Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ உளவு துறையினரை 'உள்ளே' போட்டால் போதும்!

உளவு துறையினரை 'உள்ளே' போட்டால் போதும்!

உளவு துறையினரை 'உள்ளே' போட்டால் போதும்!

உளவு துறையினரை 'உள்ளே' போட்டால் போதும்!

PUBLISHED ON : ஜூன் 25, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
மரகதம் சிம்மன், கலிபோர்னியா, அமெரிக் காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை, 50 பேருக்கு மேல் உயிரிழந்து இருக்கின்றனர். இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றனவோ தெரியவில்லை.

தேர்தலுக்கு முன் தி.மு.க.,வினர், படிப்படியாக மதுக்கடைகளை மூடி விடுவோம் என்று கூறி ஓட்டுக் கேட்டனர். இப்போது ஒரேயடியாக, அனேகம் பேர் உயிர் இழந்திருக்கின்றனர்.

ஒரு முறை கள்ளச்சாராயம் காய்ச்சி பணம் பார்த்தவர்கள், சும்மா இருக்க மாட்டர். மறுபடியும் தங்கள் வேலையை, இன்னும் வீரியத்துடன் வேறு இடத்தில் துவங்குவர். உளவுத் துறையினர் கவனமாக இருந்து, சாராயம் காய்ச்சுபவர்களை தொடர்ந்து கண்காணித்துப் பிடிக்க வேண்டும்.

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதில் பலனில்லை. எதுவுமே பலனளிக்கவில்லை எனில், உளவுத் துறையினரைப் பிடித்து, 'உள்ளே' போட வேண்டும்.



கிளம்பியது அ.தி.மு.க., சிங்கம்!


பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி, சிதம்பரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சி துவங்கி, மூன்று ஆண்டுகள் முடிந்து, நான்காவது ஆண்டில் தான், நமக்கு ஒரு எதிர்க்கட்சி இருப்பதே தெரிகிறது என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை ஒட்டி, பல அதிரடி சம்ப வங்களைச் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய துயர சம்பவம் நடந்துள்ளது. அங்கு யார் முதலில் சென்றிருக்க வேண்டும்? நம் முதல்வர். ஆனால் அவர் வரவில்லை. 'இதோ நான் வருகிறேன்' என, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி களமிறங்கினார்.

மக்களோடு மக்களாக நின்று துயர் கேட்டு, கண் கலங்கி நின்றார். இக்காட்சிகள் சோஷியல் மீடியாவில் கொழுந்து விட்டு எரிந்தன.

அதன் பின் தான், மற்ற கட்சிகள் ஒவ்வொன்றாக வரத் துவங்கின. தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள், நல்ல பிள்ளைகளாக, ஏதோ வந்தோம், பார்த்தோம், நான்கு கருத்தைச் சொன்னோம் என்று சென்று விட்டன. கடமை முடிந்தது; கூட்டணி தர்மம் நிலைத்தது!

ஆனால், பழனிசாமியின் செயல்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டது. அமைச்சர்களை அனுப்பி, அவர்கள் சொல்வதைக் கேட்டு, சட்டசபையில் விஷயத்தைப் பேசி சிலாகித்துக் கொண்டதோடு, இறந்தோர் குடும்பத்துக்கு ரொக்கம், கல்வி உதவி என, தனக்குத் தெரிந்த வகையில் அறிவித்து ஆறுதல் அடைந்து கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

சீறி எழுந்துள்ள அ.தி.மு.க., சிங்கம், இன்னும் என்னென்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!



ஆசிரியர் தேர்வு வாரியம் அலட்சியம்!


ஆ.லாரன்ஸ், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட, 40,000 தேர்வர்களுக்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வு வினாத்தாள், கடினமாக இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்திய தேர்வு வாரியம்,சரியான வினாக்களை எடுப்பதில் அலட்சியம் காட்டிவிட்டது.

ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது, 10 வினாக்களுக்கு மேல் தவறான வினாக்கள் கேட்கப்பட்டு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கி, தன் தவறை கெட்டிக்காரத்தனமாக திருத்திக் கொண்டது.

பணிக்கான வாய்ப்பை, ஒரு மதிப்பெண்ணில் தவறவிடும் தேர்வர்கள் மத்தியில், வினாக்களைத் தவறாக கேட்பது, எவ்விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.

தமிழகம் முழுதும் இத்தேர்விற்காக இரவு -- பகல் பாராமல் தன்னை தயாரித்த தேர்வர்களுக்கு, தேர்வறையில் உளவியல் ரீதியாக இத்தகைய வினாக்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை உணர,இந்த விடியல் அரசுக்கு நேரமில்லையா?

தேர்வு வாரியமும், தன் தவறை இன்று வரை உணராமல், தவறான வினாக்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி, சான்றிதழ் சரிபார்ப்பையும் முடித்து, தன் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டது.

விடியல் என்பது, ஆட்சியாளர்களுக்கு மட்டுமே; ஆசிரியர்களுக்கு இல்லை என்பதை உணர முடிகிறது.

கடந்த, 2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 2024ல் நியமனத் தேர்விலும் தேர்ச்சி பெற்றும், பணிவாய்ப்பு கிடைக்காத ஆசிரியர்களுக்கு இன்னும் விடியல் கிடைக்கவில்லை; கிடைக்கப் - போவதும் கிடையாது. இதுபோன்ற தவறுகளுக்கு, நீதிமன்றத்திலாவது நல்ல முடிவு கிடைக்க வேண்டும்.



தோலுரித்தால் தான் நிலைமை சீராகும்!


அ.குணா, கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2023ல், விழுப்புரம் மற்றும் எக்கியார்குப்பத்தில், கள்ளச்சாராயம் குடித்து, 23 பேர் உயிர் இழந்தனர்.

அந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., தான் விசாரித்தது; ஆனால், இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.

அந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த எந்த காவல் துறை அதிகாரியும், கைது செய்யப்பட்டதாகவோ அல்லது குற்றவாளிகளாக அந்த வழக்கில் சேர்க்கப்பட்டதாகவோ விபரம் இல்லை.

அந்த வழக்கில், காவல் துறை அதிகாரிகள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தால், மீண்டும் ஒரு கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்திருக்காது.

தற்போதும் தமிழக அரசு, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளைக் காப்பாற்ற, அவசர அவசரமாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோ என்று நினைக்க வைக்கிறது.

தற்போதைய சம்பவத்தில் குற்றவாளிகளை இறுகப் பிடித்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தால் தான், இனி வரும் காலங்களில், கள்ளச்சாராய உயிரிழப்பைத் தடுக்கலாம்.

கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க முனைந்தால், இதை ஒரு முன்னுதாரண வழக்காக வைத்து, திறம்படச் செயல்பட்டு, போதை வியாபாரிகளை, 'உள்ளே' தள்ளலாம்.

காவல் துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களையும், போலிஸ் உயர் அதிகாரிகள் உதவியுடன், கையும் களவுமாகப் பிடித்து, அவர்கள் பெயரிலும், அவர்கள் குடும்ப உறவுகள் பெயரிலும் வருமானத்திற்கு மீறி அதிகமாக வாங்கி குவித்து உள்ள சொத்துக்களை கைப்பற்றி தோலுரித்தால் தான், அனைத்து விபரங்களும் வெட்ட வெளிச்சமாகும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us