PUBLISHED ON : மே 12, 2025 12:00 AM

தமிழக காங்., மூத்த தலைவர் திருநாவுக்கரசர்: கூட்டணி ஆட்சி என்ற கோஷம் அனைத்து தரப்பிலும் உள்ளது. எதார்த்தம் என்ன என்பதை பார்த்து, கோஷம் எழுப்ப வேண்டும். தமிழக சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை, 234 தான். அதனால், தி.மு.க., கூட்டணியில், எந்தக் கட்சிக்கும் கூடுதலாக, 'சீட்' கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு குறைவு தான்.
டவுட் தனபாலு: தி.மு.க., எப்படியும், தனித்து பெரும்பான்மை பெறும் அளவில், சீட்களை தங்களுக்கு வச்சுக்கிட்டு தான், கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கும்... அதனால, கூட்டணி ஆட்சி என்ற பதார்த்தம் யாருக்கும் கிடைக்காது என்ற எதார்த்தத்தை பேசிய இவரை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!
தமிழக சபாநாயகர் அப்பாவு: மகான் ஸ்ரீ ராமானுஜர் பற்றி யாரும் அறியாத நிலையில், அவரை பற்றி புத்தகங்களை எழுதி, தொலைக்காட்சி தொடராக அதை வெளியிட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அந்த நுாலை வெளியிட்டவர் நம் முதல்வர் ஸ்டாலின். இவர்களை தான், 'நாத்திகவாதிகள்' எனச் சொல்லி, ஆன்மிகவாதிகளிடம் இருந்து பிரிக்க பார்க்கின்றனர். இவர்கள், எல்லா மதங்களுக்கும் சமமானவர்கள்.
டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, 1,000 வருஷங்களுக்கு முன்னாடி அவதரித்த ஸ்ரீராமானுஜரை, 100 வருஷத்துக்கு முன்னாடி பிறந்த கருணாநிதி தான் நாடறிய செய்தாரா... விட்டா, 'ராஜராஜ சோழன் உள்ளிட்ட மூவேந்தர்களையும் கருணாநிதி தான் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்'னு சொன்னாலும் சொல்லிடுவீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் சமீபத்தில் நடந்த தேரோட்டத்தின்போது, சிலர் ஜாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி, பட்டியல் சமூகத்தினரை தாக்கியுள்ளனர். இதை கண்டித்து, ஜூன் 13ம் தேதி புதுக்கோட்டையில் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கர்நாடகாவில், வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி போலீஸ் ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
டவுட் தனபாலு: உங்க பரிந்துரையை ஏற்று, தெருக்களின் பெயர்களில் இருந்த காலனி என்ற வார்த்தையை தமிழக அரசு நீக்கிடுச்சு... ஆனா, தமிழகத்தில் வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நடக்குது என்பதை, தி.மு.க., அரசே ஒப்புக்கொண்ட மாதிரி ஆகிடும் என்பதால், உங்களது இந்த கோரிக்கை ஏற்கப்படாது என்பதில், 'டவுட்'டே இல்லை!