/தினம் தினம்/இது உங்கள் இடம்/ மக்கள் பிரதிநிதிகளுக்கு கல்வி தகுதி அவசியம்! மக்கள் பிரதிநிதிகளுக்கு கல்வி தகுதி அவசியம்!
மக்கள் பிரதிநிதிகளுக்கு கல்வி தகுதி அவசியம்!
மக்கள் பிரதிநிதிகளுக்கு கல்வி தகுதி அவசியம்!
மக்கள் பிரதிநிதிகளுக்கு கல்வி தகுதி அவசியம்!
PUBLISHED ON : ஜூன் 30, 2024 12:00 AM

சொ.பீமன், அல்லம்பட்டி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: மக்கள் பிரதிநிதிகள், அரசிடமிருந்து ஊதியம் பெறுவதால் அவர்களும் அரசு ஊழியர்களாகவே கருதப்பட வேண்டும். லோக்சபா உறுப்பினர்களின் ஊதியம், படிகள் மற்றும் இதர சலுகைகள் பற்றி ஒரு வீடியோ வெளியானது. அந்த பதிவை பார்த்து வியப்பு ஏற்பட்டது.
அறிவிப்பாளர், 'இந்த பதிவை தலை சுற்றல் உள்ளோர், பலவீனமானவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம்' என்ற வேண்டுதலுடன், கீழ்கண்டவாறு பட்டியலிட்டார்...
ஊதியம் ரூ.1 லட்சம், உதவியாளர் வருமானம், 70,000, தொகுதிப்படி 70,000, பர்னிச்சர் வாங்க ஆண்டுக்கு, 1.5 லட்சம், இதர படி மற்றும் சலுகைகள், பயணப்படி, வாடகையில்லா வீடு, வீடு ஒதுக்கப்படும் வரை தங்கும் வாடகையை அரசு ஏற்கும், இரண்டு போன்கள், அதற்கான இணையதள வசதிக்கான கட்டணம், தண்ணீர் இலவசம்...
மின் கட்டணம் இலவசம், மருத்துவம், குடும்பம் மொத்தத்துக்கும் இலவசம், ரயில் பயணம் இலவசம், விமானக்கட்டணம் கால் பங்கு கட்டணத்துடன் இவை இரண்டும் ஆண்டுக்கு 34 முறை. இந்த எண்ணிக்கை குறைந்தால், அடுத்த ஆண்டில் சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். பார்லிமென்ட் உணவகத்தில் சலுகை விலையில் உணவு, பார்லிமென்ட் கூடும் நாட்களுக்கு படி. மேலும் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது.
நம் நாடு சுதந்திரம் அடைந்து, 77 ஆண்டுகள் ஆன போதும், கட்டாயக் கல்வி சட்டம் அமலில் உள்ள போதும், பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு கல்வித்தகுதி அவசியம் என்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். இவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படலாம்.
முன்னாள் பிரதமர் நேரு மறைந்த போது, 'அடுத்த பிரதமர் யார்?' என்ற வினா எழுந்தது. பெரும்பாலான காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் காமராஜரை முன்மொழிந்தனராம். அதை காமராஜர் மறுத்து விட்டார். காரணம், தன் கல்வித்தகுதியை சுட்டிக்காட்டி, 'நான் எப்படி ஐ.நா., சபையிலும், வெளிநாடுகளில் உள்ள பார்லிமென்ட்டிலும் உரையாற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்க்க முடியும்?' என்றாராம்.
இந்த பெருந்தன்மை அரசியல்வாதிகள் எவருக்குமே வராது. கல்வி கடவுள் சரஸ்வதி அவர் மீது கருணை காட்டியிருந்தால், அன்றே தமிழர் பிரதமராகி இருப்பார்.
காமராஜர் தமிழக முதல்வராக இருந்த போது, லிப்ட் ஆப்பரேட்டர்களுக்கு கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்று நிர்ணயம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டதாம். அப்போது பணியில் இருந்த லிப்ட் ஆப்பரேட்டரின் கல்வித்தகுதி எட்டாம் வகுப்பாம். அவர் சென்று முதல்வரிடம் முறையிட்டாராம். உடனே சம்பந்தப்பட்ட துறை செயலரிடம் விவாதித்த போது, 'லிப்ட் ஆப்பரேட்டர் சுவிட்சை போட்டால் மேலும், கீழும் செல்லும். இதற்கு எதற்காக 10வது முடித்திருக்க வேண்டும்?' என்று அரசாணையை ரத்து செய்ய சொன்னாராம்.
மேலும், 'என் கல்வித்தகுதியை சுட்டிக்காட்டினால் என்னவாகும்?' என்று, கேட்டாராம்.
இந்த இரண்டு நிகழ்வுகள் வாயிலாக, மக்கள் பிரதிநிதிகளுக்கு கல்வித் தகுதி வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக தோன்றுகிறது. நிர்வாகம் மேலும் சிறக்க கல்வித் தகுதி வேண்டும்.
எனவே, மத்திய அரசு உரிய ஆலோசனைகள் மேற்கொண்டு, சட்டத்திருத்தங்கள் வாயிலாக மக்கள் பிரதிநிதிகளுக்கு கல்வித் தகுதி நிர்ணயிக்க முன்வர வேண்டும்.
கோவில் மண்டபத்தில் அமர்வதற்கு கூட கட்டணம் கேட்பரோ?
முனைவர்
தென்காசி கணேசன், அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஆளுங்கட்சியும், அவர்களுக்கு மண்டை ஆட்டும் கட்சிகளையும் தவிர, பொதுமக்கள்
அனைவரும் விரும்புவது, ஹிந்து கோவில்களை விட்டு, அறநிலையத் துறைவிலகி
இருப்பதை தான். காரணம், சிறப்பு வழி, பண்டிகை நாள், திருமணம், காதுகுத்து,
மொட்டை போட, மாலை சாற்ற, புடவை சாற்ற, அர்ச்சனை செய்ய என்று, கோவிலை
முழுதும் வணிகமயமாக்கி, பக்தர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்குவது ஒன்றே
இவர்களின் தொழிலாகி விட்டது.
இது தவிர, கோவில் உள்ளே இருக்கும் கடைகளில் மட்டுமே நெய், எண்ணெய், விளக்கு திரி வாங்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் வேறு.
கோவில்
வெளியே உள்ள நடைபாதைக் கடைகள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த
கட்டணம் என்று, எங்கெங்கு திரும்பினாலும் பண வசூல். மத சார்பற்ற நாடு
என்று கூறப்படும் இங்கு தான், ஹிந்து கோவில்களுக்கு மட்டுமே இந்த நிலைமை.
சமீபத்தில்,
தென்காசி மாவட்டம் திருமலைக் கோவில் சென்றபோது, வழக்கம் போல வாகனக்
கட்டணம் முதல் மேலே உள்ள எல்லாம் தவிர, போனசாக இரண்டு வசூல்கள் செய்தனர்.
பக்தர்களுக்கு அதிர்ச்சி.
அர்ச்சனை டிக்கெட் வாங்கியபின், தேங்காய்
கொண்டு வந்தால் உடைக்கக் கட்டணம் தனி என்றும், மொபைல்போன் வைத்திருந்தால்
கட்டணம் என்றும், வாசலிலேயே வாங்கி விட்டனர். நாளைக்கு, பூ அதிகம் அல்லது
பழம் அதிகம் தட்டில் இருந்தால், அதற்கும் கட்டணம் தனி என்பரோ?
இந்தக் காலத்தில் மொபைல் போன் இல்லாத மனிதர்களே கிடையாது. அவசரத்துக்கு பேசுவதற்குத் தான் அதை வைத்திருக்கிறோம்; அதற்கும் காசா?
கோவில்
உள்ளே போன் பேச, போட்டோ எடுக்கத் தடை என்று நோட்டீஸ் வைத்து, அதை
மீறுபவர்களை, 50 ரூபாய் அபராதம் கட்டச் சொல்லுங்கள்; அது சரியான ஒன்று.
அவரவர் பையில், பாக்கெட்டில் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து வைத்துச்
சென்றாலும், கட்டணம் என்றால் அது என்ன நியாயம்?
கோவில்களில் பழுது
பார்க்க வேண்டிய பணிகள் எவ்வளவோ உள்ளன. நெல்லையப்பர் கோவில் தேர்க்கயிறு
கூட சரியாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது. ஏகப்பட்ட சிறு கோவில்கள்,
பராமரிப்பின்றிஇருக்கின்றன.
இதே தென்காசியை ஆண்டாலும், பக்தியும்
பணிவும் கொண்ட மன்னன் பராக்ரம பாண்டியன் எழுதிய வரிகள், தென்காசி கோவிலின்
உள்ளே சுவரில் பதிக்கப்பட்டிருக்கிறது.
'பின்னாட்களில் இந்தக்
கோவிலில் சிதிலம் ஏற்பட்டால் அதை சரி செய்பவர்கள் பாதங்களை இப்போதே
வணங்குகிறேன்' என்கிறான் அந்தச் சக்ரவர்த்தி. கோவில்களை முறையாக
பராமரித்து, பக்தர்களுக்கு வசதிகள் செய்வதற்குத் தான் உண்டியல் வருமானம்.
இவை எல்லாம் செய்யாமல், எல்லாவற்றிலும் அறநிலையத்துறை கட்டணம் வசூலிப்பது சரிதானா?
இன்னும்
கொஞ்ச நாட்களில் பிரார்த்தனை செய்துவிட்டு மண்டபத்தில், மரத்தடியில்
உட்கார்ந்தால் கட்டணம் என்று கூட உத்தரவு வரலாம்; ஆச்சரியப்படுவதற்கு
இல்லை!