PUBLISHED ON : ஜூன் 11, 2024 12:00 AM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கடந்த 2016ல் முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட, நாம் தமிழர் கட்சி, எட்டே ஆண்டுகளில் மாநில கட்சியாக பரிணமித்திருப்பது, தமிழின அரசியல் வரலாற்றில், ஒரு புத்தெழுச்சி பாய்ச்சல். மாநில கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, 2026 சட்டசபை தேர்தலில், மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க உறுதி ஏற்கிறோம்.
டவுட் தனபாலு: இப்படித்தான், விஜயகாந்த் கட்சியும் வேகமா வளர்ந்துச்சு... ஆனா, கடைசியில் கூட்டணி வலையில் சிக்கி, இன்றைக்கு பரிதாப நிலையில இருக்குது... அதுபோல, உங்களுக்கும் நிறைய, 'ஆபர்' வரும்... அதுல சிக்கிடாம தப்பிச்சா தான் உங்க கட்சிக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
உ.பி.,யில் செயல்படும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்: லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதி கட்சி நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது. எங்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது. இதன் வாயிலாக எதிர்மறை அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. நேர்மறை அரசியல் துவங்கியுள்ளது.
டவுட் தனபாலு: நாட்டுல மூன்றாவது பெரிய கட்சியா ஜெயிச்சு என்ன புண்ணியம்... தமிழகத்துல இருந்து ஜெயித்த 39 எம்.பி.,க்களும் எப்படி பார்லிமென்ட்ல, 'பஞ்சாயத்து' பண்ணி, வெளிநடப்பு பண்ணிட்டு வர போறாங்களோ, அதையே தான் உங்க கட்சியின் 37 எம்.பி.,க்களும், 'பாலோ' பண்ணுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்ற அடிப்படையில் தான், லோக்சபா தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தகைய வாய்ப்பை வழங்கிய கட்சிக்கும், உங்களுக்கு ஓட்டளித்த தமிழக மக்களுக்கும் உண்மை யாக இருங்கள். தி.மு.க., என்ற கொள்கை குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.பி.,யாகி டில்லி செல்லும் நீங்கள், என் பெயரையும், கட்சியின் பெயரையும் காப்பாற்ற வேண்டும்.
டவுட் தனபாலு: கட்சிக்கும், ஓட்டளித்த மக்களுக்கும் உண்மையா இருங்கன்னு உருக்கமா கேட்டிருக்காரே... ஒருவேளை, மத்தியில பா.ஜ., ஏதாவது, 'ஆப்பரேஷன் தாமரை' திட்டம் வச்சிருந்தா, அதுல விலை போயிடாதீங்க என்பதை தான் இப்படி நாசுக்கா சொல்லியிருக்காரோ என்ற, 'டவுட்'தான் வருது!