PUBLISHED ON : ஜூலை 10, 2024 12:00 AM

ரா.ராகவன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிலருக்கு வாயில் வார்த்தையும், கையில் 'மைக்'கும் கிடைத்து விட்டால் போதும்; என்ன பேசுகிறோம், எதற்குப் பேசுகிறோம் என்று புரியாமல், வார்த்தைகளை அள்ளி வீசுவர்.
அப்படி ஒரு வார்த்தை வீச்சை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அள்ளி வீசி இருக்கிறார்.
'இந்தியாவை ஒரு மனிதன் மட்டுமே ஆளும் நாடாக மாறி விடுமோ என பயந்தோம். பா.ஜ.,விற்கு 400 இடங்கள் கிடைத்து இருந்தால், அந்த நிலை ஏற்பட்டு இருக்கும். இண்டியா கூட்டணிக்கும் கூடுதலாக 25 எம்.பி.,க்கள் கிடைத்திருந்தால், ஆட்சி அமைத்திருக்கலாம்.
'மனித உரிமை, சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்போம். அரசியல் சாசனத்தை திருத்தும் எண்ணம் பா.ஜ.,விற்கு இருந்தால், அதை நிறைவேற்ற விட மாட்டோம். ஒரு நாடு, ஒரு தேர்தல், பொது சிவில் சட்டம் நிறைவேற்ற விடமாட்டோம்' எனக் கூறி இருக்கிறார்.
இந்திரா காலத்தின் அவசரநிலையை அவர் மறந்து விட்டார் போலும்!
அந்த அவசரநிலை எதற்காக அறிவிக்கப்பட்டது? வெள்ளமோ, வறட்சியோ, பஞ்சமோ ஏற்பட்டு மக்கள் உண்ண உணவும், உடுக்க உடையும், படுக்க இடமும் இன்றி தவித்து தத்தளித்துக் கொண்டிருந்தனரா... இல்லை.
இந்திரா, அலகாபாத் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என, உ.பி., உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. அதற்கு தான் அந்த எமெர்ஜென்சி; அவசரநிலை பிரகடனம்.
அந்த அவசரநிலை காலத்தில், நாட்டில் நடந்த கொடுமைகளை விஸ்தாரமாக விவரிக்க இங்கு இடமில்லை.
தொடர்ந்து இரண்டு முறையும், தற்போது மூன்றாவது முறையாகவும் வென்று ஆட்சியில் அமர்ந்துள்ள பிரதமர் மோடி, சர்வாதிகாரியாக மாற, 400 இடங்கள் கிடைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் இன்று நினைத்தால் கூட, அவசரநிலையை அறிவிக்கலாம்; ஆனால், செய்ய மாட்டார்.
ஜனநாயகத்தின் அருமையை நன்கு மோடி உணர்ந்திருப்பதால் தான், மேற்படி வார்த்தைகளை அள்ளி வீசிய சிதம்பரம், இன்று சுதந்திரமாக இருக்கிறார்.மக்கள் மறக்கவில்லை, மேற்படி நபர் திஹார் சிறையில் இருந்த நாட்களை!
செங்கோல் எதிர்ப்பை ஆதரிப்பது சரியா?
ஏ.வி.ராமநாதன்,
சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:எந்நாளும் நீதி வழுவாத
ஆட்சியை நினைவூட்டும், வலியுறுத்தும் செங்கோலின் முக்கியத்துவம் அறியாமல்,
சமாஜ்வாதி கட்சியினர், அது தமிழர் முடியாட்சியின் அடையாளம் என்றும்,
இன்றைய ஜனநாயகத்திற்கு பொருந்தாது என்றும் கூறி, அதை அகற்ற சொன்னது கொடுமை
என்றால், அவர்களது கூட்டணியில் இருக்கும் தி.மு.க.,வினர் பதிலடி
கொடுக்காதது மட்டுமின்றி, அதை ஆதரிப்பது இன்னும் பெரிய கொடுமை.
திராவிட செம்மல்களுக்கு, அவர்களது பிடிவாதமான செங்கோல் எதிர்ப்பு கொள்கைக்கு வலுவூட்ட மேலும் சில ஆலோசனைகள்:
பிரிட்டன்
முடியாட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட கிழக்கு இந்தியகம்பெனி, சென்னையில்
கட்டிய புனித ஜார்ஜ் கோட்டையில் தான் தமிழக தலைமை செயலகமும், சட்டசபையும்
இன்று இயங்கி வருகின்றன. அக்கோட்டை வளாகம், முடியாட்சியின் அடையாளமாக
இருப்பதாக கருதி, தலைமை செயலகம் மற்றும் சட்டசபை இயங்கும் இடத்தை
வேறிடத்திற்கு மாற்றலாம்.
திருக்குறளில் செங்கோன்மை, கொடுங்கோன்மை
அதிகாரங்களில், செங்கோல் ஆட்சியின் நன்மைகளையும், கொடுங்கோலர்கள்
விளைவிக்கும் தீமைகளையும் விரிவாகவும், தெளிவாகவும் திருவள்ளுவர் எடுத்து
கூறியிருக்கிறார். அவை எல்லாருக்கும், என்றும் பொருந்தும் கருத்துக்கள்
என்ற உண்மையை உள்வாங்கிக்கொள்ளாமல், அவை இன்றைய ஜனநாயகத்திற்கு சற்றும்
பொருந்தாத முடியாட்சி கொள்கை என்று சொல்லி, மாணவர்களுக்கான
பாடத்திட்டத்தில் இருந்து அவற்றை நீக்கி விடலாம்.
முடியாட்சி
மன்னர்களின் பெயர்களை தாங்கி நிற்கும் சுந்தர பாண்டியபுரம், வீரபாண்டி,
சோழவரம், சோழவந்தான், கங்கை கொண்ட சோழபுரம், சேரன்மகாதேவி, மாமல்லபுரம்
போன்ற ஊர்களின் பெயர்களையும் மாற்றி விடலாம்.
கடைசியாக, மாநகராட்சி கூட்டங்களில் செங்கோல் பயன்படுத்தப்பட்டு வருவதையும் தடை செய்யலாம்.
அதீத நட்பு உறவுக்கு கேடு!
அ.ரவீந்திரன்,
குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியாக இருந்தபோது தெரியாத பல உண்மைகள், உறவு
முறிந்த பின் தெரிய வந்துள்ளன.
தமிழகத்தில் பா.ஜ., அரசியல் பண்ண,
ஒட்டுண்ணி போல் மாநில கட்சிகள் தயவை நாடி வாழ்ந்துள்ளது. பா.ஜ., பல
ஆண்டுகளாக பல தலைவர்களை கண்டாலும், வளர்ச்சி பெரியளவில் இல்லை.
பா.ஜ.,
மாநில தலைவராக அண்ணாமலை வந்த பின், அக்கட்சி, மக்கள் மனதில் துளிர்க்க
ஆரம்பித்தது; இது திராவிட கட்சி களுக்கு பெரிய தலைவலியாக மாறும் முன்,
பா.ஜ.,வை தமிழகத்தில் எந்த ரூபத்திலும் வளர விடக்கூடாது என, அ.தி.மு.க.,
பொதுச்செயலர் பழனிசாமி சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்க்கிறார்.
உடனே, பா.ஜ.,வினரினருக்கு எரிச்சல் கிளம்பி, பதிலடியாக, 'அ.தி.மு.க., ஊழல் கட்சி' எனப் பேச, உறவுக்கு உலை வைத்ததாக அமைந்துவிட்டது.
உண்மையில், 'பா.ஜ., வளர, நாம் ஏணியாகி விட்டோமோ...' என்ற பயத்தில், அண்ணாமலையைத் திட்டித் தீர்க்கிறார் பழனிசாமி.
அண்ணாமலை,
தி.மு.க.,வினரைத் தாக்கி, ஊழல் பட்டியல்களை வெளியிடப் போவதாகக் கூறிய
காலத்தில், 'ஆஹா... தி.மு.க.,வினர் 'உள்ளே' போனால், நாம் ஆட்சியில்
அமர்ந்து விடலாம்' என கனவு கண்டார் பழனிசாமி; ஆனால், ஊழல் பட்டியலும்
வெளியாகவில்லை; பழனிசாமியிடமும் நட்பு பாராட்டாமல், திட்டித் தீர்த்தார்
அண்ணாமலை.
கூட்டணி இல்லை என்று முடிவானபின், 'அண்ணாமலை வடை சுடுகிறார்' என பழனிசாமிஎகிற, 'நம்பிக்கை துரோகி' என்கிறார் அண்ணாமலை.
தன்னை
முதல்வர் ஆக்கிய சசிகலாவை ஓரங்கட்டியது, ஆட்சி கவிழாமல் நிலைத்து நிற்க
உதவிய ஓ.பி.எஸ்.,சை, காரியம் முடிந்ததும் துாக்கி அடித்தது என்று,
பழனிசாமியின் நடத்தையைப் பார்த்தால், அண்ணாமலை சொல்வது உண்மையோ என்று தான்
நினைக்கத் தோன்றுகிறது.
'அதீத நட்பு உறவுக்குக் கேடு' என்பது, பா.ஜ.,வினர் கற்றுக் கொண்ட பாடம்.