PUBLISHED ON : ஜூலை 14, 2024 12:00 AM

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்: அரசியல் முதிர்ச்சி இல்லாத தலைவராக சீமான் தெரிகிறார். தவறான தகவலால் தமிழ்ச் சமூகத்தை தவறாக வழிநடத்தி வருகிறார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று அவர் கூறுவது தவறானது. 1967க்கு முன் இருந்தே குற்றச்செயல்கள் தமிழகத்தில் நடந்து தான் வருகின்றன. கருணாநிதி முதல்வராக வந்த பின் தான் சட்டம் - ஒழுங்கு சரி இல்லை என, கூறுவது தவறான கருத்து.
டவுட் தனபாலு: அதானே... 'எங்களுக்கு முன்னாடி, 1967 வரை காங்., ஆட்சி தான் தமிழகத்தில் நடந்துச்சு... அப்பவும், தமிழகத்தில் குற்றச்செயல்கள் நடந்தன... அதன்பின், கருணாநிதி முதல்வரானதும், அது தொடர்ந்தது... அதனால, எங்களை மட்டும் குற்றம் சொல்றது என்ன நியாயம்'னு கேட்காம கேட்கிறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
பத்திரிகை செய்தி: கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க, தண்டனையை அதிகரிப்பது அவசியம் என்ற கருத்து எழுந்தது. அதைத் தொடர்ந்து, கள்ளச்சாராயம் விற்போருக்கு ஆயுள் தண்டனை வழங்க வழிவகை செய்யும், தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் 29ல் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
டவுட் தனபாலு: தமிழக அரசு அனுப்பிய எத்தனையோ மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டிருப்பதாக, ஆளுங்கட்சி குற்றம் சொல்லிட்டு இருந்துச்சே... ஆனா, கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் இந்த மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தந்த கவர்னர் ரவியை, ஆளுங்கட்சியினர் மனமுவந்து பாராட்டணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கிடைத்த 100 கோடி ரூபாயை, கோவா தேர்தலுக்காக கெஜ்ரிவால் பயன்படுத்தி உள்ளார். இந்த ஊழல், அவர் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. தற்போது, டில்லியை கொள்ளை அடிக்க ஆம் ஆத்மியுடன், காங்கிரசும் இணைந்து உள்ளது.
டவுட் தனபாலு: டில்லியில் ரெண்டு கட்சியும் கூட்டணி போட்டும், அங்க இருந்த ஏழு லோக்சபா தொகுதியிலும் பா.ஜ., அமோகமா ஜெயிச்சிருக்கே... சந்தர்ப்பவாத கூட்டணியை புறக்கணிப்பதில், டில்லி மக்கள் தெளிவாகவே இருக்காங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!