Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ இது தேவையா முதல்வரே?

இது தேவையா முதல்வரே?

இது தேவையா முதல்வரே?

இது தேவையா முதல்வரே?

PUBLISHED ON : ஜூலை 02, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
-ரெ.ஆத்மநாதன், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஏற்கனவே, சென்னையை அடுத்த பரந்துாரில் விமான நிலையம் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்ததிலிருந்து, அங்கு அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. தங்கள் பகுதியில் விமான நிலையம் வருவதால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் ஆக்ரோஷம் அடைகின்றனர்.

தற்போது, ஓசூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமானங்களும் வந்து போகும் அளவிற்கு விமான நிலையம் அமைக்கப்படுமென்றும், தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதியின் வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக அமையுமென்றும் நீங்கள் சட்டசபையில் அறிவித்துள்ளீர்கள்.

பெங்களூரு விமான நிலையம், ஓசூரிலிருந்து 40, 50 கிலோ மீட்டர் தொலைவில், ஒரு மணி நேரப் பயணத்தில் தான் உள்ளது. அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கும் நேரடி விமானத் தொடர்புகள் உண்டு. அவ்வாறு இருக்கையில், ஓசூரில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விமான நிலையம் அவசியந்தானா?

தொழிற்துறை நகரமான ஓசூரில், நீங்கள் கூறும் அந்த 200 ஏக்கர் நிலப்பரப்பில், பல சிறு தொழிற்சாலைகளை அமைத்து, பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கலாமே!

இந்தக் கோடையில், தமிழகத்தின் பல இடங்களிலும் சராசரி மழையளவை விடப் பல மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த நீரை முறையாகச் சேமித்து, மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க எந்த ஒரு வழியும் ஏற்படுத்தப்படவில்லை.

பல ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கள் கட்டினாலே, தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்குவதுடன், நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்தலாமென்று நீரியல் வல்லுனர்கள் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றனர்.

அவ்வாறு தடுப்பணைகள் கட்டப்பட்டால், மக்கள் நீருக்கு ஆலாய்ப் பறக்கும் அவல நிலையைப் போக்கலாம். அதற்கான முயற்சிகள் ஏதும் அரசின் வசம் உள்ளதாகவே தெரியவில்லை.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசு பணிகளில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாகிப் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமலே உள்ளன. அருகிலுள்ள விமான நிலையத்திற்குப் பக்கத்திலேயே, வேறொரு விமான நிலையம் கட்டும் செலவை, மேற்கூறிய பணிகளுக்குப் பயன்படுத்தினால் சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாமே!

மேலும், தமிழக அரசின் பொருளாதார நிலையும் சிறப்பாக இல்லை. கடன் வாங்கித் தானே காலம் கழிகிறது!

இந்த நிலையில், மிக முக்கிய மக்கள்முன்னேற்றத் திட்டங்கள் மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும். செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும், பல மடங்கு பலனை, சாமானியர்களுக்கும் வழங்குவதாக அமைய வேண்டும்.

அதில் தானே உண்மையான சமூக நீதி அடங்கியுள்ளது!



அங்கு முடிகிறது; இங்கு முடியவில்லையே!


வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூன், குளுமையான சீதோஷ்ண நிலை கொண்டது; எல்லாருக்குமே பிடித்தமானது. அங்கேயே இப்போது வெப்பநிலை, 40 டிகிரி செல்ஷியஸ் ஆகி வருகிறது.

முதல்வர் குடியிருப்பு செல்லும் சாலையை விரிவாக்க, 250 ஆண்டு வயதான 240 மரங்களை வெட்டி அகற்றும் பணியை, அரசு தொடங்கியது. அதை ஆட்சேபித்து, ஜூன் 23 அன்று, ஆயிரக்கணக்கான மக்கள் 2 கி.மீ., நீள பேரணி நடத்தினர்.

'போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, நால்வழி சாலை அமைக்க திட்டமிட்டோம். ஆனால் மக்கள் உணர்வுகளை மதித்து, அந்த திட்டத்தை கைவிடுகிறோம்' என்று, அம்மாநில பா.ஜ., முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்தார்.

இந்த திட்டத்திற்கு, 40,000 மரங்களை வெட்ட திட்டமிட்டு இருந்தனர்; 20,000 மரங்களை வெட்டி விட்டனர். 'பசுமை சூழலை பாதிக்காத முன்னேற்றம் தான் டேராடூனுக்கு வேண்டும். 'அகற்றிய மரங்களை அப்படியே துாக்கி இன்னொரு இடத்தில் நடவு செய்கிறோம்' என்று அரசு சொல்வது பித்தலாட்டம்' என்று, 'பசுமை டேராடூனுக்கான குடிமக்கள் இயக்கம்' தெரிவித்தது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், கொத்தயம் அரளிக்குத்து குளத்தில், சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீராதாரங்களை அழித்து எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தக் கூடாது என, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. 'விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, குளத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்' என்று, அந்த பகுதியை சேர்ந்த 380 விவசாயிகள், ஜூன் 24 அன்று, திண்டுக்கல் கலெக்டரிடம் முறையிட்டனர்.

நீர்நிலை அழிப்பு, பசுமையான மரங்கள் வெட்டி அகற்றல் ஆகியவை வாயிலாக, வெப்பமயமாதல் தான் அதிகரிக்கிறது, உணவு உற்பத்தி குறைகிறது. இந்த பிரச்னையை, எந்த அரசியல் கட்சியும் கையில் எடுத்து நேர்மையாக போராடவில்லை என்பதை மக்கள் கவனித்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் அமைப்புகள், மனித உரிமை போராளிகள், அரசியல்வாதிகளுக்கு அஞ்சுகின்றனர். 'அந்தக்கால' கம்யூனிஸ்டுகளின் வெகுஜன போராட்டம் ஒன்றே, சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியும் என்பது, நிதர்சனமான உண்மை.



கண்ணியம் கெட்டு பல காலம் ஆயாச்சு!


என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக சட்டசபை பொதுக் கூட்டம் போல ஆகி விடக்கூடாது' என்ற கவலையில், அமைச்சர் துரைமுருகன் ஆழ்ந்திருப்பது, உண்மையிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனெனில்,

 எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்தது

 மைக் உடைப்புகள், மேஜை உடைப்புகள்

 ஒரே சமயத்தில், இரண்டு சபாநாயகர்கள் சட்ட சபைத் தொடரை நடத்தியது

 சபாநாயகரை கீழே தள்ளி, அவர் இருக்கையில் எம்.எல்.ஏ., அமர்ந்தது

 சட்டைக் கிழிப்பு, வேட்டிக் கிழிப்பு நடந்தது

 சபைக்கு வெளியே சாலையில், முன்னாள்சபாநாயகரைப் போலவே அமர்ந்து, கிண்டலடித்து நடித்தது

என, எல்லாவற்றையும் மறந்து, முதிர்ந்த எம்.எல்.ஏ.,வாக துரைமுருகன் பேசியிருப்பது, ஆச்சரியத்தைத் தவிர வேறு எந்த உணர்ச்சியை மேலெழச் செய்யும்? இவர் வயதுடைய அல்லது சபையை நெடுங்காலமாக கவனித்து வரும் அரசியல் ஆர்வலர்களுக்கு, இவரின் சேட்டைகள் பற்றி முழுமையாகத் தெரியும்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது, சபையின் கண்ணியமும், மரியாதையுமே தனி தான். கம்பீரமாக காட்சியளித்தது சபை. அதெல்லாம் அந்தக்காலம்.

அந்த கண்ணியம் கெட்டு, பலகாலம் ஆயாச்சு!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us