PUBLISHED ON : ஜூலை 20, 2024 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: என்ன தான் கூட்டணி என்றாலும், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் என்றால், எங்களுக்கு ஒன்பது தொகுதிகள் தான் கொடுக்கின்றனர். 'ஓட்டு வங்கி அதிகரிக்கட்டும்; அப்போது, 20 தொகுதிகள் கேட்டாலும் கொடுக்கிறோம்' என்கின்றனர். அதற்கேற்ப கட்டமைப்பை காங்கிரஸ் கட்சியினர் உருவாக்க வேண்டும்.
டவுட் தனபாலு: அது சரி... நீங்க என்னைக்கு ஓட்டு வங்கியை காட்டி, 'சீட்' கேட்டிருக்கீங்க... கோஷ்டி தலைவர்கள் கோட்டாவுல தானே சீட்களை போராடி வாங்குறீங்க... கோஷ்டி கலாசாரம் முடிக்கு வராத வரைக்கும், உங்களுக்கு சீட் எண்ணிக்கை உயர்வது, 'டவுட்'தான்!
பத்திரிகை செய்தி: துாத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலராகவும், சமூக நலத்துறை அமைச்சராகவும் இருப்பவர் கீதா ஜீவன். இவரது தம்பி ஜெகன், துாத்துக்குடி மேயராகவும் உள்ளார். 2022ல் ஜெகன் மேயரானது முதலே, இருவருக்குள் யார் பெரியவர் என்ற அதிகார போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் திடீரென மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தை நடத்தி, தம்பி ஜெகனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
டவுட் தனபாலு: இவங்க கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதி, 'உடன்பிறப்பே' என கட்சியினர் அனைவரையும் அன்போடு அழைப்பார்... அமைச்சரோ, உடன்பிறந்த தம்பிக்கு எதிராகவே கம்பு சுத்துறாங்களே... தம்பியின் வளர்ச்சியையே பொறுத்துக் கொள்ளாதவங்க மற்ற நிர்வாகிகளையும், தொண்டர்களையும் எப்படி சகிச்சுக்குவாங்க என்ற, 'டவுட்' எழுதே!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க.,வின் ராஜாவும், பா.ஜ.,வின் முருகனும் பலமானவர்கள் அல்ல. ஏற்கனவே நம் கட்சி வேட்பாளர்கள், ராஜாவை தோற்கடித்துள்ளனர். கூட்டணி மட்டும் தேர்தலில் வெற்றியை தேடி தராது. வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
டவுட் தனபாலு: கூட்டணியே இல்லாமல் தான், 2014 லோக்சபா தேர்தலில் ஜெ., 38 தொகுதிகளில் ஜெயித்து காட்டினார்... அவர் காலத்துல, கட்சியில இருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் இப்பவும் இருக்காங்க... ஆனா, ஜெ., காலத்துல இருந்த பயமும், பணிவும், இப்ப உங்க கட்சியினரிடம் இருக்கா என்பது தான், 'டவுட்!'