PUBLISHED ON : மார் 22, 2025 12:00 AM

'அரசியல்வாதிகளின் சண்டை, குழாயடி சண்டையை விட மோசமாக போய் விட்டதே...' என, கவலைப்படுகின்றனர், தெலுங்கானா மாநில மக்கள்.
இங்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலானகாங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த லோக்சபா தேர்தலிலும்படுதோல்வி அடைந்ததால், கட்சியை துாக்கி நிறுத்துவதற்கு பெரும் முயற்சி செய்து வருகிறார், முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ்.
ஆனாலும், அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக காங்கிரசுக்கு ஓட்டம்பிடித்து வருகின்றனர். 'பொழுது விடிந்தால் போதும்; எங்கள் கட்சிக்காரர்கள், மற்ற கட்சிகளுக்கு தாவுவது தான் தலைப்பு செய்தியாக இருக்கிறது...' என புலம்புகிறார், சந்திரசேகர ராவ்.
இதனால் கடுப்பான அவர், முதல்வர் ரேவந்த் ரெட்டியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். சந்திரசேகர ராவுக்கு உதவியாக, அவரது மகன் கே.டி.ராமா ராவும் தன் பங்கிற்கு அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டுகிறார்.
ரேவந்த் ரெட்டி மட்டும் சளைத்தவரா என்ன; அவரும், முதல்வர் என்பதை மறந்து, 'பேய், பிசாசு...' என, வறுத்தெடுக்கிறார்.
இதைப் பார்த்த தெலுங்கானா மக்கள், 'எதிரியை விமர்சிப்பதற்கு எவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்பது குறித்து, இவர்கள் பயிற்சி வகுப்பே நடத்தலாம்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.