Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/40 ஆண்டுகளுக்கு பின் திரும்பிய மகன்; அன்னையர் தினத்தில் இணைந்த தாய், மகன்

40 ஆண்டுகளுக்கு பின் திரும்பிய மகன்; அன்னையர் தினத்தில் இணைந்த தாய், மகன்

40 ஆண்டுகளுக்கு பின் திரும்பிய மகன்; அன்னையர் தினத்தில் இணைந்த தாய், மகன்

40 ஆண்டுகளுக்கு பின் திரும்பிய மகன்; அன்னையர் தினத்தில் இணைந்த தாய், மகன்

Latest Tamil News
ஆண்டிபட்டி : சென்னையில் சிறு வயதில் பெற்றோரை பிரிந்து சென்று 40 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய மகனை கண்டு அவரது தாயார், உறவினர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கதிர்நரசிங்கபுரம் தம்பதி நடராஜன் - ருக்குமணி. மகன்கள் குமார், செந்தில், முருகன். 1985ல் சொந்த ஊரில் இருந்து குடும்பத்துடன் இத்தம்பதி சென்னைக்கு குடி பெயர்ந்தனர். மூத்தவர் குமாரை பெற்றோர் வேலைக்குச் செல்ல வற்புறுத்தினர். இதனால் அவர் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த மனவருத்தத்தில் நடராஜன் சில ஆண்டுகளில் இறந்தார். இதையடுத்து ருக்மணி 2வது மகன் செந்திலுடன் சொந்த ஊரான கதிர்நரசிங்கபுரத்திற்கு வந்து விட்டார். இளைய மகன் முருகன் சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். குமார் வைராக்கியத்துடன் மும்பை, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் வேலை செய்தார். மலேசியாவில் சில காலம் பணிபுரிந்தார். பிறகு புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் ஆறுமுகம் என்பவர் ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார்.

பல ஆண்டுகளாக பணிபுரிந்த குமாரை, ஆறுமுகத்துக்கு பிடித்துப்போனது. இதனால் அவருக்கு பேத்தியை திருமணம் செய்து வைத்து அங்கேயே தங்க வைத்தார். குமாருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார் குமார்.

வேலப்பர் கோயிலுக்கு பஸ்சில் சென்ற போது கதிர்நரசிங்கபுரம் கிராமத்தை பார்த்ததும் குமார் குடும்பத்தினருடன் இறங்கி குடும்ப விபரங்களை ஊராரிடம் கூறி விசாரித்துள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவருடைய குடும்பம் குறித்தும், தாய் ருக்குமணி வசிக்கும் வீடு குறித்தும் தெரிவித்தனர். நாற்பதாண்டுகளுக்கு பிறகு தாயார் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். மகனை கண்ட தாய் ருக்குமணி அவரை கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டார். 90 வயதான பாட்டியும் பேரனை கண்ட மகிழ்ச்சியில் கண் கலங்கினார்.

சகோதரர்கள், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்து குமார் மகிழ்ந்தார். 40 ஆண்டுகளுக்கு பிறகு அன்னையர் தினமான நேற்று திரும்பி வந்த மகனை கண்டு தாயார் மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us