PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சமத்துவம், சமூக ஜனநாயகம், சமூக நீதி என்ற உன்னதமான கொள்கையின் அடிப்படையில், மக்களுக்காக தொடர்ந்து 35 ஆண்டுகளாக பாடுபட்டு வரும் பா.ம.க.,வை தமிழக மக்களுக்கு ஏனோ தெரியவில்லை. பெரிய அளவிலும் ஆதரவு தரவில்லை. எதிர்காலத்தில், தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக பா.ம.க.,வின் பின்னால் வரும்போது, அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் கிடைக்கும்.
டவுட் தனபாலு: உங்க ஆதங்கம் நியாயமானது தான்... ஆனா, அந்த ஒளிமயமான எதிர்காலம் தமிழர்களுக்கு கிடைக்க இன்னும் எத்தனை நுாற்றாண்டுகள் ஆகும் என்பது தான், 'டவுட்!'
பா.ஜ., - எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன்: சென்னையில் யாரோ சிலரிடம் பிடிபட்ட, 4 கோடி ரூபாய்க்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என, பலமுறை கூறி விட்டேன். அந்த பணம் யாருடையது என, போலீஸ் அதிகாரிகள் திரும்பத் திரும்பக் கேட்டனர். பணம் வைத்திருந்த நபர் என் ஹோட்டல் ஊழியர் என்பதாலேயே, பணத்தை என்னோடு தொடர்புபடுத்துகின்றனர். என்னதான் ஹோட்டல் ஊழியர்என்றாலும், உரிமையாளருக்குதெரியாமல் ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்கு உரிமையாளர் எப்படி பொறுப்பாக முடியும்?
டவுட் தனபாலு: நீங்க கேட்கிறதும்சரி தான்... ஆனா, ஒரு சாதாரணஹோட்டல் ஊழியர், 4 கோடி ரூபாய் பணத்துடன், ரயிலில், அதுவும் நீங்க லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட திருநெல்வேலி தொகுதிக்கு செல்லும் ரயிலில் பயணம் செய்தது ஏன்...? ஒருவேளை ஹோட்டல் ஊழியருக்கு நீங்க தந்த சம்பள பணத்துல, நெல்லையில் தொழில் துவங்க புறப்பட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்: தி.மு.க., அரசின் முதல் பட்ஜெட்டின்போது, சர்வதேச பொருளாதார நிபுணர்களை கொண்ட ஆலோசனை குழு அமைப்பதாக கூறினர். அந்தக் குழுவால் வருவாய் பெருகியிருக்கிறதா? நிதி ஆதாரம் இல்லை எனக் கூறி, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, அடுக்குமாடி குடியிருப்பு வாங்கினால் கூடுதல் வரி என, எல்லா தரப்பு மக்களும் பாதிக்கும் வகையில், ஆட்சி நடத்தி வருகின்றனர்.
-டவுட் தனபாலு: தமிழக அரசு அறிவித்த பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவில் இடம்பெற்றவங்க தந்த ஆலோசனைப்படியே, இந்த மாதிரி கட்டணங்களை எல்லாம் ஏத்துறாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!