PUBLISHED ON : ஜூன் 09, 2025 12:00 AM

கே.ரங்கராஜன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் கமல்ஹாசன்
கதை, திரைக்கதை வசனம் எழுதி, தயாரித்து நடித்த படம், விஸ்வரூபம்!
சிறுபான்மையினர்
மீதான தன் பாசத்தை வெளிக்காட்டும் விதமாக, விஸ்வரூபம் என்ற வார்த்தையை,
உருது எழுத்து வடிவில் வெளியிட்ட மொழி பற்றாளர் கமல்ஹாசன்!
அதேநேரம்,
தங்களுக்கு எதிரான படம் என்று கூறி, படத்தை வெளியிட முஸ்லிம்கள் எதிர்ப்பு
தெரிவித்தபோது, 'இப்படம் வெளியாகவில்லை என்றால், இந்நாட்டை விட்டு
வெளியேறி விடுவேன்' என்று சூளுரைத்த போதே மக்களுக்கு புரிந்துவிட்டது,
இவருக்கு வாயில், 'வாஸ்து' சரியில்லை என்பது!
இந்நிலையில் தான்,
'ஆன்மிக அரசியல் செய்ய போறேன்' என்று கிளம்பினார், நடிகர் ரஜினிகாந்த்.
உடனே, இவர் 'ஊழல் ஒழிப்பு அரசியல்' செய்யப் போவதாக புறப்பட்டு விட்டார்.
மக்கள்
நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியவர், 'ஊழலுக்கு எதிராக பயணிக்க
விரும்புவோர் என்னுடன் வரலாம். இல்லையென்றால் வாசல் கதவு திறந்திருக்கு;
இப்போதே சென்று விடலாம்' என்ற போது, தமிழக மக்களுக்கு அவர் இரட்டை
வேடத்தில் நடித்த இந்தியன் படம் தான் நினைவுக்கு வந்தது.
அப்படத்தில்,
லஞ்சம் வாங்குவோரை தீர்த்து கட்டும், 'இந்தியன் தாத்தா' என்ற சுதந்திர
போராட்ட தியாகி வேடத்திலும், காரியம் ஆக எவருடைய காலையையும் பிடிக்கத்
தயங்காத குணம் கொண்ட அவர் மகன் சந்துரு என, இரு வேடங்களில் கமல்ஹாசன்
நடித்திருப்பார்.
இந்தியன் தாத்தா கதாபாத்திரம்போல், ஊழல் குடும்ப
அரசியலுக்கு எதிராக டார்ச் லைட் அடித்து, புரியாத மொழியில் கமல் பேசவே, 'அட
ஊழலுக்கு எதிராக என்னவோ செய்யப் போகிறார்... இவரால், தமிழகத்தில்
நல்லாட்சி மலர்ந்து விடும்' என்று நம்பியவர்களில் நானும் ஒருவன்!
ஆனால்,
சட்டசபை தேர்தலில் தோற்று, சீட்டுக்காவும், நோட்டுக்காவும் தி.மு.க.,வின்
காலடியில் விழுந்த பின்தான் புரிந்தது... அவர் இந்தியன் தாத்தா இல்ல...
பிரேக் இன்ஸ்பெக்டர் வேலைக்காக, சம்பந்தப்பட அதிகாரியின் வீட்டில்
முறைவாசல் தெளிக்கும் சந்துரு கேரக்டர் என்று!
படத்தில் அதிகாரியில்
வீட்டு வாசலை கூட்டி பெருக்கி தெளித்தார். இப்போது அறிவாலயத்தில்
முறைவாசல் தெளித்துக் கொண்டுள்ளார், ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக!
கடைசியில், தேரை இழுத்து தெருவில் விட்டது போல் ஆனது இவரை நம்பி அரசியலுக்கு வந்தோரின் நிலை!
இளைஞர்களே சிந்தியுங்கள்!
வ.ப.நாராயணன், ஊரப் பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பெங்களூரில் நடைபெற்ற, ஆர்.சி.பி., அணியின் வெற்றி விழாவில் பங்கேற்க, புற்றீசல் போல் பெருகிய ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி, 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தங்களுக்கு பிடித்தவர்களை ரசிக்க வேண்டியதுதான்... அதற்காக, அவர்கள் மீது பித்தாக இருக்க வேண்டுமா?
கூட்ட நெரிசலில் இறந்த அனைவருமே, 40 வயது கூட நிரம்பாதவர்கள்; இன்னும் எத்தனையோ ஆண்டுகள் இந்த உலகில் வாழ வேண்டியவர்கள்.
சினிமா, விளையாட்டு எல்லாம் வெறும் கேளிக்கைகள். பொழுதுபோக்காக மட்டுமே இவைகளை பார்க்க வேண்டுமே தவிர, அவற்றிற்கு அடிமையாகக் கூடாது.
கிரிக்கெட் மட்டும் தான் இங்கு விளையாட்டா... ஏன் இத்தனை போதை, இளைஞர்களிடம்?
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றோர் எத்தனையோ பேர் இருக்கின்றனரே... அவர்களை எல்லாம் ஏன் கண்டுகொள்வதில்லை?
சினிமாவும், கிரிக்கெட்டும் நம் இளைஞர்களை நிதானம் தவற வைக்கிறது!
ரசிகர்களின் இத்தகைய அதீத ஆர்வக் கோளாறால் தான், தற்போது கிரிக்கெட், பணம் காய்க்கும் ஒரு சூதாட்டமாகவே மாறிவிட்டது.
இப்போது பாருங்கள்... கிரிக்கெட் வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில், 11 பேர் தங்கள் உயிரை இழந்துஉள்ளனர்.
பாராட்டு விழாவை, நம் வீட்டு தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கக் கூடாதா?
கோப்பையை வென்றதால் அவர்களுக்கு பாராட்டும், பரிசுகளும் கிடைக்கின்றன. அதைப் பார்ப்பவருக்கு என்ன பலன்? நயா பைசா லாபம் உண்டா?
சிந்திக்க வேண்டும் இளைஞர்கள்!
ராமதாஸ் எப்படி மறந்து போனார்?
சுக.மதிமாறன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் அரசியல் கட்சிகளில் ஏற்பட்ட பல பிளவுகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கண்ட ராமதாஸ், தற்போது, தன் மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் கூறி, ஊடகங்களுக்கு தலைப்புச் செய்தியாகி உள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவை, 'விதவை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்' என்று கூறிய கருணாநிதி, அதே இந்திராவை, 'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக' என்றார்.
இதுதான் அரசியல்வாதிகளின் நிலையான கொள்கை!
கூட்டணிகள் முறியும் போதும், கட்சிகள் உடையும் போதும் இருதரப்பினரும் மாறி மாறிப் பேசிய வசை மொழிகளை எல்லாம் மறந்து தான், கூட்டணி அமைத்து தேர்தல் களம் காண்கின்றன, கட்சிகள்.
இதற்கு ராமதாஸ் ஒன்றும் விதிவிலக்கு அல்ல... தேர்தலுக்கு ஒரு கூட்டணி வைத்து லாபம் அடைந்தவர் தான்.
உண்மை இவ்வாறு இருக்க, தான் மேற்கொண்ட சத்தியத்தை மீறி அன்புமணியை அமைச்சராக்கியது தவறு என்கிறார்.
அன்புமணியை அமைச்சராக்கியது தவறு என்று இன்று கூறும் ராமதாஸ், அதை பொதுவெளியில் கூறுவதன் வாயிலாக, தான் சத்திய சித்தர் என்று நிரூபிக்க துடிக்கிறாரா?
அப்படியே இருந்தாலும், கடைக்கோடி பா.ம.க., தொண்டனுக்காக அவர், தற்போது தன் மகனோடு மல்லுக்கட்டவில்லையே?
எனவே, வேண்டாத இந்த விரிசல் பேச்சால் பாதிக்கப்படுவது கட்சியின் கட்டமைப்பே!
'நீரடித்து நீர் விலகாது' என்பது போல், தந்தை - தனயன் கருத்து மோதல், நாளை அன்பு பிணைப்பாக மாறிவிடும். ஆனால், கட்சி இரு பிரிவாக பிரிந்து போனால், பல கிளைகளாக சிதறிப்போகும்.
மீண்டும் அதை கட்டியெழுப்ப முடியாது என்பதை, அரசியல் அனுபவம் வாய்ந்த ராமதாஸ் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வயது முதிரும் போது, நிதானம் அவசியம்!