PUBLISHED ON : ஜூன் 20, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி: பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டது, அண்ணாமலை பாதயாத்திரை சென்றது, இவை மதவாதத்தை அதிகரிக்க செய்தன. அதனால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., ஓரளவு கூடுதல் ஓட்டுகள் பெற்றது. மேலும், தி.மு.க.,விற்கு எதிராகத்தான் மக்கள் பா.ஜ.,விற்கு அதிகளவில் ஓட்டளித்து உள்ளனர். இத்தேர்தலில், யார் பிரதமர் என்று நாங்கள் முன் நிறுத்தவில்லை. அதனால் தான், அதிகளவில் மக்கள் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிக்கவில்லை.
டவுட் தனபாலு: அங்க தான் நீங்க தப்பு பண்ணிட்டீங்க... 2014ல் உங்க தலைவி ஜெ., 'மோடியா, இந்த லேடியா' என பிரசாரம் செய்தது போல், பழனிசாமியை மட்டும் பிரதமர் வேட்பாளரா அறிவிச்சு, நீங்க லோக்சபா தேர்தலை சந்திச்சிருந்தால், 40க்கு 40 தொகுதிகளையும் லட்டு மாதிரி துாக்கியிருக்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து துரோகம் செய்வதையே, தி.மு.க., அரசும், கர்நாடகத்தை ஆளும் அதன் கூட்டாளி காங்கிரஸ் அரசும் செய்து வந்தன. தற்போது, தமிழகத்திற்கும் கர்நாடகாவுக்கும் நடுநிலையாக இருந்து, பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய பா.ஜ., அரசும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோமண்ணாவை, மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது, தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகம்.
டவுட் தனபாலு: தமிழகத்தில் தி.மு.க.,வை மட்டுமல்ல, பா.ஜ.,வையும் எதிர்த்து அரசியல் செய்தால் தான், அ.தி.மு.க., மீண்டெழ முடியும் என்பதை, 'டவுட்' இல்லாம இப்ப தான் இவர் தெரிஞ்சுக்கிட்டார் போலும்!
பத்திரிகை செய்தி: லோக்சபா தேர்தலில், வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்., முன்னாள் தலைவர் ராகுல், வயநாடு தொகுதியின் எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அத்தொகுதியில், தன் தங்கை பிரியங்கா போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.
டவுட் தனபாலு: ஏற்கனவே அங்க இரண்டு லோக்சபா தேர்தல்களில் தொடர்ந்து ராகுல் போட்டியிட்டு, ஒட்டுமொத்த கேரளாவுலயும் இடதுசாரிகளை ஜெயிக்க விடாம பண்ணிட்டாரு... இப்ப, பிரியங்காவும் களம் இறங்குவதால், காம்ரேட்கள் கோட்டை மேலும் கலகலத்துப் போகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!