PUBLISHED ON : ஜூலை 13, 2024 12:00 AM

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிதாக 200 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. தனியார் ஆம்னி பஸ்களில் உள்ளதை போல, மொபைல் போன் சார்ஜ் வசதி மற்றும் படுக்கை, இருக்கை, லக்கேஜ் வைப்பதற்கான இடம் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பயணியர் சிரமமின்றி சொகுசாக பயணிக்கலாம்.
டவுட் தனபாலு: தனியார் ஆம்னி பஸ்களுக்கு போட்டியா, அரசு பஸ்களை நவீனப்படுத்துவது வரவேற்கத்தக்கது தான்... அதே மாதிரி, கட்டணத்தையும் தனியார் ஆம்னி பஸ்களுக்கு நிகரா இல்லாம, நியாயமான முறையில் நிர்ணயம் செய்தால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி: தேர்தலுக்கு பின் அ.தி.மு.க., ஆபத்தான சூழலை சந்திக்கப் போகிறது என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அது, தற்போது நடந்து கொண்டுள்ளது. கொங்கு மண்டலத்தை சார்ந்த நிர்வாகிகளே முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளனர். எனவே, அ.தி.மு.க., தொண்டர்கள், நம்பி தி.மு.க.,விற்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். முதல்வர் ஸ்டாலின், அவர்களை அரவணைத்து நன்றாக வழி நடத்துவார்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., வில் இருந்து வந்த நீங்க உட்பட ஏழு பேர், இன்று அமைச்சர்களாக இருப்பதே முதல்வரின் அரவணைப்புக்கு சாட்சி... இப்படி, மாற்றுக் கட்சியினருக்கு ரத்தின கம்பளம் விரிச்சிட்டே இருந்தால், பாரம்பரிய தி.மு.க.,வினரும் வேற கட்சிக்கு போகும் முடிவை எடுத்துடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: எம்.ஜி.ஆர்., கூட லோக்சபா தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார். அதன்பின் வந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தார். எனவே, லோக்சபா தேர்தலுக்கும், சட்டசபை தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில், நாம் பலமான கூட்டணி அமைத்து, ஆட்சியை பிடிப்போம்.
டவுட் தனபாலு: சட்டசபை தேர்தல்ல எம்.ஜி.ஆர்., தோற்றதே இல்ல... ஒருவேளை, சட்டசபையிலும் உங்க கட்சி தோற்று போயிட்டா, 'ஜெ., கூட சட்டசபை தேர்தல்ல தோற்றிருக்காங்க... அடுத்த தேர்தல்ல ஜெயிச்சு ஆட்சியைப் பிடிச்சிருக்காங்க' என உதாரணம் காட்டுவீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!