PUBLISHED ON : ஜூன் 18, 2024 12:00 AM

நீலகிரி தொகுதி தி.மு.க., - எம்.பி., ராஜா: முன்பெல்லாம் பார்லிமென்டில் பிரதமர் மோடி வந்தால், 303 உறுப்பினர்கள் எழுந்து நின்று, 'மோடி மோடி' என்று மேஜையை தட்டுவர். இனி தட்ட முடியாது; அப்படி தட்டினால், நாங்கள் 250 பேர் எழுந்து, 'போடி போடி' என்று தட்டுவோம்.
டவுட் தனபாலு: அது சரி... 'தமிழக வளர்சிக்காக நாங்க எதுவும் பண்ண மாட்டோம்... பா.ஜ., மற்றும் மோடிக்கு எதிராக செயல்படுவது தான் எங்களது அடுத்த ஐந்தாண்டு திட்டம்' என்பதை, இதை விட பட்டவர்த்தனமா சொல்ல முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்: நாங்கள் லோக்சபா சென்று பேசுகிறோமோ இல்லையோ, மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக எங்கள் கருத்துக்களை முன்வைத்து பேசி வருகிறோம். தேர்தலில் வெல்வதை விட, மக்களின் இதயங்களை வெல்வது தான் எங்கள் கனவு. அந்த வகையில் முன்னேறி சென்று கொண்டிருக்கிறோம்.
டவுட் தனபாலு: தேர்தல் அரசியலில், எந்த கட்சி ஓட்டுக்கு நோட்டு அதிகமா தருகிறதோ, அந்த கட்சி தான் மக்கள் இதயத்தில் இடம் பிடிக்கும்... அதனால, உங்க கட்சியும் மக்களின் மனதில் இடம் பிடிக்கணும் என்றால், பொருளாதார பலமும் அவசியம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன்: வேளாண் பணிகளை மேற்கொள்ள வசதியாக, 2,938 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இருப்பில் உள்ளன. இவை, நியாயமான வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்காக, 'கூட்டுறவு இ - வாடகை' என்ற மொபைல் போன் செயலி மற்றும் உழவன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம். விவசாயிகள், rcs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
டவுட் தனபாலு: இன்னும் கிராமங்கள்ல ஏராளமான விவசாயிகள், '2ஜி' பட்டன் போன்களையே பயன்படுத்துறாங்க... இவங்க எல்லாம் உங்க செயலிகள்ல பதிவு செய்து, வேளாண் கருவிகளை எப்படி வாங்க முடியும்... நிறைய விவசாயிகள் வந்துட்டா, உங்களிடம் வழங்க கருவிகள் இல்லை என்பதால், 'டிஜிட்டல்' போர்வையில ஏமாத்துறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!