PUBLISHED ON : ஜன 08, 2024 12:00 AM

'பட்ட காலிலேயே படும் என்பது சரியாகத் தான் இருக்கிறது...' என கண்ணீர் சிந்துகிறார், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ்.
இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அந்த கட்சி படுதோல்வி அடைந்து, காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தது.
இந்த சோகத்தை ஜீரணிப்பதற்குள், வீட்டில் உள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்து, இடுப்பு எலும்பையும் முறித்துக் கொண்டார், சந்திரசேகர ராவ். அறுவை சிகிச்சைக்குப் பின், தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, தெலுங்கானா புதிய முதல்வரும், காங்கிரஸ் பிரமுகருமான ரேவந்த் ரெட்டி, சந்தித்து நலம் விசாரித்தார். இதனால், சந்திரசேகர ராவ், சற்று தெம்பாக இருந்தார்.
ஆனால், கடந்த சில நாட்களாக வரும் தகவல்கள், அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க, முதல்வர் உத்தரவிட்டுஉள்ளதாக தகவல்கள் கசிகின்றன. முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், காங்., அரசு தயாராகி வருகிறது.
இதைக் கேள்விப்பட்டதிலிருந்து, 'இந்த வயதான காலத்தில், அதிலும், இடுப்பு எலும்பு முறிந்துள்ள நிலையில், கோர்ட் படிகளில் ஏறி இறங்க முடியுமா...' என புலம்புகிறார், சந்திரசேகர ராவ்.