PUBLISHED ON : ஜூன் 19, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிப்பது சரியில்லை. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., தான். அ.தி.மு.க., கதை முடிந்து விட்டது என நினைக்க முடியாது; என் என்ட்ரி ஆரம்பித்து விட்டது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம். விரைவில் பட்டி தொட்டியெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
டவுட் தனபாலு: நீங்களும் ஜெயில்ல இருந்து வந்ததுல இருந்தே இப்படித்தான் சொல்லிட்டு இருக்கீங்க... ஆனா, அ.தி.மு.க.,வின் ஆபீஸ் பாய் கூட உங்க பக்கம் வந்த மாதிரி தெரியலை... எனவே, பட்டி தொட்டி எல்லாம் பயணம் போனாலும், உங்க காரின் டயர் தான் தேயுமே தவிர, வேறு எதுவும் நடக்குமா என்பது, 'டவுட்'தான்!
கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்: கடந்த 1957ல் இருந்து போட்டியிடும் தி.மு.க., ஒரு தேர்தலில் கூட தனித்து நின்றதில்லை. தமிழகத்தில் தனித்து போட்டியிட தைரியமில்லாத ஒரே கட்சி தி.மு.க., தான். ஒரு தேர்தலிலாவது தனித்து போட்டியிட்டு வென்று, அதன்பிறகு பா.ஜ.,வை ஸ்டாலின் விமர்சிக்கட்டும்.
டவுட் தனபாலு: என்னமோ, உங்க கட்சி மட்டும் தன்னந்தனியா தேர்தலை சந்திக்கிற மாதிரி பேசுறீங்களே... நீங்க 2021ல் எம்.எல்.ஏ.,வாக ஜெயித்ததே, அ.தி.மு.க., கூட்டணி பலத்தில் தான் என்பதை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மறைந்த தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்திக்கு பதிலாக, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலராக, வன்னியர் ஒருவரை நியமிப்பதற்கு கூட தி.மு.க.,வுக்கு மனமில்லை. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க காரணமாக இருந்த, அதற்காக போராடியவர்களின் தியாகத்தை போற்றுவதற்கும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைப்பதை தடுக்கும் தி.மு.க.,வின் துரோகத்திற்கும் கணக்கு தீர்க்கும் களம் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.
டவுட் தனபாலு: ஆளுங்கட்சியின் அசுர பலத்தை தாண்டி, உங்க கட்சி ஜெயிக்கணும் என்றால், ஒட்டுமொத்த பா.ம.க.,வினரும் அங்க முகாமிடணும்... அப்படியே, படை பலத்தில் நீங்க முந்தினாலும், 'பட்டுவாடா'வில் ஆளுங்கட்சியை அடிச்சுக்க முடியுமா என்பது, 'டவுட்'தான்!