PUBLISHED ON : ஜூலை 15, 2024 12:00 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து, பதற்றத்தை ஏற்படுத்த, சில அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுகின்றன. குறிப்பாக, பா.ஜ.,வுக்கு இந்த செயல் திட்டம் இருப்பதை அறிய முடிகிறது. எனவே, ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும், ஒரு அரசியல் செயல் திட்டம் இருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கிறோம்.
டவுட் தனபாலு: கடந்த காலங்களில், தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் யார் என்பதை மக்கள் ஒன்றும் மறந்திருக்க மாட்டர்... அதனால, பதற்றத்தை உருவாக்க பா.ஜ., முயற்சிப்பதாக நீங்க சொல்றதை, உங்க கட்சியினரே நம்புவாங்களா என்பது, 'டவுட்'தான்!
பத்திரிகை செய்தி: அரக்கோணம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், 'சட்டசபை தேர்தலில், யாருடன் கூட்டணி அமைக்கலாம்' என்று பழனிசாமி கேட்டதற்கு, 'நாம் தமிழர் கட்சி மற்றும் பா.ம.க., உடன் கூட்டணி அமைத்தால் வெற்றி பெறலாம்' என்று தெரிவித்து உள்ளனர். அதற்கு, 'பலமான கூட்டணி அமைப்போம். அனைவரும் உற்சாகமாக பணியாற்றுங்கள்' என, பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
டவுட் தனபாலு: இப்படித்தான், 8 முதல் 10 சதவீதம் ஓட்டு வங்கி வச்சிருந்த தே.மு.தி.க.,வை 2011 தேர்தலில் அ.தி.மு.க., வளைத்து போட்டது... அந்த கட்சியின் இன்றைய கதியை சீமான் எண்ணிப் பார்த்தார் என்றால், அ.தி.மு.க., கூட்டணிக்கு, 'ஓகே' சொல்வாரா என்பது, 'டவுட்'தான்!
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்: மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட பின், மூன்று முறை அங்கு சென்று இருக்கிறேன். நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாநிலம் இரண்டாக பிளவுபட்டு உள்ளது. இந்த அவலத்திற்கு முடிவு கட்டி அமைதியை கொண்டு வர, மணிப்பூர் பிரச்னை குறித்துமுழு பலத்துடன் பார்லிமென்டில் கேள்வி எழுப்புவோம்.
டவுட் தனபாலு: மணிப்பூரில் அமைதி திரும்புகிறதோ, இல்லையோ... பலமான எதிர்க்கட்சியா இருக்கிற எங்க, 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் அமளி துமளியால, அடுத்த அஞ்சு வருஷம் பார்லிமென்ட்ல அமைதியே இருக்காது என்பதை, 'டவுட்'டே இல்லாம விளக்கிட்டீங்க!