PUBLISHED ON : ஜூன் 09, 2024 12:00 AM

தி.மு.க., தலைமை நிலைய செயலரும், நடிகர் சங்க துணை தலைவருமான பூச்சி முருகன்: நடிகர் ரஜினியை நான் சந்தித்து பேசியதில் எந்த அரசியலும் கிடையாது. மரியாதை நிமித்தமான முறையில் சந்தித்து பேசினேன். நடிகர் சங்க கட்டுமான பணிகள் பாதியில் நின்றிருந்தது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. தீ தடுப்பு பணிகள், கட்டுமான பணிகள் ஒரு வாரமாக நடந்து வருவதை ரஜினிக்கு தெரியப்படுத்தியதும், அவர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் நடிகர் சங்க கட்டட பணிகள் முடிந்து, ஜனவரியில் திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.
டவுட் தனபாலு: நடத்துங்க... ஆனாலும், தமிழ் திரையுலகில் அரை நுாற்றாண்டாக சூப்பர் ஸ்டாராக இன்று வரை திகழும் நடிகர் ரஜினி மட்டற்ற மகிழ்ச்சியுடன், கொஞ்சம் மனசும் வைத்தால், நடிகர் சங்க கட்டட பணிகள் ஆறு மாசம் என்ன, மூணே மாசத்துல முடிஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் சக்கரவர்த்தி: 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது, தமிழக பா.ஜ.,வுக்கு நான்கு மடங்கு ஓட்டு சதவீதம் கூடியுள்ளது. பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்காக மேலிட தலைவர்கள் முயற்சி எடுத்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மிரட்டியதால் தான் பழனிசாமி, பா.ஜ., உடன் கூட்டணி சேரவில்லை.
டவுட் தனபாலு: மத்தியில், சர்வ வல்லமையுடன் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ., கூட்டணியையே துணிச்சலாக உதறி தள்ளிய பழனிசாமி, மாநில ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பணிந்திருப்பார்னு சொல்றது நம்பும்படியா இல்லையே... உங்க தோல்விக்கு அடுத்தவங்க மீது பழிபோடுவது முறையா என்ற, 'டவுட்' தான் வருது!
பா.ம.க., தலைவர் அன்புமணி: லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வுக்கு வெற்றி கிடைக்காதது வருத்தம் தான் என்றாலும், இதில் ஏமாற்றமோ, கவலையோ அடைய எதுவுமில்லை. ஆளும் தி.மு.க.,வின் ஓட்டு வங்கி, 2019 தேர்தலை விட 6 சதவீதம் குறைந்துள்ளது. அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கி, 2021 சட்டசபை தேர்தலை விட, 13 சதவீதம் குறைந்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் வலுவான அணியை கட்டமைத்து, ஆட்சி அமைப்பது தான் எங்கள் ஒரே இலக்கு.
டவுட் தனபாலு: 2011ல் இருந்தே பா.ம.க., ஆட்சின்னு சொல்லிட்டு தான் இருக்கீங்க... எதுவும் நடந்த மாதிரி தெரியலை... தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகினால்,'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!