PUBLISHED ON : ஜூலை 19, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: யானைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி. அந்த வகையில் தான் தற்போது அ.தி.மு.க.,வுக்கும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. 'பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., தோற்றுவிட்டது' என, தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்சியை வழிநடத்திய போதும், அ.தி.மு.க., தோல்வியை சந்தித்துள்ளது.
டவுட் தனபாலு: எம்.ஜி.ஆர்., ஜெ., காலங்களிலும் அ.தி.மு.க., தோல்வியை சந்தித்துள்ளது என்றாலும், தொடர்ந்து தோல்விகளையே சந்திக்கலையே... 'பத்து தேர்தல் தோல்வி பழனிசாமி'ன்னு உங்க முன்னாள் கூட்டாளிகளே பகடி பண்ணுவது, உங்க காதுல விழலையா என்ற, 'டவுட்'தான் வருது!
பா.ம.க., தலைவர் அன்புமணி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வினர் 40,000 பேர் தி.மு.க.,வுக்கு ஓட்டளித்துள்ளனர். இது இடைத்தேர்தல் என்பதால், அதை அலசி ஆராயக்கூடாது. நேர்மையான முறையில் தேர்தல் நடந்திருந்தால், தி.மு.க., டிபாசிட் இழந்திருக்கும். அந்த அளவிற்கு தி.மு.க., மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
டவுட் தனபாலு: தி.மு.க., வுக்கு ஓட்டு போட்ட அ.தி.மு.க., வினரை திட்டாம, நாசுக்கா நழுவுறாரே... அடுத்து வர்ற சட்டசபை தேர்தல்ல, அவங்களுடன் கூட்டணி வைக்க வேண்டி வரலாம்கிற முன்ஜாக்கிரதையோ என்ற, 'டவுட்' தான் வருது!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: ஜெ., ஆட்சி காலத்தில் முழுமையாக காவிரி நீரை பெறுவதற்கு, சட்டப்பூர்வமாக முழு உரிமையும் பெற்றிருக்கிறோம்; அதை நடைமுறைப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. முதல்வர் ஸ்டாலின், இண்டியா கூட்டணியில் தான் இருக்கிறார். அவர், கர்நாடகா அரசிற்கு அழுத்தம் கொடுத்து, தண்ணீர் பெற்றுத் தர வேண்டும். இல்லையேல், 'கூட்டணியை விட்டு வெளியேறுவேன்; ஆதரவை வாபஸ் பெறுவேன்' என்ற நிலைப்பாட்டை எடுத்து அறிவிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: என்னமோ, தி.மு.க., தயவுல மத்தியில காங்., ஆட்சி நடக்கிற மாதிரி ஆதரவை வாபஸ் வாங்குங்கன்னு துாண்டி விடுறாரோ... தப்பி தவறி கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியே போனாலும், அந்த இடத்தை நிரப்ப, பழனிசாமியின் அ.தி.மு.க., தயாராக காத்துட்டு இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!