PUBLISHED ON : ஜூன் 12, 2024 12:00 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: ஒருவேளை பா.ஜ., தலைமையிலான அரசு, நிலையாக இல்லாமல் தடுமாறி கவிழ்ந்தால், அந்த நேரத்தில் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற, 'இண்டியா' கூட்டணி தயார்படுத்தி கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டும். 28 கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில், நிலையான ஆட்சி அமைக்க கூடிய நல்லிணக்கம் பெருக வேண்டும்.
டவுட் தனபாலு: 'தப்பி தவறி, இண்டியா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், இரண்டு எம்.பி.,க்கள் தானேன்னு எங்க கட்சியை அலட்சியப்படுத்திடாதீங்க... கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சர் பதவி தரணும்'னு இப்பவே, 'துண்டு' போடுவது, 'டவுட்'டே இல்லாம புரியுது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:தமிழகத்தில், கடந்த ஓராண்டாக அரசு பஸ்கள் பழுதடைந்து நிற்பதும், விபத்துக்கு உள்ளாவதும் சமீபத்தில், ஒரே நாளில் தஞ்சாவூரில் இரு பஸ்கள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளன. எனவே, ஆறு ஆண்டுகளை கடந்த பஸ்களை மாற்றி, புதிய பஸ்கள் வாங்க வேண்டும். பழைய பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும். உதிரிபாகங்கள் வாங்க நிதி ஒதுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: மகளிருக்கு, மாணவ - மாணவியருக்கு இலவச பஸ் பயணம் திட்டம் அமல்ல இருக்குது... இவங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை போக்குவரத்து கழகங்களுக்கு அரசு முறையாக கட்டினாலே, பாடாவதி பஸ்களை மாற்ற முடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்: பள்ளிகளில் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், பள்ளி பஸ்கள் அனைத்தும் விதிகளின்படி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில், மாணவர்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். ஆசிரியர் காலி பணியிடங்களை பூர்த்தி செய்யவும், உரிய காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பாடநுால்கள் வழங்குவதையும்,தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்க வலியுறுத்தியுள்ள விஷயங்களை எல்லாம் அரசு முறையா செய்யலைன்னா, காம்ரேட்கள் வழக்கப்படி போராட்டம் நடத்தி, அரசாங்கத்தை செய்ய வைக்கணும்... ஆனா, சம்பிரதாயத்துக்கு அறிக்கை விட்டு கூட்டணி தர்மத்தை, காப்பாற்றுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!