PUBLISHED ON : மார் 21, 2025 12:00 AM

'இவர்களை எப்படி திருத்துவது என்றே தெரியவில்லையே...' என, புலம்புகிறார், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்.
சமீபத்தில் உ.பி., சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. அப்போது, சட்டசபை வளாகத்தில் உள்ள சுவரில், யாரோ ஒரு எம்.எல்.ஏ., புகையிலை எச்சிலை துப்பி விட்டார். சட்டசபைக்குள் நுழையும் அனைவருக்கும், அந்த கறை தான் பளிச்சென கண்ணில் பட்டது.
இதை பார்த்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் கோபமடைந்தார். சபாநாயகர் சதீஸ் மஹானாவிடம் ஆலோசனை நடத்திய அவர், 'கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யுங்கள். சுவரில் அசுத்தம் செய்த எம்.எல்.ஏ., யார் என கண்டுபிடித்து, அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்...' என்றார்.
இதன்படி, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கறை செய்த எம்.எல்.ஏ.,வை சபாநாயகர் கண்டுபிடித்து விட்டார். அவரை பற்றிய தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும், அந்த கறையை சுத்தப்படுத்துவதற்கான செலவை, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,வின் சம்பளத்தில் பிடிக்கப் போவதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த தகவலை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடமும் தெரிவித்தார்.
இதையடுத்து, 'இதுதான் கடைசி முறை. இனி, யாராவது இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்களை பற்றிய தகவலை ஊடகங்களில் வெளிப்படையாகவே தெரிவித்து, கவுரவத்தை கப்பலேற்றி விடுவோம்...' என எச்சரித்துள்ளார், யோகி ஆதித்யநாத்.