Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ கலெக்டரை பாராட்டுவோம்!

கலெக்டரை பாராட்டுவோம்!

கலெக்டரை பாராட்டுவோம்!

கலெக்டரை பாராட்டுவோம்!

PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
ரெ.ஆத்மநாதன், சூரிச், சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தஞ்சை மாவட்ட கலெக்டர்பிரியங்கா பங்கஜம், பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில், பெற்றோர் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த பள்ளி செல்லும் குழந்தைகளின் விபரங்களை சேகரிக்க ஆணையிட்டார்.

அதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் முக்கிய நகரங்களான கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் பள்ளி செல்லும் மாணாக்கர்களிடையே எடுக்கப்பட்ட ஆய்வில், பெற்றோரை இழந்தோர், 594 பேர்; தாயை இழந்தோர், 2,417; தந்தையை இழந்து வாடுவோர், 9,342 என,மொத்தம், 12,353 பேர் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் இடைநிற்றல்இன்றி படிப்பைத் தொடர, உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறார், கலெக்டர்.

தாயை இழந்த பிள்ளைக்கு, தந்தையே தாயுமானார் என்றெல்லாம் கேள்விப்பட்டு உள்ளோம். ஆனால், ரத்த பந்தமே இல்லாத அவலநிலையில் உள்ள பிள்ளைகளுக்கு ஆதரவாக செயல்படும் கலெக்டரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. பிற மாவட்ட கலெக்டர்களும் இவரை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால், தமிழகம் உண்மையில் வளர்ந்த மாநிலமாக உருவெடுக்கும்!



பகல் கனவு காணும் முதல்வர்!


ஆர்.தமிழ்செல்வன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வரும் 2026ல் மட்டுமல்ல, 2031 மற்றும் 2036ல் நடக்கும் சட்டசபை தேர்தல்களிலும்,தி.முக., தான் வெற்றி பெறும். இன்னும் 10 ஆண்டுகளுக்கு திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும்' என்கிறார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., 200 தொகுதிகளில் வெல்லும் என்று ஆருடம் சொல்லிக் கொண்டிருந்தவர், சமீபகாலமாக, 234 தொகுதிகளிலும் வெல்லும் என்று கூறத் துவங்கிஉள்ளார்.

அப்படியெனில், கூட்டணி கட்சிகளுக்கு கருணாநிதி போல் இதயத்தில் இடம் தர துணிந்து விட்டாரா ஸ்டாலின்?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தாமதமாக கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு தொகுதி பிரித்து கொடுக்க மாட்டார். அதற்காக, அவர்களை ஒன்றும் இல்லை என்று கூறி, திருப்பியும் அனுப்ப மாட்டார்.

மாறாக, அண்ணாதுரை எப்படி எம்.ஜி.ஆரை., அவரது இதயத்திற்குள் வைத்து பாதுகாத்து கொண்டாரோ, அதுபோல் கருணாநிதியும், தன் இதயத்தில் இடங்கொடுத்து, பாதுகாப்பாக அவர்களை வைத்துக் கொள்வார்.

இல்லையென்றால், எதிர்முகாமுக்கு சென்று, கழகத்தின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு விடுவரே!

கருணாநிதி பாணியில், 2026 தேர்தலில், 234 தொகுதிகளுக்கும், தி.மு.க., வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து விட்டு, கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் தன் விசாலமான இதயத்தில் இடம் கொடுக்க துணிந்து விட்டார் போலும்... அதனால் தான், 234 தொகுதிகளில் தி.மு.க., வெற்றியடையும் என்று கூறுகிறார்.

தி.மு.க.,வின் கூட்டணி கணக்கு எப்படியோ போகட்டும்... இந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க., செய்த சாதனைகளை கணக்கு போட்டால், தேர்தல் வெற்றி கணக்கு இடிக்கிறதே...

முதல்வர் பகலில் துாங்குவதை குறைத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான், இதுபோன்ற, கனவுகளில் மிதக்க மாட்டார்!



விதிமுறையில் திருத்தம் செய்யுமா ரிசர்வ் வங்கி?


சி.கணபதி, வழக்கறிஞர், ஸ்ரீபெரும்புதுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன் பெறுவதற்கு புதிதாக ஒன்பது விதிகளை அறிவித்துள்ளது. அதில், ஏழு நிபந்தனைகள் காலத்தின் கட்டாயம்; கண்டிப்பாக செயல்படுத்தியே ஆக வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதேநேரம், நகையின் மதிப்பில், 75 சதவீதம் மட்டுமே நகைக் கடன் அளிக்கப்படும்; நகைக்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என்ற விதிகள் மட்டும் அடித்தட்டு மக்களை பாதிக்கும் வகையில் உள்ளன.

பொதுவாக நம் நாட்டில் திருமணத்தின்போது, வரதட்சணையாகவும், விருப்பப்பட்டும் பெண்களுக்கு நகை போடுவது வழக்கம்.

ஏழை, நடுத்தர மக்கள் இந்நகைகளை மொத்தமாக வாங்குவதில்லை. பெண் பிள்ளை பிறந்ததும் ஒரு கிராம், இரண்டு கிராம் என்று சிறுக சிறுக சேர்த்து வைத்து, திருமணத்தின்போது, அதை பெண்ணுக்கு தருகின்றனர். மேல்தட்டு நடுத்தர மக்கள் சிலர் தாயார், பாட்டி, கொள்ளு பாட்டி என, வழிவழியாக வந்த நகைகளையும் சீதனமாக கொடுக்கின்றனர்.

இதுபோன்ற நகைகளுக்கு எப்படி ஆதாரத்தை கொடுக்க முடியும்?

இன்றும் தினக்கூலிகள், சிறு வியாபாரம் செய்வோர் மார்வாடிகளிடம் மாதச்சீட்டு கட்டி அரை சவரன், ஒரு சவரன் என்று நகை வாங்குகின்றனர். இந்நகைகளுக்கு மார்வாடிகள் ரசீது கொடுக்க மாட்டார்கள்.

அப்படியே கொடுத்தாலும் அது ஒரு துண்டுச்சீட்டாக தான் இருக்கும். அதுமாதிரியான ரசீதுகளுக்கு எந்த சட்ட அங்கீகாரமும் இல்லை. மேலும், எவரும்அதை பாதுகாத்தும் வைப்பதில்லை.

அடகு வைக்கப்படும் நகைகள் முறையாக வாங்கப்பட்டதா, சட்ட விரோதமாக வந்ததா என்பதை அறிந்து கொள்ள ரிசர்வ் வங்கி இந்த விதிமுறையை வகுத்திருக்கலாம். அதுபோன்று ஒரு சில சம்பவங்கள் நிகழத்தான் செய்கிறது. அதேநேரம், ஒருசிலர் செய்யும் தவறுக்காக மீதமுள்ள, 99 சதவீத மக்களுக்கு தண்டனை அளிக்கலாமா?

நெல்லுக்கு பாய்ச்சும் தண்ணீர், இடையே முளைத்துள்ள களைகளுக்கும் சேர்ந்தே தான் பாயும். அதை தடுக்க வேறு வழிகளை தான் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, ஏழைகளை தண்டிக்கக் கூடாது.

மாறாக, 'இந்த நகைகள் சட்டவிரோதமாக கிடைத்தது அல்ல' என்றும், பின்னாளில் அது முறைகேடாக வாங்கியது தெரிய வந்தால், 'அந்நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவோம்' என்று கூறி உறுதிமொழி வாங்கிக் கொண்டு அடகு பெறலாம்.

இந்த இரு விதிகளையும் தளர்த்தாவிட்டால், மீண்டும் மக்கள் அடகு கடைகளிலும், கந்து வட்டி கும்பலிடமும் சிக்கி, தங்களின் வாழ்வாதார சேமிப்புகளை இழக்கும் நிலை வரும்.

மத்திய நிதி அமைச்சரும், ரிசர்வ் வங்கியும் யோசிக்குமா?







      Our Apps Available On




      Dinamalar

      Follow us