ஆட்சியை பிடிப்பது எட்டாக்கனி தானோ?
ஆட்சியை பிடிப்பது எட்டாக்கனி தானோ?
ஆட்சியை பிடிப்பது எட்டாக்கனி தானோ?
PUBLISHED ON : ஜூலை 11, 2024 12:00 AM

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போலி ஆவணங்கள் வாயிலாக, மற்றவர்களின் நிலங்களை அபகரித்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கைது நடவடிக்கைகளுக்கு பயந்து ஓடி ஒளிந்து விட்டார். போலி ஆவணங்கள் வாயிலாக, கிட்டத்தட்ட 100 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, இவரும், இவர் தம்பியும், கூட்டாக சேர்ந்து, 'ஆட்டை' போட்டுள்ளனர்.
'தந்தையின் உடல்நிலை மோசமாக உள்ளது; அவரை அருகிலிருந்து நான் கவனித்துக் கொள்ள வேண்டும்; எனவே ஜாமின் வழங்க வேண்டும்' என்று இவர் அளித்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இப்பேர்ப்பட்ட யோக்கியரான விஜயபாஸ்கரை கைது செய்ய, 100 போலீசாரை ஏன் அனுப்ப வேண்டும், விஜயபாஸ்கர் மீது போடப்பட்டிருப்பது சாதாரண சிவில் வழக்கு தானே என்று, நியாயம் பேசுகிறார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.
போலி ஆவணங்கள் வாயிலாக, அப்பாவிகளின் நிலங்களைக் கொள்ளை அடிப்பது, பழனிசாமிக்கு குற்றமாகத் தெரியவில்லை.
விஜயபாஸ்கர் நேர்மையானவர் என்றால், போலீசாரின் கைது நடவடிக்கை களுக்குப் பயந்து ஏன் ஓடி ஒளிய வேண்டும்? தன் மீது போடப்பட்ட வழக்கை, நீதிமன்றத்தில் துணிந்து சந்திக்க வேண்டியது தானே?
எதையும் சட்டப்படி சந்திப்போம் என்று வாய்ச்சவடால் விடும் இவர், பொய்யான காரணங்களைக் கூறி, ஏன் ஜாமின் கேட்க வேண்டும்?
'அப்பாவிகளை பயமுறுத்தி, குறைந்த விலையில் அவர்களின் மனைகளை வாங்கிக் குவித்தவர், இவர் கட்சியில் சின்னம்மாவாக வலம் வந்தார்' என்று பேசுபவர்களும் உண்டு.
அதை உறுதிபடுத்தும் விதமாக, அளவுக்கு அதிகமான சொத்து குவிப்புக்கான தண்டனையாக, நான்கு ஆண்டுகள், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 'கம்பி' எண்ணியும் வந்து விட்டார் அவர்.
பழனிசாமி மீதே, டெண்டர் வழக்குகள் நிறைய இருக்கின்றன.
நேர்மையான ஆட்சியை தமிழக மக்களுக்கு அளிக்கத் தான், அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., தொடங்கினார். ஆனால் அவரது எண்ணம், இப்பேர்ப்பட்ட ஊழல்வாதிகளால் நிறைவேறாமல் போய்விட்டது.
போகிற போக்கைப் பார்த்தால், 2026ல் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது எட்டாக்கனி தான் போலிருக்கிறது.
சட்டம் -- ஒழுங்கு நிலை கவலைக்கிடம்!
வெ.சீனிவாசன்,
திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசிய கட்சியான
பகுஜன் சமாஜின் தமிழக தலைவர், மாநில தலைநகரில் அந்தி சாயும் நேரத்தில்,
மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலை என்றால், சாமானியமக்களின் கதி என்ன என்று, நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
சில
நாட்களுக்கு முன், அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொலை
செய்யப்பட்டார். ஆளும் கட்சியினரின், காவல் துறையினரின் ஒத்துழைப்பு
இல்லாமல் நடைபெற முடியாத கள்ளச்சாராய வியாபாரத்தில், 60க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்தனர்.
ஆளுங்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் போதை சப்ளையில் மிக முக்கிய புள்ளியாக செயல்பட்டவர்.
இத்தகைய
கொடுமைகள் நாளுக்கு நாள் நடந்து வந்தாலும், இவற்றை எதிர்த்து வலிமையாகக்
குரல் கொடுக்க, தமிழக அரசியல் கட்சி எதற்குமே திராணி இல்லை என்பது வேதனையான
விஷயம்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு, ஐ.சி.யு.,வில் உள்ளது
என்பதற்கு இது போன்ற உதாரணங்களே போதும். தி.மு.க., ஆட்சி என்றாலே இது போன்ற
சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான் என்பது, மக்களின் அனுபவம்.
தமிழக அரசு பாரபட்சமின்றி, சட்டம் - ஒழுங்கை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்பவர்களை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
நிகழவிருக்கும் வன்முறைச் சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லது செய்வாரா ரயில்வே அமைச்சர்?
எஸ்.கோபாலகிருஷ்ணன்,
பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் இருந்து எழுதுகிறார்: சமீபத்தில்
இப்பகுதியில் காட்டாங்கொளத்துார் வாசகர், வி.சி.கிருஷ்ண ரத்னம் எழுதிய,
'மீண்டும் வேண்டும் முதியோர் கட்டண சலுகை' கடிதத்தை நானும் வரவேற்கிறேன்.
பிரதமர்
மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில்,
முதியோரைப் பேணிக் காப்பதில் மேலும் அக்கறை கொள்ள வேண்டும் என்பது என்
போன்றோரின் எதிர்பார்ப்பு.
எனக்கு, 80 வயதாகிறது. இந்தியன் ரயில்வே,
மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை நீக்கி, 5,875 கோடி ரூபாய் கூடுதல்
வருவாய் ஈட்டியுள்ளதாகக் கூறுகிறது.
சமீப காலமாக, பல ரயில்களில்,
டிக்கெட் வாங்காமல் நெடுந்துார பயணம் செய்வோர், ரிசர்வ்டு பெட்டிகளிலும்
ஏறி, மற்ற பயணியருக்கு தொல்லை கொடுக்கின்றனர் என, செய்திகள் வெளியாகின்றன.
இப்படி
டிக்கெட்டே வாங்காமல் செல்வோரை ரயில்வே அதிகாரிகள் எப்படி, 'மிஸ்'
செய்கின்றனர் எனத் தெரியவில்லை. அவர்களுக்கான கட்டணத்தை முறையாக வசூல்
செய்தால், என் போன்ற, வாழ்நாள் முழுதும் அரசுக் கென லட்சம் லட்சமாய் வரி
கட்டி, மூப்பு தட்டியவர்களுக்கு சலுகை கொடுக்க ஏதுவாக இருக்குமே!
முதியோரில்
பெரும்பாலோர், பெற்ற பிள்ளைகளை நம்பி காலம் நடத்துபவர்களே. அவர்களுக்கு,
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நல்லது செய்வாரா?
அரசியல் அனாதைகளாகி விட்டோம்!
ஆர்.
நடராஜன், கே.கே. புதுார், கோவை மாவட்டத்தில்இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: கடந்த,1967க்கு பின், நம் மாநிலத்தை இரண்டே இரண்டு
திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து, தீராக் கடன் என்ற புதைகுழியில்
நம்மைத் தள்ளிவிட்டன.
மாணவ - மாணவியரிடம் ஒழுக்கமின்மையை பரவச்
செய்து, அவர்களை கஞ்சா போதைக்கு அடிமை யாக்கி, எந்த விதத்திலும் யாரும்
முன்னேறிவிட்டால் இந்த இரு கட்சியினரும் கொள்ளை கொள்ளையாக சம்பாதிப்பதில்
சிக்கல் என்று நினைத்து, திட்டம் போட்டு, நம்மை சீரழித்து விட்டனர்.
இந்த
நிலையை மாற்றி, ஒழுக்கசீலராக, நம் இளைய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு
வித்திடுவார் என்ற நம்பிக்கையில், நடிகர் விஜய் துவக்கியுள்ள கட்சியை
ஏற்றுக் கொள்ள தயாரானோம்.
ஆனால், முதல் சில நாட்கள், 'ஆஹா... ஓ
ேஹா...' என பேசியவர், 'நீட்' தேர்வுக்கு இவர் எதிர்ப்பு தெரிவிக்கத்
துவங்கியதும், தி.மு.க.,வினர் இவரைத் தலையில் துாக்கிக் கொண்டாடத் துவங்கி
விட்டனர்.
சுயநலம் என்கிற, ஹீரோக்களுக்கே உரித்தான குணத்துடன், ஏழை மாணவர்களை பாழும் கிணற்றில் தள்ளத் தீர்மானித்து விட்டார் விஜய்.
ஆக... வழக்கம் போல் நாம், அரசியல் அனாதைகளாகி விட்டோம்.