மோடிக்கு பெரும்பான்மை தராதது தவறு!
மோடிக்கு பெரும்பான்மை தராதது தவறு!
மோடிக்கு பெரும்பான்மை தராதது தவறு!
PUBLISHED ON : ஜூன் 24, 2024 12:00 AM

செ.சரவணன், சென்னையில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 10 ஆண்டு காலமாக எந்தவித
குறைபாடும் இல்லாமல், எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்காமல், தேச முன்னேற்றம்
ஒன்றையே குறிக்கோளாக வைத்து, நாட்டை வழிநடத்தியவர் பிரதமர் மோடி. கொரோனா
போன்ற இக்கட்டான கால கட்டங்களிலும், தடுப்பூசிகளை இலவசமாக மக்களுக்கு
வழங்கி, 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்றியவர் அவர்.
உலகமே
மெச்சக்கூடிய வகையில் ஆட்சி செய்து, உலகில் சூப்பர் பவர் நாடாக இந்தியாவை
உயர்த்த, உன்னத லட்சியத்துடன் பாடுபட்ட மோடிக்கு, இந்த தேர்தலில்,
பெரும்பான்மைக்கும், 32 இடங்கள் குறைவாகவே, இந்திய மக்கள் அளித்துள்ளனர்.
இதில், நம் தமிழக மக்களின் பங்கும் உண்டு.
அவர் மட்டும்
பெரும்பான்மை பெற்றிருந்தால், நமக்கும், நம் சந்ததிக்கும், நம்
நாட்டிற்கும் தானே நன்மை. மோடி ஆட்சியில் கிடைத்த அனைத்து வித
சலுகைகளையும், உரிமைகளையும் அனுபவித்து விட்டு, இம்முறை அவருக்கு தனிப்
பெரும்பான்மை கொடுக்காமல், மற்ற கட்சிகளின் தயவில் மோடி ஆட்சியை தொடரச்
செய்தது நியாயம் தானா?
நம் நாட்டின் வளர்ச்சியையும், தேச
பாதுகாப்பையும், லஞ்ச லாவண்யமற்ற அரசையும் விரும்பாத சிலரின் சூழ்ச்சிக்கு
ஆளானவர்கள், மோடி ஆட்சி அமையாமல் போயிருந்தால், நாட்டுக்கு ஏற்படும் கஷ்ட
நஷ்டங்களை உணர்வரா?
தற்போது, தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள
கட்சிகள், மோடியின் ஆட்சி ஐந்தாண்டுகள் நீடிக்க உறுதுணையாக இருக்குமா
என்பதை உறுதியாக சொல்ல முடியாது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம்
போன்ற அதிரடியான முடிவுகளை மோடி எடுக்க நினைத்தாலும், ஓட்டு வங்கியை மனதில்
வைத்து, கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்குமே.
எனவே, பிரதமர் மோடிக்கு எதிராக நாம் செலுத்திய ஒவ்வொரு ஓட்டும், நமக்கு நாமே வைத்துக் கொண்ட ஆப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
சுதாரிக்கணும் பழனிசாமி!
என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அ.தி.மு.க.,விலிருந்து தனியே பிரிந்து சென்றவர்களுக்குப் பின், 1 சதவீதம் அதிகமாக ஓட்டு வாங்கியுள்ளோம். இதனால், அ.தி.மு.க., எப்போதும் இருப்பது போல பலமாகத் தான் இருக்கிறது' என்கிறார் பழனிசாமி.
தி.மு.க., கூட்டணி, 2019ல் பெற்ற ஓட்டுகளை விட, 2024ல் 6.59 சதவீதம் குறைவாகத் தான் பெற்றுள்ளது. பா.ஜ., கூட்டணி, சென்ற லோக்சபா தேர்தலில் வாங்கிய ஓட்டுகளை விட, 0.2 சதவீதம் குறைவாகத் தான் பெற்றுள்ளது' என்று புள்ளி விபரங்களை அடுக்கி, அ.தி.மு.க., அடைந்த தோல்வியை ரொம்ப சாதுர்யமாக பழனிசாமி மறைத்துள்ளார்.
தமிழக மக்கள், லோக்சபா தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போட்டாலும், சட்டசபை தேர்தலில் அதே கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போட மாட்டர்.
எனவே, 2026ல் நடைபெறப் போகும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பழனிசாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இறங்கப் போகிறது. கமல் கட்சி எதனுடன் ஒட்டிக் கொள்ளுமோ தெரியவில்லை. எனவே, போட்டி கடுமையானதாகத் தான் இருக்கும்.
தன் கட்சியில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர் என, பழனிசாமி சொன்னது, 'கப்சா' என வெட்டவெளிச்சமாகப் புரிந்து விட்டது.
இந்தப் பக்கம் தி.மு.க.,வோ, 200 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் சொல்கிறார். கூட்டணி வலுவாக உள்ளதால், அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
எதற்கு இவ்வளவு சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், 'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்ற ரீதியில் பழனிசாமியின் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது என்பதற்காகத் தான்.
சுதாரிப்பது நல்லது!
சசிகலா 'அளந்து விடுவது' ஏற்புடையதல்ல!
எம்.நாகராஜன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மனித கடவுள் எம்.ஜி.ஆருடன் அரசியல் பேசியதாகவும், மறைந்த ஆர்.எம்.வீரப்பன், அரசியல் ரீதியாக ஜெ.,வுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், சசிகலா திருவாய் மலர்ந்தருளிஉள்ளார்.
இது குறித்து, சில உண்மை தகவல்களை பார்க்கலாம்...
எம்.ஜி.ஆர்., 1984ல் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது, தமிழகத்தில் தி.மு.க.,வினர் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதாவது, எம்.ஜி.ஆர்., மறைந்து விட்டதாகவும், தமிழகத்தில் அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஜெயிப்பதற்காக, அவர் உயிருடன் இருப்பதாக அ.தி.மு.க., தரப்பு கதை கட்டுவதாகவும் கூறினர்.
இதை முறியடிக்க திட்டமிட்ட ஆர்.எம்.வீரப்பன், அமெரிக்க மருத்துவமனையில், டாக்டர்களுடன் எம்.ஜி.ஆர்., பேசியது, அவர் உணவு சாப்பிடுவது மற்றும் பேப்பர் படிப்பது போன்றவற்றை வீடியோக்கள் எடுத்து, தமிழகம் முழுதும் டெம்போ வேன்களில் அந்த வீடியோவை போட்டு காட்டினார். இதன் வாயிலாக எம்.ஜி.ஆர்., உயிருடன் இருப்பதை உணர்ந்த தமிழக மக்கள், மீண்டும் அ.தி.மு.க.,வையே ஆட்சி கட்டிலில் அமர்த்தினர். இது வரலாற்று உண்மை.
சினிமாவிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆருக்கு கடைசி வரை உறுதுணையாக இருந்தது ஆர்.எம்.வீரப்பனும், கே.ஏ.கிருஷ்ணசாமியும் தான். இவர்கள் இருவரும், எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் ஜானகி அணியில் இருந்தனர்.
ஜெ., 1982ல் தான் அ.தி.மு.க.,வுக்குள் வந்தார். அப்போது, அவருக்கு மிகவும் சீனியர் ஆர்.எம்.வீரப்பன். 1987ல் எம்.ஜி.ஆர்., காலமாகி விட்டார். இடையில் ஐந்து ஆண்டுகளில் ஆர்.எம்.வீரப்பன், ஜெ.,வுக்கு தொந்தரவு கொடுக்கவும் இல்லை. எம்.ஜி.ஆருக்கு அடுத்த நிலையில் இருந்த அவருக்கு அதற்கான அவசியமும் இல்லை.
எம்.ஜி.ஆரை சசிகலா பார்த்திருக்கலாம். காரணம், அவரது கணவர் நடராஜன், அரசு அதிகாரியாக முக்கிய பொறுப்பில் இருந்த வகையில், எம்.ஜி.ஆரை எங்காவது பார்த்திருக்கலாம். அதற்காக, 'அவருடன் அரசியல் பேசினேன்' என, 'அளந்து விடுவது' ஏற்புடையதல்ல.
தற்போது வரை, எம்.ஜி.ஆருடன் சசிகலா இருப்பது போன்ற எந்த படத்தையும் யாரும் பார்த்தது இல்லை. எனவே, மறைந்தவர்கள் வந்து மறுக்கவா போகின்றனர் என்பதற்காக, சசிகலா இஷ்டத்துக்கு பேசுவது முறையல்ல!