/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 150 முறை கைலாஷ் மானசரோவர் யாத்திரை சாதனையின் விளிம்பில் 52 வயது நபர் 150 முறை கைலாஷ் மானசரோவர் யாத்திரை சாதனையின் விளிம்பில் 52 வயது நபர்
150 முறை கைலாஷ் மானசரோவர் யாத்திரை சாதனையின் விளிம்பில் 52 வயது நபர்
150 முறை கைலாஷ் மானசரோவர் யாத்திரை சாதனையின் விளிம்பில் 52 வயது நபர்
150 முறை கைலாஷ் மானசரோவர் யாத்திரை சாதனையின் விளிம்பில் 52 வயது நபர்
ADDED : மே 10, 2025 04:12 AM

இமய மலைத்தொடரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் அமைந்துள்ள கைலாய மலை. சிவபெருமான் வசித்ததாக ஹிந்துக்களால் நம்பப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து, 22,000 அடி உயரத்தில் கைலாய மலையையொட்டி அமைந்துள்ளது மானசரோவர் ஏரி.
ஹிந்துக்கள் மட்டுமல்லாது புத்த, சமண மதத்தினரும், கடினமான கைலாஷ் மானசரோவர் யாத்திரையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 1981ல் இந்தியா - சீனா இடையேயான ஒப்பந்தத்தின்படி துவங்கப்பட்ட இந்த யாத்திரை, 2020ல் கொரோனா பேரிடர் மற்றும் எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2024ல், பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கிற்கும் இடையே நடந்த பேச்சுக்கு பின், கிழக்கு லடாக்கில் முக்கியமான பகுதிகளில் இரு நாடுகளும் ராணுவத்தை திரும்பப்பெற்றன. இதையடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு பின் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நம் நாட்டின் உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாகவும், சிக்கிமில் உள்ள நாதுலா கணவாய் வழியாகவும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
லிபுலேக் கணவாயிலிருந்து, 200 கி.மீ., மலை பாதையில் பயணிக்க வேண்டும். ஒரு பயணம் மேற்கொள்ள, 1.74 லட்சம் ரூபாய் செலவாகும். முழு பயணமும் முடிவடைய 22 நாட்கள் ஆகலாம்.
நாதுலா கணவாய் வழியாக பயணிப்பவர்களுக்கான செலவு 2.83 லட்சம் ரூபாய். இதில், 36 கி.மீ., மலைப்பாதையில் பயணம் செய்ய வேண்டும்.
வெப்பம், கடுங்குளிர் என பருவநிலைகளை தாண்டி, கடினமான நீண்ட உயரமான மலைப்பாதையில் செல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
ஆனால், உத்தரகண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள தார்ச்சுலா மலைக்கிராமத்தை சேர்ந்த, 52 வயதான ஜிதேந்திர சிங் ரவுடேலா, இதுவரை, 145 முறை இந்த யாத்திரையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.
கடந்த 1998ல் தன் முதல் பயணத்தை துவங்கிய ரவுடேலா கூறுகையில், ''நான் முதன்முறையாக கைலாஷ் மானசரோவருக்குச் சென்றபோது ஆன்மிக ஒளியால் ஈர்க்கப்பட்டேன். சிவனின் மந்திரத்திற்கு கட்டுப்பட்டு மீண்டும் மீண்டும் செல்ல நினைத்தேன்.
''துவக்கத்தில், 10, பின், 21, அதைத் தொடர்ந்து 51, இறுதியில் 108 யாத்திரை என இலக்கு நிர்ணயித்தேன். இப்போது, 145 யாத்திரைகளை முடித்த பின், 150 முறை யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்,'' என்றார்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை துவங்குவது ரவுடேலா போன்றவர்களுக்கு மகிழ்ச்சிதான். என்றாலும், இந்தியா -- சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் நடைபெற்றால் தான், அவர் தனது யாத்திரையை அதிகரிக்க முடியும். சீனா மற்றும் இந்தியா இடையே நிலவழி வணிகம் நடக்கும் சந்தைப்பகுதியாக தக்லகோட் என்ற இடம் உள்ளது.
பித்தோராகர் மாவட்ட வர்த்தகர்கள், ஜூன் முதல் அக்டோபர் வரை ஐந்து மாத வர்த்தக அனுமதியின் கீழ் தக்லகோட்டில் தங்குவது வழக்கம்.
இந்தியாவில் இருந்து உப்பு, பாத்திரங்கள், கம்பளி ஆடைகள், காலணி உள்ளிட்டவையும், திபெத்தில் இருந்து இந்தியாவுக்கு தோல்கள், மசாலா பொருட்கள், ஜவுளி போன்றவையும் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தன. கொரோனா தொற்றுக்கு பின் அது நிறுத்தப்பட்டது.
சமீபத்தில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை, இந்திய - -சீன வர்த்தக சங்க செயலர் தவுலத் ராய்பா சந்தித்துப் பேசினார். அப்போது, எல்லை வர்த்தகத்தை மீண்டும் துவங்குவதற்கு முழு ஆதரவு அளிப்பதாக புஷ்கர் சிங் தாமி உறுதி அளித்ததாக அவர் தெரிவித்தார்.
அப்படி ஆன்மிக பயணத்துடன், திபெத் எல்லைப்பகுதியில் மீண்டும் வர்த்தகம் துவங்கினால், ஜிதேந்திர சிங் ரவுடேலா, கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் 150வது பயணத்தை நிறைவு செய்வார்.
- நமது சிறப்பு நிருபர் -