PUBLISHED ON : ஜூன் 10, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: இனி வருங்காலத்திலும் பா.ஜ., வுடன் கூட்டணி கிடையாது. இதை மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், தெளிவாக கூறி விட்டோம். முன்னாள் அமைச்சர் வேலுமணி அனுமான அடிப்படையில், பா.ஜ., கூட்டணி இருந்தால், அதிக 'சீட்' வெற்றி பெற்றிருக்கலாம் எனக் கூறி உள்ளார். இது, எங்கள் கட்சி நிலைப்பாடு கிடையாது. இலையும் தண்ணீரும் ஒரு நாளும் ஒட்டாது.
டவுட் தனபாலு: அடடா... பா.ஜ.,வின் இமாலய வளர்ச்சியை இந்த தேர்தலில் பார்த்தீங்கல்ல... நீங்களே போய், அவங்களிடம் கூட்டணிக்கு கெஞ்சினாலும், உங்களை அவங்க சேர்த்துப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: விருதுநகரில் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் என் மகன் விஜய பிரபாகரன் 4,379 ஓட்டுகள் வித்தியாசத்தில், தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதல்வர் கூறி விட்டதால், அதை உண்மையாக்க, மூன்று அமைச்சர்கள் சென்று அதிகாரிகளை நிர்பந்தம் செய்து, காங்கிரஸ் வெற்றியை அறிவிக்க வைத்து உள்ளனர். விருதுநகர் தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கையை விரைந்து நடத்த வேண்டும்.
டவுட் தனபாலு: மறு ஓட்டு எண்ணிக்கை கேட்டு, நீங்க கோர்ட்டுக்கே போனாலும், விசாரணை முடிஞ்சு தீர்ப்பு வர்றதுக்குள்ள, இன்னும் இரண்டு லோக்சபா தேர்தலே நடந்து முடிஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தமிழகத்தில், 81 சட்டசபை தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்று தொகுதிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணி, 10 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே முதலிடத்தை பிடித்துள்ளது.
டவுட் தனபாலு: தமிழகத்தில், பா.ஜ.,வின் வளர்ச்சியை பாராட்டியே ஆகணும்... ரெண்டாவது இடத்தை பிடித்த கட்சியால், முதலிடத்தை பிடிப்பது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல... அந்த கட்சி நிர்வாகிகள், பிரதமர் மோடியை போல ராப்பகலாக உழைத்தால், 2026ல் தமிழகத்தில் தாமரை மலரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!