Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ வினையாகும் விளையாட்டு!

வினையாகும் விளையாட்டு!

வினையாகும் விளையாட்டு!

வினையாகும் விளையாட்டு!

PUBLISHED ON : ஜூன் 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
ரெ.ஆத்மநாதன், சூரிச், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விளையாட்டு என்பது, உடலுக்கு வலு சேர்க்கும் ஓர் உற்சாகப் பொழுதுபோக்கு. அதை ஒரு எல்லையுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். உயிருக்கே உலை வைக்கும் கருவியாக மாற்றிக் கொள்ளக் கூடாது.

கிரிக்கெட் ஐ.பி.எல்., போட்டியில், கர்நாடகாவின் ஆர்.சி.பி., அணி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, 11 பேர் இறந்துள்ளனர்; 33 பேர் காயமடைந்துள்ளனர்.

ஐ.பி.எல்., துவங்கி, 18 ஆண்டுகளுக்குப் பின் அந்த அணிக்கு கிடைத்த வெற்றி இது; ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே!

நம் நாட்டில், விழா ஏற்பாட்டாளர்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறி விடுகின்றனர்.

விபத்துகள் நேர்ந்து, அப்பாவிகள் உயிரிழந்த பின், நிவாரணம் அறிவித்து விட்டு, விசாரணை கமிஷன் ஒன்றையும் போட்டுவிட்டு, அரசு எளிதாகக் கடந்து போய்விடுகிறது. விபத்தில் இறந்தவர்களின், குடும்ப உறுப்பினர்களே, வலியையும், வேதனையையும் அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு இது, ஆயுள் தண்டனையாக மாறி விடுகிறது.

ஆர்.சி.பி.,க்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், மாநில அரசுக்கும் பெருந்தொகையை அபராதமாக விதித்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். இந்த அபராதம், வருங்கால சந்ததியினருக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் விதத்தில், பெருந்தொகையாக இருக்க வேண்டும். செய்யுமா நீதிமன்றங்கள்?



கோடை விடுமுறையை தவிர்க்க வேண்டும்!


ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உச்ச நீதிமன்றத்தில், 70,154 வழக்குகளும், நாடு முழுதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 4.70 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கு இந்த ஆண்டுக்கான விடுமுறை காலம் மே 26 முதல், ஜூலை 14 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அதிகமான கால விடுமுறை. இதுபோலவே மாநில உயர் நீதிமன்றங்களுக்கும் கோடைக்கால விடுமுறை அளிக்கப்படுகிறது.

பெருகி வரும் வழக்குகளின் எண்ணிக்கையால் இந்த விடுமுறைகள், விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

பகுதிநேர வேலை நாட்களின் போது இளம் வழக்கறிஞர்களுக்கு வாதிடும் வாய்ப்பை மூத்த வழக்கறிஞர்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கோடை விடுமுறை தொடர்ந்தாலும், 'பகுதிநேர நீதிமன்ற வேலை நாட்கள்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும், கோடைக்கால அமர்வில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை இரண்டு அமர்வுகளாக செயல்படும் வழக்கத்தை ஐந்து அமர்வுகள் என்று மாற்றியுள்ளார், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்.

மேலும் கோடை விடுமுறையை ஒரு சாக்காக வைத்து, வழக்குகளை தள்ளிப்போடும் வழக்கறிஞர்களையும் சாடியுள்ளார்.

'விடுமுறை காலத்தில் வேலை செய்ய வழக்கறிஞர்கள் விரும்புவதில்லை; ஆனால், வழக்குகள் தேங்கினால் மட்டும் நீதித் துறையையும், நீதிபதிகளையும் குற்றம் சாட்டுகின்றனர்' என தெரிவித்துள்ளார், நீதிபதி கவாய்.

கோடை விடுமுறை என்பது எல்லா அலுவலர்களுக்கும் கிடைப்பதில்லை. வழக்கறிஞர்களும் இதை உணர்ந்து தங்கள் விடுமுறையை தவிர்க்க வேண்டும்.

தினமும், 10 குற்ற வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரும்போது, ஐந்துக்கு மட்டுமே தீர்வு என்றால், நிலுவையில் உள்ள வழக்குகள் எப்படி குறையும்?



மெத்தனமாக இருப்பது அராஜகம்!


அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள், சோகத்தில் முடிவடைவது தொடர் கதையாகி வருகிறது.

சென்னையில், 2024 அக்டோபர் மாதம் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனால் பல ஆண்டுகளுக்குப் பின் விமான சாகச நிகழ்ச்சியை ஓரிடத்தில் காண வேண்டும் என்ற ஆவலில், சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடினர்.

முறையான திட்டமிடல் இல்லாதது, கடுமையான வெயிலின் தாக்கம், குடிநீர் பிரச்னை, நிற்கக்கூட நிழல் தரும் இடமில்லாத நிலை ஏற்பட்டதால், குழந்தைகள், பெண்கள், முதியோர் பட்டப்பாடு சொல்லி மாளாது.

கையில் காசு இருந்தும் குடிக்க நீர் இல்லை. கடும் வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் மயக்கம் அடைந்து பலர் சாய்ந்தனர். ஒரே நேரத்தில் அனைவரும் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு திரும்பியதால் பேருந்துகள், சாலைகள், ரயில்கள் மக்கள் வெள்ளத்தில் திணறின. இப்படிப்பட்ட நிலையில், ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்ச்சி உலகிற்கே ஒரு பாடமாக மாறியது.

ஆனால் அதிலிருந்து பாடம் கற்காமல், அதை பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதத்தில், பெங்களூரில் வெற்றி கொண்டாட்டத்திற்கு, லட்சக்கணக்கான இளைஞர்கள், குடும்பத்தினர்கள் திரண்டனர்.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில், 35,000 பேர் மட்டுமே அமரக்கூடிய இடத்தில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மகிழ்ச்சியாக நடை பெற வேண்டிய ஒரு நிகழ்ச்சி, பெரும் சோகத்தில் முடிவடைந்ததை எண்ணி, யாரை குறை சொல்வது என்றே தெரியவில்லை.

மனிதர்கள் உணர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் எப்போதும் முதலிடம் கொடுப்பர். அந்த விதத்தில் தான் இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் கூடி இருக்கின்றனர். 'ஏன் கூடினீர்கள்?' என்று கேட்பது அறிவிலித்தனமானது.

'ஏன் சரியான முறையில் ஏற்பாடுகளை செய்யவில்லை?' என்று, அரசைக் கேட்கலாம். கூட்டம் அதிகரிப்பதை, காவல் துறையினர், 'சிசிடிவி' கேமரா மூலம் அறிந்திருக்கலாமே! ஏற்பாட்டாளர்கள் இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை? அதிகாரிகள் ஏன் மெத்தனமாக இருந்தனர்? அராஜகம் இது!

முழு பொறுப்பையும், கர்நாடக அரசும், அதிகாரி களும் ஏற்க வேண்டும்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us