம்பந்தப்பட்ட அமைச்சராகக் கூட ஆகலாம்!
மக்களுக்கு மறதி அதிகம் என்பதை காட்டிலும், அவர்களுக்கு பணத்தாசையையும், இலவசத்தின் மீது ஆசையையும் அரசியல்வாதிகள் ஊட்டி ஊட்டி வளர்த்துள்ளனர்.
இது ஜனநாயகத்திற்கு, தேசத்திற்கு ஆபத்து என்று கரடியாய் கத்தினாலும், யார் காதிலும் விழப் போவதில்லை.
இந்த அவல நிலைக்கு முடிவு ஏற்படாத வரை, நாட்டில் ஜனநாயகம் நிலவாது.