PUBLISHED ON : மே 11, 2025 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: ஈரோடு மாவட்டத்தில், 17 வயது சிறுமி, நான்கு பேர் கும்பலால், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது, பெண்களுக்கு எதிரான, தி.மு.க.,வின் நான்காண்டு கால அவல ஆட்சியை, பொதுமக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தி.மு.க., ஆட்சியின் எஞ்சிய ஓராண்டிலாவது, பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
டவுட் தனபாலு: அது சரி... நாலு வருஷமா காட்டாத கவனத்தை, எஞ்சிய ஓராண்டில் எப்படி காட்டப் போறாங்க என்ற, 'டவுட்' வருதே... தப்பித் தவறி, பெண்கள் பாதுகாப்பில் அவங்க கூடுதல் கவனம் செலுத்திட்டாலும், சட்டசபை தேர்தலில் அது ஆளுங்கட்சிக்கே சாதகமா முடியும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு, ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், நாளை என் பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க., தொண்டர்கள் யாரும், என்னை நேரில் சந்திப்பதையும், கொண்டாட்டங்களையும் தவிர்க்க வேண்டும். அதே சமயம், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ரத்த தான, மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகளை மேற்கொள்ளுங்கள்.
டவுட் தனபாலு: அது சரி... இந்தாண்டு உங்க பெயர்ல நலத்திட்ட உதவிகளை தாராளமா வழங்குனா, அவை எல்லாம் அடுத்த வருஷ சட்டசபை தேர்தல்ல ஓட்டுகளா மாறும்னு கணக்கு போடுறீங்களோ... உங்க கணக்கு பலித்து, அடுத்த பிறந்த நாளுக்குள்ள சட்டசபை தேர்தலும் முடிஞ்சுட்டா, முதல்வராகி பிறந்த நாளை பிரமாண்டமா கொண்டாடலாம்னு, இப்ப அடக்கி வாசிக்கிறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவம் திட்டமிட்டு, மின்னல் வேகத்தில் சென்று, பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிற பயங்கரவாதிகளுக்கு, மத்திய அரசு பாடம் புகட்டியுள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
டவுட் தனபாலு: முந்தா நாள் வரைக்கும் போர் வேண்டாம்னு முழங்கிட்டு இருந்தீங்க... நம்ம ராணுவத்துக்கு நாலா திசைகளிலும் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிவதை பார்த்துட்டு, 'ஊருடன் ஒத்து வாழ்' என்ற முடிவுக்கு வந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!